ஆன்மிகம்

பார் போற்றும் பேரூர் புராணம் : பிரம்மனின் நித்திரை! + "||" + The great Perur Puranam : Brahman's sleep!

பார் போற்றும் பேரூர் புராணம் : பிரம்மனின் நித்திரை!

பார் போற்றும் பேரூர் புராணம் :  பிரம்மனின் நித்திரை!
சத்தியலோகத்தில் இருந்த சிருஷ்டி கர்த்தாவான நான்முகன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். கலைவாணியின் வீணையில் இருந்து பிறந்த சங்கீதத்தில், ஆதி பரம்பொருளின் திருநாமம் இருப்பதை எண்ணி மகிழ்ந்த பிரம்மன், திடீரென்று நித்திரையில் ஆழ்ந்தார். இதனால் படைக்கும் தொழிலை மறந்து இருந்தார்.
இதற்கிடையில் ஏற்கனவே படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும், சாஸ்திரப்படி மகாவிஷ்ணுவால் காக்கப்பட்டு, ருத்ரனால் அழிக்கப்பட்டு வந்தன. ஆனால் மேற்கொண்டு உயிர்களை பிரம்மன் படைக்காததால், இப்பூவுலகம் உயிர்கள் இன்றி வெறுமையாக காட்சியளித்தன.


இதை அறிந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் ஒன்று திரண்டு சத்தியலோகத்திற்கு வந்தனர். ‘பிரம்மதேவரே..!’ என்று உரக்க சத்தமிட்டனர். சத்தம் கேட்டு தான் வாசிக்கும் வீணையை நிறுத்திய கலைவாணியும், தனது கணவரான பிரம்மனிடம், ‘சுவாமி! தேவாதி தேவர்கள் எல்லாம் தங்களை தேடி வந்து இருக்கிறார்கள். எழுந்திருங்கள்’ என்றாள்.

பிரம்மனிடம் அசைவே இல்லை.. உடனே கலைவாணி, ‘தேவர்களே.. நீங்கள் என்ன நோக்கத்திற்காக வந்து உள்ளீர்கள் என்பதை யாம் அறிவோம். பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் உள்ளார். அவர் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார் என்று தெரிகிறது. உங்கள் நோக்கம் நிறைவேற மகாவிஷ்ணுவை சென்று பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்’ என்றாள்..

கலைவாணியிடம் விடைபெற்ற தேவர்கள், வைகுண்டம் சென்று, நாராயணரை வணங்கி நின்றனர்.

தேவர்களை கண்ட மகாவிஷ்ணு, ‘தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வைகுண்டம் வந்துள்ளீர்களே.. ஏதாவது விசேஷமா?’ என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டார்.

‘இறைவா.. தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. பிரம்ம தேவர் கண் அயர்ந்து விட்டதால், படைக்கும் தொழில் நின்று விட்டது. ஆகையால் பூவுலகில் மாற்றங்கள் ஏற்படும் முன், தாங்கள் தான் அதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்று தேவர்கள் வேண்டினர்.

‘கவலைப்படாதீர்கள்.. உங்கள் சுமையை என்னிடம் இறக்கி வைத்து விட்டீர்களல்லவா? இனி நான் பார்த்து கொள்கிறேன். போய் வாருங்கள்’ என்றார் மகாவிஷ்ணு.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் விடைபெற்று தேவலோகம் சென்றனர்.

அவர்கள் சென்றதும், காமதேனுவை அழைத்தார் மகாவிஷ்ணு.

வைகுண்டம் வந்த காமதேனுவிடம், ‘இப்பூவுலக உயிர்களுக்கு எல்லாம் தன் ரத்தத்தை பாலாக சொறிந்து, ஒரு தாய் போல் பராமரிக்கும் காமதேனுவே! பிரம்மன் நித்திரையில் ஆழ்ந்து விட்டார். அவர் கைவிட்ட படைக்கும் தொழிலை இனி நீதான் செய்ய வேண்டும். அதற்கு சிவன் அருள் வேண்டும். ஆதலால் இப்போதே பூலோகம் சென்று தவம் இரு. சிவன் அருள்பெற்று படைக்கும் தொழிலை மேற்கொள்வாயாக’ என்றார்.

‘பரம்பொருளே! தாங்கள் எவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து உள்ளீர்கள். நான் இதற்கு தகுதி உடையவள் தானா?’ என்று கேட்ட காமதேனுவிடம், ‘உன்னை தவிர வேறு யாருக்கும் பிரம்மன் விட்டு சென்ற படைக்கும் தொழிலை செய்ய தகுதி கிடையாது. ஆதலால் தான் யாம் உன்னை தேர்வு செய்தோம்’ என்றார் மகாவிஷ்ணு.

இதையடுத்து விஷ்ணுவின் ஆசியோடு, பூலோகம் வந்த காமதேனு, கயிலாயம் என்று அழைக்கப்படும் இமயமலையில் ஈசனை நினைத்து தவம் இருக்கத் தொடங்கியது.

ஆண்டுகள் உருண்டோடின. ஆயிரம் ஆண்டுகள் கடந்த போதிலும், தன் தவம் கைகூடாததை அறிந்த காமதேனு வேதனை அடைந்தது.

இந்த நிலையில் ஒரு முறை அந்த வழியாக நாரத முனிவர் வந்தார். அவரைச் சந்தித்த காமதேனு, ‘நாரத முனிவரே! பாற்கடல் நாயகன் என்னை அழைத்து, பிரம்மதேவர் நித்திரையில் ஆழ்ந்து விட்டதால் படைக்கும் ஆற்றலை பரமனிடம் வரமாக பெற்று வா! என்று என்னை அனுப்பி வைத்தார். நானும் ஆயிரம் ஆண்டுகள் இந்த இமயமலையில் பரமனை நினைத்து தவம் இருந்து விட்டேன். ஆனால் பலன் தான் கிடைக்கவில்லை. என் தவத்தில் ஏதேனும் குறை இருக்கிறதா?’ என்று கேட்டது.

‘காமதேனுவே.. உன் தவத்தில் பிழை எதுவும் இல்லை. ஆனால் நீ தவம் செய்ய தேர்வு செய்திருக்கும் இடம்தான் சரியானதல்ல.. தட்சிண கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு கீழ் காட்சி தரும், அரசம்பலவாணரை வேண்டி தவம் இரு. உன் தவம் பலன் தரும்’ என்றார் நாரதர்.

இதையடுத்து தட்சிண கயிலாயம் நோக்கி புறப்பட்டது காமதேனு. அங்கு அரசம்பலவாணர் இருக்கும் இடத்தை, தன் தவ வலிமையால் கண்டு உணர்ந்து, தினமும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.

காமதேனு இறைவனின் அருள் கிடைத்து விடாதா என்று ஏக்கத்துடன் தவம் இருக்க, அதன் கன்றோ, கிடைத்த இடத்தில் புற்களை சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை காமதேனுவின் கன்று, ஒரு புதரில் வளர்ந்து இருந்த புற்களை சாப்பிட்டது. பின்னர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அப்போது அதன் கால்கள் புற்றுக்குள் சிக்கிக் கொண்டது.

இதனால் வலியில் ‘ம்மா...’ என்று கத்தியது. புற்று இடுக்கில் இருந்து தன்னை விடுவிக்க கொம்பால் அதை முட்டியது. சிறிது நேரத்தில் புற்றில் இருந்து இளங்கன்று வெளியே வந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த காமதேனு, புற்றில் இருந்து ரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு அதிசயித்து நின்றது.

அப்போது இடப வாகனத்தில் உமாதேவியுடன் சிவபெருமான் தோன்றினார். அவரைக் கண்ட காமதேனு, ‘இறைவா.. எனது குழந்தை செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்றது.

அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த சிவபெருமான், ‘காமதேனுவே.. உன் தவத்தை யாம் மெச்சினோம். உன் இளங்கன்றின் செயலை குற்றமாக யாம் கருதவில்லை. ஆதலால் எம் திருமுடியில் குளம்பு சுவடும், கொம்பு சுவடும் கொண்டு அருளினோம். காமதேனுவாகிய நீ வழிபட்டதால் இந்த ஊர் காமதேனுபுரி, பட்டிபுரி என பெயர் பெறும். எமக்கு பட்டிநாதர் என்ற பெயரும் வழங்கப்படும். இது முக்தி தலம் என்பதால், இங்கு உமக்கு யாம் படைக்கும் ஆற்றலைத் தர முடியாது. திருக்கருவூர் வந்து வழிபடு. அங்கு நீ படைக்கும் ஆற்றலைப் பெறுவாய்’ என்று அருளி மறைந்தார்.

அதைத் தொடர்ந்து தனது கன்றுடன் காமதேனு, படைக்கும் ஆற்றலை பெற திருக்கருவூருக்கு புறப்பட்டுச் சென்றது.

காமதேனுவுக்கு சுயம்புவாய் தோன்றி அருள்பாலித்த அந்த சிவன் தான், நமக்கு இந்த திருத்தலத்தில் பட்டீசுவரர் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். பசுவின் இளங்கன்று தனது குளம்பால் மிதித்ததும், கொம்பால் முட்டி தள்ளிய தடத்தையும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்கலாம்.

- குருவன்கோட்டை ஸ்ரீமன்

அடுத்த வாரம்: பட்டீசுவரரை தரிசிக்க வந்த திருமால்