ஆன்மிகம்

முழுமை பெற்ற வான்மறை + "||" + Complete vanity

முழுமை பெற்ற வான்மறை

முழுமை பெற்ற வான்மறை
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தனை வசனங்களுமே இந்த மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த உதவுகிறது.
திருக்குர் ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணிகள்

எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அத்தகைய இறைவனின் அருட்கொடைகளில் குறிப்பிடத்தக்கது திருக்குர்ஆன்.

6666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், ‘வஹி’ என்னும் இறைச்செய்தியாக முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் மூலம் இந்த உலகிற்கு அருளப்பட்டது.

23 ஆண்டு கால இடைவெளியில் பல்வேறு காலகட்டங்களாக, அவ்வப்போது நிகழ்கின்ற சூழ்நிலைக்கேற்ப, படிப்பினைகளாக அல்லது தீர்ப்புகளாக அல்லது கேள்வியின் பதிலாக நபிகளார் மூலம் அருளப்பட்டவை தான் இந்த வசனங்கள்.

திருக்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அது எப்படி அருளப்பட்டதோ அதிலிருந்து ஒரு புள்ளி கூட மாற்றம் பெறாமல் இத்தனை ஆண்டுகாலம் தலைமுறைகளை எல்லாம் தாண்டி நிலைத்திருக்கிறது. இது திருக்குர்ஆனின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தனை வசனங்களுமே இந்த மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த உதவுகிறது. ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து உயிரோடு இருக்கும் காலம் வரை உள்ள உலக வாழ்க்கை, அவனது மரணத்திற்குப்பின் உள்ள மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கை என்று மனித வாழ்க்கையின் வாழ்வியல் தத்துவங்கள், மார்க்க வழிபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய வேதம் இது.

அதுமட்டுமல்ல, இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட அதிசயங்களை எல்லாம் அன்றே சொன்னது திருக்குர்ஆன். எந்தவித அறிவோ, ஆற்றலோ, திறனோ இல்லாத அன்றைய காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மைகள் சொல்லப்பட்டது. அப்போது, அது அறிவுக்கு எட்டாத ஒரு கற்பனை செய்தியாக கருதப்பட்டது.

திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சிகளால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன. தாங்கள் கண்டுபிடித்த விஞ்ஞான உண்மைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதை விஞ்ஞான உலகம் ஒப்புக்கொண்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் அரபாவுடைய நாளிலே மாலை நேரத்தில் தன் ‘கஸ்பா’ என்ற ஒட்டகத்தின் மேல் ஏறி அரபா மலையின் சற்று உயரமான இடத்தில் இருந்து கொண்டு ‘நான் இன்றைய தினம் உங்களுக்கு என்னுடைய இறைவனின் கட்டளைக்கிணங்க, இஸ்லாம் என்ற ஏகத்துவ மார்க்கத்தை, உங்களின் வாழ்வின் வழிகாட்டியை முழுமை செய்துவிட்டேன். அதற்கெல்லாம் நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘நண்பர்களே எனக்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் சாட்சி சொல்வீர்களா?’ என்று வினவினார்கள்.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான நபித்தோழர்கள் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும், ‘இறைத்தூதர் அவர்களே, உங்களுக்கு அல்லாஹ் அளித்த கட்டளையை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்’ என்று ஒருமித்த குரலில் உரக்கச்சொன்னார்கள்.

நபிகள் (ஸல்) அவர்கள், தங்களின் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி நீட்டியவர்களாக, ‘இறைவனே இதற்கு நீயே சாட்சி’ என்று மூன்று முறை சொன்னார்கள்.

அவர்களின் சொல்லை முழுமையாக அங்கீகரித்து கொண்ட அல்லாஹ் உடனே கீழ்கண்ட வசனத்தை இறக்கினான்:

‘இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தி அடைந்தேன். அங்கீகரித்து கொண்டேன்’ (திருக்குர்ஆன் 5:3).

அதுவே வான்மறையின் கடைசி வஹியாய் வந்த வசனம். இப்படி முழுமைபெற்ற அருள்மறை, அண்ணல் நபிகள் (ஸல்) இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையிலும் அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

அந்தக்காலத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும் மிருகங்களின் தோல், எலும்பு, மரச்சட்டங்கள் போன்றவற்றில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அதுவும் ஒன்றிரண்டு பிரதிகளாகவே இருந்தன.

நபிகளாருக்கு பிறகு அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பு ஏற்றார். அப்போது திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது அவர், நபிகள் (ஸல்) அவர்கள் செய்யத்துணியாத ஒரு காரியத்தை நான் செய்வதற்கு அச்சப்படுகிறேன்’ என்று கூறினார்கள்.

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்குப்பின் கலீபா பொறுப்பு ஏற்ற உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது காலத்தின் கட்டாயமாக ஆனது. உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் தான் பாரசீகம், ரோம் போன்ற பெரும் வல்லரசுகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு பலர் ஏகத்துவத்தின் சிறப்பை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்த போது, இறை கட்டளைகளை ஓதி உணர்வதற்கு நிறைய திருகுர்ஆன் பிரதிகளின் தேவை அவசியமாயிற்று.

எனவே உமர் கத்தாப் (ரலி) கால ஆட்சியில் எல்லாப்பிரதிகளும் ஒன்று திரட்டப்பட்டது. நபிகளார் காலத்திலேயே திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பெருமைக்குரிய சஹாபாக்களை ஒன்று கூட்டி ஒரு குழு அமைக்கப்பட்டது.

திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து முறைப்படுத்தி அத்தியாயங்களாய் பிரித்து இன்றுள்ள குர்ஆன் போல் வடிவமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அதே நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மிருக தோல்களிலும், எலும்புகளிலும், ஈச்சம் பட்டைகளிலும், பலகைகளிலும் உருவேறிய திருக்குர்ஆன், லட்சக்கணக்கான மக்களின் மனங்களிலும் மனப்பாடமாக குடியேறியது. எத்தனை பிரதிகள் அழிந்து போனாலும் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த ஒருவர் உள்ளவரை அது மீண்டும் உயிர் பெற்று உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

திருக்குர்ஆனில் சொல்லப்படாத செய்திகளே இல்லை என்கின்ற அளவிற்கு அது முழுமைபெற்றதாகும். பல நபிமார்களின் வரலாறு இதில் இடம்பெற்றுள்ளது. ‘அழகிய சரித்திரம்’ என்ற அடைமொழியோடு யூசுப் நபிகள் சரித்திரம் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல வரலாற்றுக் குறிப்புகள், வாழ்வியல் தத்துவங்கள், நன்னெறி சிந்தனைகள், நற்பண்புகள் என்று மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.

அந்த வான்மறையில் சில செய்திகள் ஒற்றை இரட்டை வசனங்களாகவே மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களோடு வாழ்ந்த பல அறிஞர் பெருமக்கள், அந்த வசனங்களின் பின்னணியாய் நபிகளார் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி இருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், அப்படிப்பட்ட வசனங்களின் வரலாற்று பின்னணிகளை விளக்கமாக எழுதினால், அதைப்பற்றி அறியாத மக்களுக்கு அது ஒரு விழிப்புணர்வாக அமையும் என்ற எண்ணத்தில் வெளிவரும் தொகுப்பே இந்த ‘திருக்குர் ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணி’.

இனி தொடர்ந்து வசனங்களின் வரலாற்று செய்திகளைப் பார்ப்போம்.