வளையல் அணியும் மீனாட்சி அம்மன்


வளையல் அணியும் மீனாட்சி அம்மன்
x
தினத்தந்தி 29 Dec 2017 12:45 AM GMT (Updated: 28 Dec 2017 5:53 AM GMT)

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள டி.வி.எஸ். நகரில் உள்ளது இந்த சிவா விஷ்ணு ஆலயம்.

திருச்சி அருகே உள்ள டி.வி.எஸ் நகரில் உள்ளது, சிவா– விஷ்ணு ஆலயம். ஆலய முகப்பு சாலையிலேயே உள்ளது. அழகான வளைவுடன் கூடிய முகப்பைத் தாண்டியதும், பரந்து விரிந்த ஆலய வளாகம் காணப்படுகிறது. ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு

வளாகத்தில் வலது புறம் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி இருக்கிறது. இங்கு நவக்கிரக நாயகர்கள் அனைவரும், தங்கள் துணைவியருடன் அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும். இடதுபுறம் ஆஞ்சநேயர் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் மூன்று சன்னிதிகள் கருவறையுடன் கூடியதாக உள்ளது. முதல் சன்னிதியில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஐந்து முகங்களுடன் அருள்பாலிக்கும் இந்த விநாயகரை வழிபட்டால், கல்வி, ஞானம், செல்வம், ஆரோக்கியம், நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

அடுத்து நடுநாயகமாய் சுந்தரேஸ்வரர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் இந்த இறைவனின் திருமேனி சுயம்பு என்றும், இன்ன பொருளால் உருவானது என்று சொல்ல இயலாது என்றும் கூறும் நிர்வாகத்தினர், ‘இறைவனின் திருமேனியைத் தொடும்போது ஜீரோ டிகிரிக்கும் கீழ்பட்ட ஜில்லென்ற ஓர் உணர்வு உண்டாவதை தவிர்க்க இயலாது’ என்கின்றனர்.

அடுத்துள்ள சன்னிதியில் முருகப்பெருமான், வள்ளி– தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இந்த மூன்று சன்னிதிகள் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளன. பஞ்சமுக விநாயகரின் கருவறை முகப்பில் சரஸ்வதியும், சுந்தரேஸ்வரர் சன்னிதி முகப்பில் ஆதி விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரரும், முருகப்பெருமான் சன்னிதி முகப்பில் ஐஸ்வரிய லட்சுமியும் வீற்றிருக்கின்றனர்.

மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி மீனாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற திருக்கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப நுழைவுவாசலில் வலதுபுறம் கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

மகா விஷ்ணு ஆலயம்

அடுத்து மகா விஷ்ணுவின் தனி ஆலயம் உள்ளது. மூலவராய் மகாவிஷ்ணு நின்ற திருக்கோலத்தில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்க மகாமண்டபத்தின் தென்புறம் மகாலட்சுமி வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

பெருமாளின் தேவக்கோட்டத்தில் லட்சுமிநரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஏகாதசி திருவிழாவும் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பெருமாள் சன்னிதியின் முன்புறம் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. 

இந்த ஆலயத்தில் பிரதோ‌ஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இறைவன், இறைவி ஆலயத்தைச் சுற்றி வலம் வருவது வழக்கம்.

சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் வெகு அமர்க்களமாக நடைபெறுகிறது. சிவராத்திரி, பொங்கல், தீபாவளி, மாதப்பிறப்பு நாட்களில் இறைவன்– இறைவிக்கு விசே‌ஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சரஸ்வதி பூஜையின் போது, கொலு அலங்காரம் மிக சிறப்பாக நடைபெறுவதுடன் ஏராளமான பேர் அதைக் கண்டு தரிசிக்க வருவதுண்டு. மார்கழி மாதம் இறைவன்–இறைவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கும்,  சங்கடகார சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது சிறப்பு.

தைப்பூசத்தின் போது முருகப் பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வர சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சுமார் 100–க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து வருவர். அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். மகா சிவராத்திரியின் போது நடைபெறும் நான்கு கால பூஜையில் மூன்றாவது கால பூஜை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜை நடந்தவுடன் பக்தர்களுக்கு பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை என அன்னதானம் வழங்கப்படுகிறது.

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை ஏராளமான பெண்கள் சூழ நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று இறைவி மீனாட்சிக்கு பல ஆயிரம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம் நடைபெறும். அன்னையை தரிசிக்க வரும் பெண்களுக்கு அந்த வளையலையே பிரசாதமாக தருகின்றனர்.

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் குத்துவிளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர்.  

இந்த ஆலயத்தை அடுத்து விழா மண்டபம் உள்ளது.  திருமணம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி போன்ற மங்கள விழாக்கள் இந்த மண்டபத்தில் நடைபெறுகின்றன. பெயரளவுக்கு மிக்குறைந்த கட்டணமே இதற்கு பெற்றுக்கொள்கின்றனர்.

ஆலய வளாகத்தின் வலதுபுறம் நாகம்மா சன்னிதி உள்ளது. இங்கு ராகு கால பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

சாய் பாபாவுக்கான தனிக்கோவிலும் இங்கு உள்ளது. தினசரி நான்கு தடவை ஆரத்தி எடுப்பதுடன் வரும் பக்தர்களுக்கு விதம் விதமாய் பிரசாதம் தருகின்றனர். வியாழக்கிழமை நடைபெறும் அன்னதானத்தில் 200 பேர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் கைகூடும் என பக்தர்கள் உறுதியாகக் நம்புவது உண்மையே.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல்  10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள டி.வி.எஸ். நகரில் உள்ளது இந்த சிவா விஷ்ணு ஆலயம். சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. 

–ஜெயவண்ணன்.

அருள் தரும் ஆஞ்சநேயர்

இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய ஒரு புதுமையான முறை கடைப்பிடிக்கப்படுகிறது.  

ஆஞ்சநேயரிடம் வேண்டுவோர் முழு  மட்டையுடன் கூடிய தேங்காயுடன், தங்களது வேண்டுகோளையும் ஒரு சீட்டில் எழுதி ஒரு சிவப்பு நிற துணியில் அதைக் கட்டி, ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பின்னர் அந்த செந்நிற துணி முடிப்பை, சன்னிதியின் இடதுபுறம் உள்ள அதற்கான விட்டத்தில் கட்டுகின்றனர். 90 நாட்களில் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம். பின் அவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி அர்ச்சனை செய்து மகிழ்வோடு இல்லம் திரும்புகின்றனர். 

அனுமன் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.  அன்று ஆஞ்சநேயரை வெண்ணெயால் அலங்காரம் செய்து, 1008 வடை மாலை, 1008 ஜாங்கிரி மாலை சாத்துகின்றனர். இந்தக் காட்சியை தரிசிக்கும் நம் மேனி சிலிர்ப்பது நிஜமே.

Next Story