அனைவரிடமும் இயங்கி வரும் ஏழாம் அறிவு


அனைவரிடமும் இயங்கி வரும் ஏழாம் அறிவு
x
தினத்தந்தி 23 Jan 2018 7:26 AM GMT (Updated: 23 Jan 2018 7:26 AM GMT)

அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

னைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது.

ஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

ஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது.

நமது புராணங்களில் இ.எஸ்.பி. பற்றிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. மகாபாரதத்தில், குருசேத்திர யுத்த காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு போர்க்களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரமாக தெரிவித்த செய்தி அனைவரும் அறிந்ததே. அந்த முறை தமிழில் ‘தூர தரிசனம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘கிளேயர்வாயன்ஸ்’ என்றும் சொல்லப்படுகிறது.

‘நாஸ்ட்ரடாமஸ்’ என்ற மேலை நாட்டு ஜோதிட அறிஞர் அவரது தீர்க்க தரிசன நூலில் குறிப்பிட்ட எதிர்கால சம்பவங்களை அவர் ‘பிரி-காக்னிஷன்’ என்ற முறைப்படி அறிந்து கொண்டார் என்றும் தகவல்கள் உள்ளன. எதிர்கால நிகழ்ச்சிகளை முன்னரே அறிந்து கொள்ள இயல்வது ‘பிரி-காக்னிஷன்’ என்றும், நடந்து முடிந்த சம்பவங்களை உணர்வதற்கு ‘ரெட்ரோ-காக்னிஷன்’ என்றும் பெயர்.

ஒரு முறை பகவான் ரமண மகரிஷியை சந்திக்க, கேரளாவைச் சேர்ந்த நாராயணகுரு வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். ஆனால், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நீண்ட நேரமாக அமர்ந்திருந்தனர். ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. சுற்றி இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக, ‘அங்ஙனே ஆவட்டே..’ என்று கூறி நாராயண குரு விடை பெற்றபோது, ரமணர் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தார். அவர்கள் இருவரும் தங்கள் எண்ணங்களை ஆன்மிக ரீதியாக வார்த்தைகள் இல்லாமல் ‘டெலிபதி’ முறையில் பரிமாறிக்கொண்டார்கள் என்பதை பிறகுதான் மற்றவர்கள் அறிந்துகொண்டார்கள்.

ஆதிசங்கரர் சன்னியாசம் ஏற்கப்போவதை அறிந்த அவரது அன்னை ஆரியாம்பாள், தனது அந்திம காலத்தில் சங்கரர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். ஆதிசங்கரர் அதை ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகள் கழித்து ஆரியாம்பாள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் மகன் சங்கரரை மனதில் நினைத்தார். உடனடியாக பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த ஆதிசங்கரர் அன்னையின் அந்திம காலம் பற்றி அறிந்து அருகில் இருப்பதற்காக உடனடியாக விரைந்து வந்ததை அவரது வரலாறு குறிப்பிடுகிறது. மேலும், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என்று பல ஆன்மிக சான்றோர்கள் வாழ்வில் நிகழ்ந்த நிறைய சம்பவங்களை பலரும் அறிவார்கள்.

“காதுகளில் ‘ஹெட்செட்’ பொருத்திக்கொண்டு பாட்டு கேட்பதுபோல, இரண்டு நபர்களின் மூளைகளுக்கும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இயலும். அதாவது ஒருவரது மூளை செல்களான நியூரான்கள் அவரது எண்ணங்களை இன்னொருவரின் மூளையில் உள்ள நியூரான்களுக்கு அனுப்புவது எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். இன்றைய தொழில்நுட்ப ரீதியாக ஒருவரது மூளையை நாம் படிக்க முடியும்” என்கிறார் பிரிட்டனில் உள்ள வார்விக்ஷையர்் பல்கலைக்கழக பயோமெடிக்கல் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஜேம்ஸ்.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு மூளையின் ‘மோட்டார் கார்டெக்ஸ்’ பகுதி வழியாக இரு நபர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யும் சோதனையை செய்துள்ளனர். அதாவது, வெவ்வேறு அறைகளில் உள்ள இருவரது தலைப்பகுதியில் ‘எலக்ட்ரோடு’ பொருத்தப்பட்டு, இணையதளம் மூலம் அவர்களில் ஒருவர் தலையிலிருந்து சிக்னல்கள் இன்னொருவரின் தலைக்கு சென்று சேருமாறு செய்யப்பட்டது. அதன் மூலம் ஒரு ‘மோட்டார் கார்டெக்ஸ்’ அனுப்பும் செய்தியை இன்னொரு ‘மோட்டார் கார்டெக்ஸ்’ வார்த்தைகளாக ‘டீ-கோடிங்’ முறையில் புரிந்து கொள்வதாக அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்கள். 

Next Story