சிவனாக மாறிய மரகதம்
பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.
ஆடவல்லான் நடராஜரின் கால் சலங்கை ஒலி சப்தம் கேட்டு பார்வதி தேவியான காளி தேவி அவரருகே சென்றாள்.
‘சுவாமி’ என அழைத்தாள் காளி.
‘என்ன தேவி?’ என கேட்டார் நடராஜர்.
‘ஆடல் என்பது பெண்களுக்கே உள்ள கலை. நீர் ஆடி ஆடவல்லான் என்று பெயர் பெறுவது சரியல்ல. நீர் ஆடி எந்த பெண்ணையும் வெல்ல முடியாது’ என்றாள் தேவி.
‘அப்படியா?’ கேட்டார் நடராஜர்.
‘ஆமாம். முடிந்தால் என்னுடன் ஆடிப்பாரும்.’ -காளி சவால் விட்டாள்.
சிவபெருமான் சவாலை ஏற்றார். ஒருபுறம் காளி. மறுபுறம் நடராஜர். ஆட்டம் தொடங்கியது. சரஸ்வதி வீணையை மீட்ட, நாரதர் யாழை இசைக்க, மகாவிஷ்ணு மத்தளம் கொட்ட, நந்தியம் பெருமான் தாளமிட ஆட்டம் தொடங்கியது. சிவ தாண்டவத்தையும் காளி ஆட்டத்தையும் அனைவரும் கண்டு களித்தனர்.
குனிந்த புருவமும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும் உடையவராய் ஆனந்த நடனமாடிய நடராஜ பெருமானின் நடனம் கண்டு தேவர்கள், சித்தர்கள், முனி கணத்தவர்கள் என அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.
அப்போது பெருமானுடைய திருவடிச் சிலம்பிலிருந்து மரகதப்பச்சை ஒன்று தெறித்து, தென் மேற்குத் திசையில் போய் விழுந்தது.
அப்படி விழுந்த மரகதப்பச்சை லிங்க உருவமாக மாறி அமைந்ததை தேவர்கள் அசரீரி மூலம் அறிந்தனர்.
உடனே அவர்கள் அனைவரும் அந்த இடம் தேடி ஓடினர்.
லிங்க உருவினைக் கண்டு களித்தனர்.
மரகத மயமான அந்த லிங்க உருவத்தை தேவர்கள் தரிசிக்கும் போது அது பஞ்சவர்ணங்களோடு காட்சி அளிக்க பிரமாதி தேவர்கள் அந்த சிவலிங்கத்தை பஞ்சவர்ணேஸ்வரர் எனப் போற்றித் துதித்தனர்.
இத்தலமே இன்று மணிக்குடி என்று வழங்கப்படுகிறது.
இங்குள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.
ஆலய முகப்பை தாண்டி உள்ளே சென்றால் பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் இறைவியின் சன்னிதி உள்ளது. அதனையடுத்து உள்ளது அர்த்த மண்டபமும், கர்ப்பகிரகமும். கர்ப்பகிரகத்தில் இறைவன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவ கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கு பிரகாரத்தில் ஆஞ்ச நேயர், மகாவிஷ்ணு, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் தனிச்சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களின் திருமேனிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.
தில்லையில் நடராஜ பெருமானையும் கோவிந்தராஜ பெருமானையும் ஒருசேர தரிசித்து வணங்குவது போல் இந்த ஆலயத்திலும் பெருமானுடன் திருமாலையும் ஒருசேர வணங்கும் பேறு பக்தர்களுக்கு கிடைக்கிறது.
இத்தலத்தில் திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட ‘விஷ்ணு தீர்த்தம்’ ஆலயத்தின் எதிரே உள்ளது.
அப்பர் அடிகள் இறைவனின் வண்ண பேதங்களை தன்னுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
‘பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும், மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக் குன்றம்’ எனச் சேரமான் பெருமாளும் அருளிச் செய்துள்ளார்.
எனவே, சிவபெருமானுக்கு ஐந்து நிறங்கள் உண்டு என்பது தெளிவு.
இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.
ஆனித்திருமஞ்சனம், சோமவாரம், பூசம் ஆகிய நாட்களில் இங்கு இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆடவல்லானின் மரகத பச்சையில் உறுவான பஞ்சவர்ணேசுவரர் தன்னை நாடும் பக்தர்களின் வெற்றிக்கு துணை நிற்பார் என்பது நிச்சயம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
-சி.செல்வி, திருச்சி
Related Tags :
Next Story