இரண்டு வயது சிறுவனை உயிர்ப்பித்த பேப்பர் சுவாமி


இரண்டு வயது சிறுவனை உயிர்ப்பித்த பேப்பர் சுவாமி
x
தினத்தந்தி 14 March 2018 10:15 AM GMT (Updated: 14 March 2018 10:15 AM GMT)

ஆண் வாரிசு இல்லாத கவலையில், பேப்பர் சுவாமியைப் பார்ப்பதற்காக ஜமீன்தார் இருவரும் சென்றிருந்தனர்.

ஆண் வாரிசு இல்லாத கவலையில், பேப்பர் சுவாமியைப் பார்ப்பதற்காக ஜமீன்தார் இருவரும் சென்றிருந்தனர். அவர்களைப் பார்த்த பேப்பர் சுவாமி, ‘என்னப்பா... ஏதோ எதிர்பார்த்து வந்திருக்கிற போல' என்று கேட்டார்.

மூத்த ஜமீன்தார் கண்கலங்க நின்றார். அவரால் பேச முடியவில்லை. நா தழுதழுத்தது.

‘சுவாமி அண்ணனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கும் ஆண் வாரிசு இல்லை. ஜமீன் அரண்மனையில் ஆண் வாரிசு இல்லன்னா, எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்கு தெரியும்...' இளையவர்தான் பேசினார்.

சிரித்தார் சுவாமி..

இரண்டு கடுக்காய்களை எடுத்தார். ஜமீன்தார் கைகளில் கொடுத்தார். ‘இங்க பாருப்பா... உனக்கு சிம்ம லக்னத்தில இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும்..' என்றார்.

சந்தோஷமாக நரசிம்ம அப்பாசாமி அதை கையில் பெற்றுக்கொண்டார்.

‘சுவாமி... அண்ணனுக்கு' என்று நீட்டி இழுத்தார்.

சுவாமி சிரித்தார்.. ‘உனக்குத் தான் இரண்டு ஆண் குழந்தை கிடைக்கும் டா...' என்றார்.

நரசிம்ம அப்பாசாமிக்கு பெண் குழந்தை பிறந்து, சுமார் 16 வருடங்கள் கடந்து விட்டது. பிறகு எப்படி குழந்தை பிறக்கும் என்று பலரும் கேள்வி கேட்டனர்.

ஆனால் ஜமீன்தார் மட்டும் நம்பிக்கையோடு இருந்தார்.

காலங்கள் கடந்தன. சுவாமிகள் திருவாக்கின் படியே இளையரசேனந்தல் ஜமீன்தார் நரசிம்ம அப்பாசாமிக்கு சிம்ம லக்னத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் ஜமீன்தார். தனது குழந்தைகளுக்கு பெரிய பேப்பர், சின்ன பேப்பர் என பெயர் வைத்தார். அதன் பிறகு சுவாமிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் மிகவும் நெருக்கம் ஏற்பட்டது.

1941-ம் ஆண்டு.

இளையரசனேந்தல் ஜமீன்தார் தனது மகள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பேப்பர் சுவாமியை அழைத்துவர காரில் இலஞ்சிக்கு வந்தார்.

பேப்பர் சுவாமி இலஞ்சி ஐ.கே.எஸ். பிள்ளை என்பவர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

ஜமீன்தார், ‘சுவாமி! எனது மகள் திருமணத்தை நடத்தி வைக்க நீங்கள் தான் வரவேண்டும்' என்றார்.

சுவாமி சிரித்துக்கொண்டே ‘சரி... நாளைக்கு காலையில வாரேன். நீ... குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு வா. நான் அங்கு உனக்காகக் காத்திருக்கேன்' என்றார்.

ஜமீன்தாருக்கு சந்தோஷம். ஐ.கே.எஸ்.பிள்ளைக்கோ வருத்தம். ‘நமது வீட்டு விசேஷத்தை விட்டு விட்டு சுவாமி கிளம்புவேன் என்கிறாரே..'

இரண்டு பேர் முகத்தினையும் பேப்பர் சுவாமி கவனித்தார்.

மறுநாள் காருடன் வந்தார் ஜமீன்தார். அங்கிருந்த சுவாமியை காரில் ஏற்றிக்கொண்டு இளையரசனேந்தல் நோக்கி விரைந்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஐ.கே.எஸ்.பிள்ளை. ‘தனக்கு தெரியாமல் தனது வீட்டை விட்டு சுவாமி வெளியே சென்று இருக்க முடியாதே. எப்படி நம் வீட்டை விட்டு சுவாமி கிளம்பினார்’ என பலவித யோசனையுடன் தனது வீட்டில் பேப்பர் சுவாமி தங்கி இருந்த அறைக்கு சென்றார்.

அங்கே சுவாமி பூஜை செய்ய ஆயத்தமாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ந்து விட்டார் ஐ.கே.எஸ்.பிள்ளை.

‘அப்படியென்றால் ஜமீன்தார் அழைத்து கொண்டு சென்றது யாரை?’ என்று குழம்பிப் போனார்.

குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு ஒருவரை அனுப்பி, ஜமீன்தாருடன் சுவாமி சென்றாரா? என்று விசாரித்து வரச் சொன்னார்.

அந்த நபர் அங்கு சென்றுவிட்டு திரும்பி வந்து ‘சுவாமி எங்கேயும் செல்லவில்லை. குன்னக்குடி பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து கொண்டிருக்கிறார்' என்றார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்த பிள்ளை, வீட்டிற்குள் நுழைந்தபோது, ‘என்ன பிள்ளை... அதிர்ச்சியா இருக்கா?' என சிரித்துக்கொண்டே கேட்டார், பேப்பர் சுவாமி.

அந்த நேரத்தில் பிள்ளை வீட்டில் இருந்த போன் அலறியது.

அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே போனை எடுத்தார் பிள்ளை.

‘பிள்ளை மன்னிச்சிடுங்க! உங்க வீட்டு நிகழ்ச்சிக்கு இடையிலேயே பேப்பர் சுவாமியை எனது மகள் திருமணத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன். மன்னிச்சுடுங்க..' என்றார் ஜமீன்தார்.

‘சுவாமி.. இளையரசனேந்தலிலுமா? அப்படியென்றால் மூன்று இடத்தில் சுவாமியா?’ என்று அதிர்ந்து போய் விட்டார் பிள்ளை.

அந்த காலத்தில் டிரங்கால் புக் செய்து பேசவேண்டும். அல்லது ஏதாவது டாக்ஸி புக் செய்து அதன் மூலம் சென்று தான் மற்ற ஊரைப்பற்றி அறியமுடியும். இலஞ்சியில் இருந்து இளையரசனேந்தல் பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

செய்தி அலைவரிசை கூட ஓரிடத்தில் இருந்து மறு இடத்துக்கு செல்ல நேரம் பிடிக்கும். அப்படியிருக்கும் போது ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் இருந்த சித்தர் மிகவும் பெருமைக்குரியவர்தானே. இந்த செய்தி ஊரெங்கும் பரவியது. பக்கத்தில் உள்ள கிராம மக்கள் மட்டுல்லாமல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமே அதிசயமாய் பேசியது. அந்தக் காலத்தில் சுதேச மித்திரன் பத்திரிகையில் இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள்.

1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேப்பர் சுவாமிகளை இளையரசனேந்தல் அரண்மனைக்கே கூட்டி வந்து விட்டனர் ஜமீன்தார்கள். அங்கேயும் அவரது அற்புத செயல்கள் தொடர்ந்தது.

அரண்மனையில் பணியாற்றியவர் முத்தையா பிள்ளை மகன் வையாபுரி பிள்ளை. இவர் 1950-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியிருந்தார்.

அவருடைய தேர்வை பலநாளுக்கு முன்பே கணித்தார் பேப்பர் சுவாமி.

எப்படி?

பேப்பர் சுவாமியிடம் முத்தையா பிள்ளை ‘என் மகன் தேர்வில் வெற்றி பெற்று விடுவானா?' என்று கேட்டார்.

உடனே பேப்பர் சுவாமி, அங்கே கிடந்த ஒரு பழைய பேப்பரை எடுத்துக் காட்டினார். அதில் 1949-ல் நடந்த ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியாகியிருந்தது. அந்த பேப்பரில் சுவாமி குறிப்பிட்டு காட்டிய இடத்தில் வையாபுரி பிள்ளையின் பதிவெண் இருந்தது.

முத்தையா பிள்ளைக்கு கொஞ்சம் சந்தேகம் தான். இது 1949-ம் ஆண்டு பேப்பர் அல்லவா?. ‘இந்த பதிவெண்ணில் அந்த வருடம் தேர்வானவர் அல்லவா இருப்பார்’ என்று நினைத்தார். தேர்வு முடிவு வந்த போது, அவர் காட்டிய படியே பதிவெண், அதே பக்கத்தில் அதே பாராவில் வெளியாகி இருந்தது.

ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார் முத்தையா பிள்ளை. அதன் பின் பேப்பர் சுவாமியின் தீவிர பக்தராக மாறி விட்டனர், தந்தையும் மகனும்.

இலஞ்சியில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தெருவில் முத்துக்கோனார் என்பவர் வசித்து வந்தார். சுப்பையா என்ற அவரது இரண்டு வயது மகன் இறந்து விட்டதில் வீடும் ஊரும் சோகத்தில் மூழ்கியது. இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடும் நடந்து வந்தன. அவ்வேளையில் அங்கு வந்த பேப்பர் சுவாமி, முத்து கோனாரிடம் ‘எனக்கு கஞ்சி தாப்பா’ என்றார்.

சோகத்தினை அடக்கிக்கொண்டு அவருக்கு கஞ்சி கொடுத்தார். அப்போது மகனை இழந்த வருத்தத்தில் அழுது துடித்தார்.

உடனே சுவாமி ‘என்னப்பா.. மகன் இறந்து விட்டான் என்று அழுகிறாயா? இந்த உருண்டை சோற்றை அவன் வாயில் தினி. உயிர் வந்து விடும். அவனுக்கு நூறு வயதுக்கு மேல் ஒரு வாய் சோறு கொடுக்கும் போது தான் உயிர் போகும்’ என்றார்.

அதுபோலவே மகன் வாயில் சோறு உருண்டையை வைத்ததும், அந்தச் சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். தற்போது 100 வயதை தாண்டிய நிலையில் இருக்கும் சுப்பையா, தனது வீட்டில் தினமும் பேப்பர் சுவாமியின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார்.

சுவாமியின் அற்புதங்களோடு காலங்கள் பல கடந்தது. சுவாமி திடீரென்று அரண்மனையின் ஒரு பகுதியில் அமர்ந்து மவுன விரதம் இருக்கத் தொடங்கினார். 6 வருடம் யாரிடமும் பேசவில்லை. சுவாமியின் தவத்திற்கு பாதுகாவலாக ஜமீன்தார் அருகிலேயே இருந்தார். இரவு பகலாக கண்விழித்து அரண்மனை காவலாளிகளும் அவருக்கு சேவகம் செய்தனர்.

ஒரு நாள்.. சுவாமி ஜீவ சமாதி ஆக தயாரானார். இதையறிந்த அவரது பக்தர்கள், ‘சுவாமி நம்மைவிட்டு பிரிய போகிறார். அதை நாம் எப்படி தாங்க போகிறோம்’ என்று பரிதவித்தனர். ஆனால் பேப்பர் சுவாமி தன் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. 14.5.1956-ம் ஆண்டு கொல்லம் ஆண்டு 1131 துர்முகி வருடம் சித்திரை மாதம் 31-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 1.30 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமி ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி நிலை அடையும் போது, ஏராளமான சீடர்கள் அங்கு கூடியிருந்தனர்.

சமாதி அமைக்கும் பணியை கோவில்பட்டி முக்தானந்தா சுவாமிகள் மடத்தினர் முன்னின்று நடத்தினர். சுவாமிகள் ஜீவ சமாதி ஆனது முதல் இன்று வரை ஆண்டு தோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தர்களோடு இளையரசனேந்தல் ஜமீன்தார் குடும்பத்தினர், குரு பூஜையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். சுவாமியின் சீடர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் பேப்பர் சுவாமி தனது சீடர்களையும், தன்னையும் நம்பி வருவோருக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஜீவ சமாதி அடைந்த பிறகும் கூட இளையரசனேந்தல் ஜமீனில் பல அற்புதங்களை பேப்பர் சுவாமி செய்து வருகிறார்.

-சித்தர்களைத் தேடுவோம்.

Next Story