ஈசனுக்கு உதவிய முருகப்பெருமான்


ஈசனுக்கு உதவிய முருகப்பெருமான்
x
தினத்தந்தி 9 March 2018 5:54 AM GMT (Updated: 9 March 2018 5:54 AM GMT)

கொளஞ்சியப்பர் திருக்கோவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

ங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.

இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார்.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.

ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).

அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார்.

மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.

அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார்.

சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.

தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம்.

தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.

கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

-நெய்வாசல் நெடுஞ்செழியன். 

Next Story