எதிரிகளும் பாராட்ட வேண்டும்


எதிரிகளும் பாராட்ட வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:45 PM GMT (Updated: 22 Feb 2018 9:22 AM GMT)

நெருக்கமானவர்களை அடுத்து, எதிரிகள் தரும் சான்றிதழும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

ருவர் நல்லவர், நம்பகமானவர், வாய்மையாளர் என்று அறியப்பட முக்கியமான இரு தரப்பினரின் சான்றிதழ் தேவை.

ஒன்று, அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தரும் சான்றிதழ். ஒருவரைப் பற்றிய உண்மை நிலையை சரியாக அறிந்தவர்கள் அவருக்கு நெருக்கமாக வாழ்கின்ற மனைவி, கணவன், பிள்ளைகள், உறவினர், நண்பர், அண்டை வீட்டார், பணியாட்கள் ஆகியோரே.

தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒருவரைப் பற்றி மேலோட்டமாகத்தான் தெரியும். அவரது திறமைகள், ஆற்றல்கள், சேவை, தியாகம் ஆகியவை பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

நெருக்கமானவர்களை அடுத்து, எதிரிகள் தரும் சான்றிதழும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. எதிரிகள் எப்போதும் குறை காண்பதிலேயே கவனமாக இருப்பார்கள். துப்பறியும் அதிகாரி போல துருவித்துருவி குறைகளை ஆராய்வார்கள். ‘எப்போது இவன் தவறு செய்வான்’ என்று காத்திருப்பார்கள்.

எனவே ஒருவரது எதிரி அவரை நல்லவர் என்றால் அது அவருக்கு கிடைக்கும் மிகப்பெரும் விருதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்விரு தரப்பினரிடம் இருந்தும் மிக எளிதாக நற்பெயர் பெற்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவரது நாற்பதாவது வயதில்தான் இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதாரண மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், திடீரென தம்மை இறைத்தூதர் என்று அழைக்க ஆரம்பித்தால் எவர்தான் நம்புவர்? ஆனால் அவரது மனைவி கதீஜா, உற்ற நண்பர் அபூபக்கர், உதவியாளர் ஜைத், மருமகன் அலி இன்னும் அவருக்கு மிக நெருக்கமான தோழர்கள் எவ்வித கேள்வியுமின்றி அவரை இறைத்தூதராக ஏற்றுக்கொண்டனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை கூடப் பொய் சொல்லி அவர்கள் கேட்டதில்லை. நபிகள் நாயகத்தின் வாய்மையிலும், நேர்மையிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

மக்கா நகர மக்களும் அவரது வாய்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். இறை மார்க்கத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக அக்கால முறைப்படி, மக்காவிலுள்ள ஸபா குன்றின் மீது ஏறி நின்று மக்களை நோக்கி கேட்பார், “மக்களே! இம்மலைக்குன்றின் பின் புறமுள்ள கணவாயில் உங்களைத் தாக்க குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என நான் கூறினால் நம்புவீர்களா?” எனக் கேட்பார். மக்கள் ஒரே குரலில், “ஆம், நம்புவோம், நீர் பொய்யுரைத்து நாங்கள் கேட்டதில்லை” என்று நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு சான்று பகர்ந்தனர்.

இனி, எதிரிகள் நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு வழங்கிய சான்றுகளை பார்ப்போம்.

நபிகள் நாயகம் போதித்த “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள், அவரை நோக்கி ‘சூனியக்காரர், கவிஞர், பைத்தியக்காரர்’ என்று கூறினார்களே தவிர, அவரைப் பொய்யர் என்று ஒருபோதும் தூற்றியதில்லை. அவரது வாய்மை குறித்து எந்த சந்தேகத்தையும் கிளப்பியதில்லை.

நபிகளாரின் பரம எதிரியான அபூஜஹல், ஒருமுறை நபிகளாரை நோக்கி, “முஹம்மதே! நீர் பொய்யர் அல்ல, நீர் கொண்டு வந்துள்ள செய்திதான் பொய்யானது” என்றார்.

நபிகள் நாயகத்தின் இன்னொரு எதிரி, நபிகளாரின் நேர்மைக்கு வழங்கும் சான்றைப் பார்ப்போம்.

இஸ்லாத்தை ஏற்கும்படி ரோமானியப் பேரரசர் ஹெராகுலியஸ் என்பவருக்கு நபிகள் நாயகம் கடிதம் எழுதினார்கள்.

சக்கரவர்த்தியாகிய தனக்கே கடிதம் எழுதத் துணிந்த முஹம்மத் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஹெராகுலியஸ் விரும்பினார்.

அவ்வேளையில் மக்காவிலிருந்து ரோம தேசத்திற்கு வணிகராக வந்திருந்த நபிகள் நாயகத்தின் கடும் பகைவரான அபூசுப்யான் என்பவரை அழைத்து மன்னர் விசாரணை செய்தார்.

ஹெராகுலியஸ்: ‘எத்தகைய மக்கள் முஹம்மதை பின்பற்றுகின்றனர்? ஏழைகளா?, செல்வாக்கு மிக்கவர்களா?’

அபூசுப்யான்: பலவீனமானவர்களும், கதியற்றவர்களும்.

ஹெராகுலியஸ்: அவர்கள் எண்ணிக்கை பெருகி வரு கிறதா, குறைந்து வருகிறதா?

அபூசுப்யான்: பெருகி வருகிறது

ஹெராகுலியஸ்: அவர் எப்போதாவது பொய்யுரைத்தது உண்டா?

அபூசுப்யான்: இல்லை

ஹெராகுலியஸ்: அவர் மோசடி செய்ததுண்டா?

அபூசுப்யான்: இதுவரை இல்லை, இனிமேல் என்ன செய்வார் என்பதை பார்க்க வேண்டும்.

ஹெராகுலியஸ்: அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார்?

அபூசுப்யான்: ஒரே இறைவனை வணங்க வேண்டும், அவனைத் தொழ வேண்டும், நேர்மையாக இருங்கள், உண்மை பேசுங்கள், உறவினர்களின் உரிமைகளை வழங்கி விடுங்கள்.

இதனைக் கேட்ட ஹெராகுலியஸ் “தம் சொந்த விஷயத்தில்கூட பொய் சொல்லாத மனிதர், மத விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகிறார்?” என்று வியந்து கூறினார்.

ஆக, நபிகள் நாயகத்தின் வாழ்க்கைக்கு நெருக்கமானவர்களும் சான்று பகர்ந்தார்கள், எதிரிகளும் சான்று பகர்ந்தார்கள். நபிகள் நாயகத்தின் வெற்றிக்கு அவரது வாய்மையான வாழ்க்கையும் முக்கிய காரணமாகும்.

தொடக்கத்தில் அவரது கொள்கைகளை தீவிரமாக எதிர்த்தவர்களும் காலப்போக்கில் அந்த எதிர்ப்பை கைவிட்டனர். காரணம் என்னவெனில் நபிகள் நாயகம் போதிக்கும் கொள்கைகள் அவரது சுயநலத்திற்காக அல்ல, மாறாக மனித குலத்தின் மேன்மைக்காகவே என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

நமது வாழ்க்கையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் போன்றே அமைய வேண்டும். நெருக்கமானவர்கள் போற்றும்படி வாழ வேண்டும், எதிரிகள் குறை காண முடியாத அளவிற்கு செம்மையாக வாழ வேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், சென்னை. 

Next Story