இஸ்லாம் : இல்லறம் நல்லறமாக


இஸ்லாம் :  இல்லறம் நல்லறமாக
x
தினத்தந்தி 2 Jan 2018 6:27 AM GMT (Updated: 2 Jan 2018 6:27 AM GMT)

‘மனைவிக் குச் சிறந்தவனே மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்குச் சிறந்தவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

- டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்

நமக்குத் தூரமானவர்களிடம் இருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும் குறைகளையும் தெளிவாக அறிந்தவர்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும்.

நபிகள் நாயகம் அவர்கள் தனது 25-வது வயதில் தன்னை விட 15 வயது மூத்த கதீஜா என்ற பெண்மணியை மணந்து அப்பெண் இறக்கும் வரை, 25 ஆண்டு காலம் இனிமையான இல்லற வாழ்க்கை நடத்தினார்கள். கதீஜா இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரின் நினைவாகவே இருந்தார்கள். கதீஜாவுக்குப் பிறகு நபிகளார் ஆயிஷா என்ற பெண்ணை மண முடித்தார்கள். ஆயிஷாவிடத்திலும், தனது பழைய மனைவியைப் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆயிஷா, “எப்போதோ இறந்து விட்ட, பல் விழுந்த அந்தக் கிழவியை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே, இறைவன் உங்களுக்கு அவரை விட சிறந்த மனைவியை தரவில்லையா?” என்று கேட்டார். இதனைக் கேட்ட நபிகள் நாயகத்தின் முகம் கவலையில் ஆழ்ந்தது. “இறைவன் அவரை விட சிறந்த மனைவியை எனக்குத் தரவில்லை. நான் போதித்த மார்க்கத்தை மக்கள் ஏற்க மறுத்தபோது அவள் ஏற்றுக் கொண்டாள். மற்றவர்கள் என்னைப் பொய்யன் என்று சொன்னபோது, அவள் என்னை நம்பினாள். மக்கள் எனக்கு ஆதரவு தர மறுத்தபோது, அவள் தனது செல்வத்தினால் ஆதரவு கரம் நீட்டினாள். இறைவன் அவள் மூலமாகவே எனக்குக் குழந்தைகளையும் தந்தான். இறைவன் மீது ஆணையாக அவளைப் புகழ்வதைத் தவிர வேறெதனையும் நான் கூற மாட்டேன்” என்றார்கள். நபிகளார் முன் கதீஜாவின் பெயர் கூறப்பட்டால் உடனே மனைவியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவார். அதில் சோர்வடைய மாட்டார். அவருக்காக பிரார்த்தனையும் புரிவார்.

கதீஜா மரணமடைந்து 14 வருடங்களுக்குப் பிறகு நபிகளார், மக்காவை வெற்றி கொண்டார்கள். வெற்றி வீரராக மக்காவிற்குள் நுழைகிறார்கள். மக்காவில் தங்குவதற்கு அவர்களுக்கு தற்போது வீடில்லை. எதிரிகள் அவரது வீட்டை எடுத்துக் கொண்டார்கள். அதனால் இப்போது நபிகளாருக்கு ஒரு கூடாரம் தான் அமைக்க வேண்டும். “இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தங்குவதற்கு எங்கு கூடாரம் அமைக்க வேண்டும்?” என்று தோழர்கள் கேட்டனர். “கதீஜாவின் மண்ணறைக்குப் பக்கத்தில் எனக்குக் கூடாரம் அமையுங்கள். எனது கவலைகளில் அவர் பங்கு கொண்டதைப் போன்று எனது மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளட்டும்” என்றார்கள்.

இறந்த பின்பும் தம் மனைவி மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், மனைவி உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்?

“ஒரு இறைநம்பிக்கையாளன் இறை நம்பிக்கை கொண்ட தன் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவளுடைய இன்னொரு குணம் அவனுக்குப் பிடிக்கலாம்” என்று நபிகளார் கூறினார்கள். இனிக்கும் இல்லறத்திற்கு இதைவிட சிறந்த அறிவுரை தேவையில்லை. மனைவி அழகு குறைந்தவளாக இருக்கலாம்; ஆனால் பண்பில் சிறந்தவளாகத் திகழலாம். மனைவி அறிவில் குறைந்தவளாக இருக்கலாம்.; ஆனால் அன்பு செலுத்துவதில் சிறந்தவளாகத் திகழலாம். இவ்வாறு ஒரு குறையை இன்னொரு நிறை சமப்படுத்தும். உலகில் எல்லாச் சிறப்புகளும் ஒருசேர அமையப் பெற்ற மனிதர் என்று ஒருவரும் கிடையாது. குறைகளும், நிறைகளும் அனைவரிடமும் உண்டு. இதைப் புரிந்து கொண்டால் இல்லறம் நல்லறமாகும்.

நபிகள் நாயகம் அரேபியாவின் அதிபதி; ஆன்மிகத் தலைவர்; படைத் தளபதி; நீதிபதி; மதபோதகர் எனப் பல பொறுப்புகளை வகித்தபோதும், வீட்டு வேலைகளில் தம் மனைவியருக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளில் பங்கேற்பார்; துணிமணிகளைத் தைப்பார்; பால் கறப்பார்; அவரே மனைவியருக்கு அதனை வழங்குவார்; துணிகளைக் கழுவுவார்; காலணிகளை செப்பனிடுவார். நபிகளார் வீட்டில் என்ன செய்வார் என்று அவர் மனைவி ஆயிஷாவிடம் கேட்டபோது, “வீட்டு வேலைகளில் மனைவியருக்கு உதவுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்; தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் உடனே புறப்பட்டு விடுவார்” என்று கூறினார். (நூல்: புகாரி)

இன்று பெண்களும் வேலைக்குச் செல்கின்ற சூழ்நிலையில் ஆண்கள், பெண்களுக்குத் துணை புரிந்தால் மனைவியின் சுமை குறைவதோடு, மண வாழ்க்கையும் இனிக்கும்.

இல்லறம் நல்லறமாக அமைய நபிகள் நாயகம் எவ்வாறு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைப் பார்த்தோம். அதோடு இல்லறம் இனிக்க நபிகளார் கூறிய வழிகாட்டுதல்களையும் காண்போம்.

*  ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை. (நூல்: இப்னுமாஜா)

*  ஒரு பெண், அவளது செல்வம், அழகு, குடும்பம், மார்க்கப் பற்று (ஒழுக்கம்) என நான்கு விஷயங்களுக்காக மண முடிக்கப்படுகிறாள். எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக. (நூல்: புகாரி, முஸ்லிம்)

*  எந்த ஆணின் மார்க்கப் பற்றையும் நற்பண்பையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ, அத்தகைய மனிதர் திருமண உறவு கேட்டு வந்தால் அவருக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக்கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிடில் குழப்பமும் கேடும் விளையும். (நூல்: திர்மிதி)

*  மனைவியின் வாயில் ஒரு கவளம் சோறு ஊட்டுவதும் ஒரு அறமே. (நூல்: புகாரி)

*  கணவன் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள், கணவனுக்குக் கீழ்படிந்து நடப்பவள், தன் விஷயத்திலும், பொருளைச் செலவிடும் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை மேற்கொள்ளாதவள் ஆகிய இப்பண்புகளை உடையவளே சிறந்த மனைவியாவாள். (நூல்: நஸாயி)

Next Story