அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Feb 2018 10:45 PM GMT (Updated: 21 Feb 2018 7:40 PM GMT)

மால்வாய் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் எரியூட்டப்பட்ட மனித உடல் சாம்பல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு குடும்ப பிரச்சினை, தீராத சொத்து பிரச்சினை, பேய் பிடித்தவர்கள், குழந்தை வரம்வேண்டி செல்வோர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதால் அவர்கள் இந்த கோவிலுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, கோழிகள் பலியிடுதல் மற்றும் ஆலயமணி, வேல்கம்புகள் வைத்தும் வழிபடுகிறார்கள். ஆண்டு தோறும் மாசிமாதம் சிவராத்திரி அன்று காப்புக்கட்டி தொடர்ந்து 1 வாரம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 13-ந் தேதி சிவராத்திரி அன்று காப்புக்கட்டி விழா தொடங்கியது. தினசரி மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று மாலை 4மணிக்கு நடந்தது. அப்போது வேண்டுதலுக்கு வந்த ஆடு, கோழிகளை பலியிட்ட போது அதன் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார். இதையடுத்து மயானத்தில் எரியூட்டப்பட்ட மனித உடல் சாம்பல் மீது மருளாளி ஏறி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மேலும் அங்கு உயிர்ப்பலி கொடுத்த ஆடு,கோழி ரத்தம் மற்றும் எரியூட்டப்பட்ட மனித உடலின் சாம்பல் கலந்த சோற்றினை குழந்தை வரம்கேட்டு வந்தவர்கள், பேய் பிடித்தவர்கள் ஆகியோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.அதனை பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற சாப்பிட்டார்கள்.

இன்று இரவு 7மணியளவில் கிராமத்தின் எல்லையில் ஆடுபலி கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டின்குடலை மருளாளி ஒரு பகுதியை வாயிலும் ஒரு பகுதியை தனது உடலிலும் சுற்றிக்கொண்டு சாமிக்கு முன்பு நடந்து செல்வார். அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் ஆமரசூர், கீழரசூர், மேலரசூர் ஒரத்தூர், சாத்தப்பாடி, எம்.கண்ணனூர், குளத்தூர், சரடமங்கலம், புள்ளம்பாடி, கல்லக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள்பெற்று செல்வார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. கல்லக்குடி போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Next Story