கோவிலின் கோபுர நிழல் தலைகீழாக தோன்றும் அதிசயம்


கோவிலின் கோபுர நிழல் தலைகீழாக தோன்றும் அதிசயம்
x
தினத்தந்தி 7 Feb 2018 7:31 AM GMT (Updated: 7 Feb 2018 7:31 AM GMT)

விருபாட்சர் கோவில் கோபுர நிழல் ரங்க மண்டபத்தின் சுவரில் தலைகீழாக விழும் அதிசயம் காண்பவரை ஆச்சரியப் படுத்தி வருகிறது.

ன்மிக பூமியான இந்தியாவில் பல்வேறு அதிசயங்கள் கொண்ட பல கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவற்றின் பிரமாண்ட வடிவங்கள் மற்றும் நுணுக்கமான கலையம்சங்கள் மற்றும் புதிரான கட்டுமான முறைகள் போன்றவை உலகப்புகழ் பெற்றவையாக உள்ளன. பூகோள அமைப்பு, பூமியின் சுற்று வட்டப்பாதை, சூரியன் மற்றும் சந்திரன் போன்றவற்றின் நிலைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பல்வேறு காலகட்ட மன்னர்களால் கோவில்கள் கலாசார மையங்களாக கட்டமைக்கப்பட்டன. அவற்றில் அற்புதமான கலையம்சங்கள் கொண்ட ஏராளமான கோவில்கள் பிற்கால படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டாலும், பல கோவில்கள் பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கம்பீரமாக காட்சிதருகின்றன.

அந்த வகையில் கர்நாடகம், பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி என்ற பகுதியில் உள்ள விருபாட்சர் (மூன்று கண்களை கொண்டவர் என்று அர்த்தம்) கோவில் குறிப்பிடத்தக்கது. ஒரு சமயம் அந்த தலத்தில் அன்னை பார்வதி, பம்பாதேவி என்ற பெயரில் பூமியில் பிறந்து, தவம் இயற்றி சிவபெருமானை கணவனாக அடைந்தாள். பம்பாதேவியை மணந்த சிவனுக்கு ‘பம்ப பதி’ என்ற பெயரும், அவர் கோவில் கொண்டதால் இந்த தலம் ‘பம்ப ஷேத்திரம்’ என்றும் வழங்கப்பட்டு, காலப்போக்கில் அது ‘ஹம்பியாக’ மாறிவிட்டது என்று குறிப்பிடப்படுகிறது.

1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், தென்னிந்திய கட்டிடக்கலை திறமைக்கு சிறந்த சான்றாக உள்ளது. ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோவில் பல அதிசயங்களையும் கொண்டுள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள ஒரு மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது. இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்திரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து, வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது.

பெங்களூருவிலிருந்து 350 கி.மீ. தொலைவில் துங்கபத்திரா ஆற்றங்கரையில் உள்ள இந்த கோவில் ஹொய்சால வம்சத்தினரால் கட்டமைக்கப்பட்டு, விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த கோவிலின் மத்தியில் சன்னிதிக்கு எதிர்ப்புறமாக மகா மண்டபம் என்ற ரங்க மண்டபம் உள்ளது. கலைநயம் மிக்க அந்த மண்டபம் கிருஷ்ண தேவராய மன்னரால் 1510-ல் கட்டப்பட்டது. ஐந்து வாசல்கள் கொண்ட அந்த மண்டபத்தின் நடுவில் யாளிகளையும், அவற்றின் தூண்களில் மகர மீன்களையும், சவாரி செய்யும் வீரர்களையும் காணலாம். மேல் கூரை ஓவியங்களில் அர்ஜூனன் அம்பு எய்வது, தசாவதாரம், திரிபுர சம்கார மூர்த்தி, காமதகன மூர்த்தி, கல்யாணசுந்தரர் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருபாட்சர் கோவில் கோபுர நிழல் ரங்க மண்டபத்தின் சுவரில் தலைகீழாக விழும் அதிசயம் காண்பவரை ஆச்சரியப் படுத்தி வருகிறது. அதற்கான காரணம் என்ன..? என்பதை இன்று வரையில் அறிய இயலவில்லை. ஒரு பொருளின் நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒன்று சம்பந்தப்பட்ட பொருளுக்கும், அதன் நிழலுக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத நிலையிலும் கோபுர நிழல் தலைகீழாக விழுவதை இறைவன் அருள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். அறிவியல் வல்லுனர்கள் அதை பழங்கால கட்டிடக்கலையின் நுட்பத்துக்கு எடுத்துக்காட்டாக பார்க்கிறார்கள். 

Next Story