திருமண தடை நீக்கும் கோகுல கிருஷ்ணன்


திருமண தடை நீக்கும் கோகுல கிருஷ்ணன்
x
தினத்தந்தி 27 Feb 2018 10:03 AM GMT (Updated: 27 Feb 2018 10:03 AM GMT)

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

அழகிய சிறிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். மூலவரின் எதிரே பீடமும், அருகே கருடாழ்வார் திருமேனியும் உள்ளன. மகாமண்டபத்தின் இடது புறம் பரமானந்த விநாயகரும், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். வலதுபுறம் ஆஞ்ச ேநயர் அருள்பாலிக்கிறார்.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கரு வறையில் இறைவன் கோகுல கிருஷ்ணன் வலது திருப்பாதத்தை மடக்கியபடி பின்புறம் பசுமாட்டின் மேல் மென்மையாய் சாய்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன் கம்பீரமாக நிற்க, இருபுறமும் சத்தியபாமாவும் ருக்குமணியும் அழகு தேவதைகளாக காட்சியளிக்கின்றனர்.

அருகே உற்சவர் திருமேனி உள்ளது. கையில் வெண்ணெய் கிண்ணத்துடன் துணைவியருடன் காட்சி தரும் கிருஷ்ணன் அழகும் அவர் முகத்தில் ஒளிவிடும் புன்னகையும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.

சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.

கிருஷ்ண ஜெயந்தி அன்று இறைவன் இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி 9 நாட்களும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். தைமாதம் நடைபெறும் இராதா கல்யாணத்தின் போது ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று நடைபெறும் உரியடி உற்சவத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி மட்டுமின்றி அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த ஆலயம் திருவிழா போல களைகட்டி காட்சி தரும். மார்கழி 30 நாட்களும் திருப்பள்ளி எழுச்சி மிகச்சிறப்பாக நடைபெறுவதுடன் கார்த்திகை மாத திருக்கார்த்திகை அன்று சொக்கபணை திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு அன்று இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அனுமன் ஜெயந்தி அன்று இங்குள்ள ஆஞ்சநேய பெருமானுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சூட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள பரமானந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 1008 குளிர்ந்த நீர் அபிஷேகம் நடைபெறுவதுடன் விநாயகர் அன்று வீதியுலா வருவார்.

திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.

பிள்ளை பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.

காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருச்சி திருவானைக்காவல் கடை வீதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஆலயம். திருவானைக்காவல் கடை வீதியிலிருந்து நடந்தே செல்லலாம். திருச்சி சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நிறைய நகரப்பேருந்துகள் உள்ளன. திருவானைக்காவல் கடை வீதியென்று இறங்க வேண்டும்.

 -மல்லிகா சுந்தர்

Next Story