சிவபெருமானால் வழங்கப்பட்ட சிவலிங்கம்


சிவபெருமானால் வழங்கப்பட்ட சிவலிங்கம்
x
தினத்தந்தி 21 Feb 2018 9:52 AM GMT (Updated: 21 Feb 2018 9:52 AM GMT)

இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலை பயன்படுத்தப்படுவதில்லை. விஷ்ணுவுக்குரிய துளசி இலையே பயன்படுத்தப்படுகிறது.

கல் நேர வழிபாட்டுக்கு அனுமதிக்காமல், இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு பெண்களைக் கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், தளிப்பிரம்பா ராஜராஜேஸ் வரர் கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

சிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்திருந்தார். பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் மான்தத்தா எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.

அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.

முனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் தளிப்பிரம்பாவைத் தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது.

அதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் முச்சுகுந்தா, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில் இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலிங்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.

பல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட சடசோமன் எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

பரசுராமர் பயணித்துக் கொண்டிருந்த பாதையில், சக்தி மிகுந்த கோவில் கருவறை ஒன்று பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டார். அந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். அப்போது அங்கு வந்த நாரதர், மான்தத்தா முனிவர் குறித்தும் சிவபெருமான் வழங்கிய மூன்று சிவலிங்கங்கள் குறித்தும் தெரிவித்தார்.

அதைக் கேட்ட பரசுராமர், அந்தக் கோவிலைத் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு புதுப்பிக்கச் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அகத்திய முனிவர் அபிஷேகம் செய்து நெய்விளக்கேற்றி வழிபட்டார் என்று பரசுராமருடன் தொடர்புடைய வரலாறு ஒன்றும் தெரிவிக்கிறது.

சோழர் கட்டிடக் கலையுடன் கேரள முறையையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் இருக்கும் இறைவன், முதலாம் ராஜராஜ சோழன் பெயரைத் தாங்கி ‘ராஜராஜேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஆலயம் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். இக்கோவிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவும், மலையாள ஆண்டு தொடக்க நாள் விழாவும் சிறப்பு விழாக்களாக இருக்கின்றன.

சிறப்புத் தகவல்கள்

* இக்கோவில் கேரளாவிலுள்ள 108 முக்கியச் சிவத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

* இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலை பயன்படுத்தப்படுவதில்லை. விஷ்ணுவுக்குரிய துளசி இலையே பயன்படுத்தப்படுகிறது.

* இக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப்படுகிறது.

* இக்கோவிலில் கொடிமரம் அமைக்கப்படவில்லை.

அமைவிடம்

கேரளா மாநிலம், கண்ணூர் நகரில் இருந்து வடகிழக்கில் 23 கிலோமீட்டர் தொலைவிலும், காசர்கோடு நகரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது தளிப்பிரம்பா என்ற ஊர். 

Next Story