பொன் நாய் உணவு உண்ட அதிசயம்


பொன் நாய் உணவு உண்ட அதிசயம்
x
தினத்தந்தி 30 Jan 2018 6:33 AM GMT (Updated: 30 Jan 2018 6:33 AM GMT)

திருநெல்வேலி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது திருவருண்மலை. இந்த ஊரின் பெயர் மாறி தற்போது பொன்னாக்குடி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் ஆலயம்.

திருவருண்மலை என்ற இந்த ஊரில் முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் மடம் ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தார். அவர் சற்று வித்தியாசமானவர். தினமும் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஊரில் உள்ள வீடு, வீடாக சென்று ‘‘உஞ்சவிருத்தி" (யாசகம்) செய்து அதன் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு தானியங்களை கொண்டு வந்து உணவு சமைப்பார். சமைத்த உணவை ஊரில் உள்ள குளக்கரை மீதமர்ந்த விநாயகர் முன்பு படைத்து, நைவேத்தியம் செய்து, பின்னர் தான் வளர்க்கும் நாய்க்கும் கொடுத்து கோவில் மணியை அடிப்பார். அந்த ஒலி கேட்டு அவ்வூர் சிவாலய மணி அடிக்கப்படும். அதன் பின்னரே அவ்வூர் மக்கள் உணவு உண்பார்கள். அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாட்டிற்கும் ஒருநாள் பங்கம் வந்தது.

வழக்கம்போல் பிடி அரிசி பெற்று வந்து உணவு சமைத்து, விநாயகருக்கு படைத்த பின்னர் நாயை தேடினார் முனிவர். ஆனால் நாயைக் காணவில்லை.

தென்பாண்டிய நாட்டை அப்போது ஆண்டு வந்த சுந்தரபாண்டியன் என்ற மன்னன், புதரின் மறைவில் இருந்த நாயை, ஏதோ ஒரு கொடிய மிருகம் என்று தவறாக கருதி அம்பெய்து கொன்று விட்டான். நாயை தேடிச்சென்ற மக்கள் இந்தக் காட்சியை கண்டனர்.

மன்னனை அழைத்துக் கொண்டும், இறந்த நாயைத் தூக்கிக்கொண்டும் முனிவரிடம் வந்தனர். முனிவர் கோபமாக மன்னனிடம், ‘அநியாயமாக இந்த நாயை கொன்று உயிர்வதை செய்ததுடன், ஊர் மக்களையும் பட்டினி போட்டு விட் டாயே! ’ என்றார்.

அதைக்கேட்ட மன்னன், ‘அறியாமல் செய்த இப்பிழையை பொறுத்து, அதில் இருந்து மீள தகுந்த பிராயச்சித்தம், பரிகாரம் சொல்லுங்கள்’ என்று மன்றாடினான்.

அதற்கு முனிவர், ‘பொன்னால்(தங்கத்தால்) ஒரு நாய் செய்து இங்கு வை. அந்த நாய் உணவு அருந்தினால் நீ செய்த பாவம் நிவர்த்தியாகும்’ என்றார்.

மன்னனும் அதை சிரமேற்கொண்டு பொன்னால் நாய் செய்து அங்கு கொண்டு வைத்தான். முனிவர் இறைவனிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்த பொன் நாய் உயிர் பெற்று, வாலை ஆட்டிக்கொண்டு உணவை உட்கொண்டது. அதைப்பார்த்து மக்களும், மன்னனும் அதிசயித்தனர், மகிழ்ந்தனர்.

உணவு அருந்தியதும் அந்த நாயானது அனைவரும் ‘‘தோ, தோ" என்று கூப்பிட்டும் பாராமல் நாங்குநேரி சென்றது. ‘வானுமாமலை’ பெருமாள் கோவில் திருக்குளத்தை அடைந்து, அக்குளத்தில் விழுந்து எழுந்து ஒரு மன்னனாக உருமாறி மேலுலகம் சென்றது. இது ஒரு கர்ண பரம்பரை கதையானாலும், நாயானது அந்த ஊரில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி சென்று குளத்தில் சாபவிமோசனம் அடைந்ததை ஜீயர் மடம் வெளியிட்டு உள்ள தோத்தாத்ரி நாதர் மகாத்மியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

அன்றில் இருந்து ‘திருவருண்மலை' என்ற இவ்வூருக்கு ‘பொன்நாய்க்குடி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘பொன்னாக்குடி’ என்றாகியது.

அன்று மதுரையம்பதியிலே கல் யானை கரும்பு உண்டது அல்லவா? அதுபோல் இங்கு பொன் நாய் உணவு உண்டது. இங்குள்ள குளம் சுந்தரபாண்டியன் குளம் என்றும், அக்குளக் கரையில் உள்ள விநாயகர் சுந்தரபாண்டிய விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த பொன்னாக்குடியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருப்பெயர் அருணாசலேஸ்வரர், இறைவி உண்ணா முலையம்மை. ஈசன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இனி இக்கோவிலின் அமைப்பை பார்ப்போம்.

வெளிப்பிரகாரம், அதில் கொடி மரம், அடுத்து பலிபீடம். கிழக்கு வாயிலின் நுழைவு வாயிலில் வலதுபுறம் வள்ளி, சுப்பிரமணியர், தெய்வானை ஆகியோரின் மிகப்பெரிய சிலையும், இடதுபுறம் விநாயகர், நாகர்களும் உள்ளன. கொடிமரம், பலிபீடத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் எதிரில் பெரிய பிரதோஷ நந்தி அமைந்துள்ளது. இடது புறம் சூரியன், அதிகார நந்தி, வலதுபுறம் சந்திரன்.

அதைத்தாண்டி உள் பிரகாரத்தில் நுழைந்தால் தென்வரிசையில் வடக்கு நோக்கி ஜூரதேவர், 63 நாயன்மார்கள், சமயக்குரவர் நால்வர், வராகி, சாமுண்டி, வைஷ்ணவி, சரஸ்வதி தேவியர். கன்னி மூலையில் கணபதி. தென்புறம் நோக்கி தட்சிணாமூர்த்தி. உள்பிரகாரம் வடவரிசையில் வள்ளிவேசேனா சமேத சுப்பிரமணியர். அவர்களை வணங்கி சென்றால் அடுத்து சனீஸ்வரர். அவர் எதிரில் சிவலிங்க கரு வறையை நோக்கி சண்டிகேஸ்வரர். அவரை வணங்கி விட்டு சென்றால் ஈசானிய மூலையில் தென்புறம் பைரவர் உள்ளார்.

இவர்களை தரிசித்து நந்தியெம்பெருமானிடம் வந்து அவர் பின்புறம் நின்று எதிரில் நோக்கினால் மூலஸ்தான கருவறையை அடைத்துக்கொண்டு மிகப்பெரிய லிங்க உருவில் அருணாசலேஸ்வரர். அவரைத்தொழுது கொண்டே படியேறினால் உண்ணாமுலையம்மாள் வலது கையில் பூச்செண்டும், இடது கையை தொங்க விட்டு மடிமீது கை வைத்துக்கொண்டும் அருள்பாலிக்கிறார். கோவிலில் நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னிதி கிடையாது. அதேபோல் கோவிலுக்கென்று ராஜகோபுரம் இல்லை. ஆனால் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு தனித்தனி விமானங்கள் உண்டு.

இவ்வூரில் வாழ்ந்த முனிவரையும், அவரது நாயையும் கருத்தில் கொண்டால் இது ஒரு பைரவ ஸ்தலம். அதனால் பைரவருக்கு அவ்வப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அஷ்டமி தோறும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

-நெல்லை வேலவன்

Next Story