குருவருளும்.. திருவருளும் கிடைக்கும் அறுபத்து மூவர் விழா


குருவருளும்.. திருவருளும் கிடைக்கும் அறுபத்து மூவர் விழா
x
தினத்தந்தி 27 March 2018 10:20 AM GMT (Updated: 2018-03-27T15:50:29+05:30)

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் வெளிப்பிரகாரமான பெரிய பிராகாரத்தின் வடகிழக்கு முனையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ‘தேவாசிரியன் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது.

29-3-2018 அறுபத்துமூவர் விழா

‘ராஜதானி மண்டபம்’ என்றும் அழைப்பார்கள். அந்த மண்டபத்தில்தான் தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவாதி தேவர்கள், தமக்குரிய நேரம் வரும்வரை காத்திருக்கும் இடமாம். இதனால்தான் அந்த மண்டபத்தை தேவாசிரியன் மண்டபம் என்கிறார்கள்.

செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து, இம்மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் கொண்டு, செங்கோல் செலுத்துவார். அதனால் தான் இந்த மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்கிறார்கள். அந்த மண்டபத்தில் சிவனடியார்கள் வீற்றிருப்பர். திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கி, அதன் பின்னரே மூலவர் திருமூலட்டான நாதரையும், தியாகேசப்பெருமானையும் பணிந்து வழிபடுவது வழக்கம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம், தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை பணிந்து, அதன்பிறகே தம் தோழரான திருவாரூர் ஈசனை வந்து பணிவார். ஒருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனை நினைத்தவாறே தேவாசிரியன் மண்டபத்தை வலம் செய்யாமலும், அங்கிருந்த அடியவர்களை வணங்காமலும், நேராகத் தியாகராஜர் சன்னிதிக்குச் சென்றுவிட்டார்.

அப்போது அந்த மண்டபத்தில் இருந்த அடியவர்களில் ஒருவரான விறன்மிண்டர் என்பவர், சுந்தரர் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வராமலும், அங்கிருந்த அடியவர்களைத் தொழாமலும் ஆலயத்துக்குள் சென்றதைக் கண்டு சினம் கொண்டார். ‘அடியாரை வணங்கி விட்டுதான், சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது மரபு' என்று கோபமுற்ற விறன் மிண்டர், அடியவர்களை மதியாத சுந்தரரை இப்போதே சைவ நெறியிலிருந்து தள்ளி வைக்கிறேன்’ என்றார்.

இதனைக்கண்டு மனம் பதறிய பிற அடியவர்கள் விறன்மிண்டரிடம், ‘சுந்தரர் திருவாரூர் தியாகேசனின் அருள் நிரம்பப் பெற்றவர்’ என்றனர்.

இதனால் மீண்டும் கோபம் கொண்ட விறன் மிண்டர், ‘திருவாரூரில் காலடி எடுத்து வைக்க மாட்டேன்’ என சபதம் செய்து வெளியேறுகிறார்.

இதனை அறிந்த சுந்தரர் திருவாரூர் ஈசனிடம் வேண்டினார். அப்போது ஈசன், ‘சுந்தரா! நம் தொண்டர்களைப் போற்றி திருத்தொண்டத் தொகைப் பாடிடுக' என்றதுடன் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று சுந்தரருக்குப் பாட அடியெடுத்தும் கொடுத்தார்.

ஈசனின் திருவிளையாடல் மூலம் மீண்டும் திருவாரூர் வந்த விறன்மிண்டர், சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சுந்தரருடைய உள்ளம் அடியாரிடத்தில் பதிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இன்பம் அடைந்தார் விறன்மிண்டர். சிவ அடியவர்களிடம் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்த அளவற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரை சிவகணங்களுக்குத் தலைவராக திகழுமாறு அருளினார்.

இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற பரிசுத்தமான அன்புள்ளமும், தொண்டுள்ளமும், பக்தி உணர்வும் கொண்ட சிவனடியார்களே ‘அறுபத்து மூன்று நாயன்மார்கள்’. இந்த நாயன்மார்கள் அனைவரும் கற்றறிந்த மாந்தர்களோ, சித்தர்களோ, மகான்களோ அல்ல. நம்மைப் போல சாதாரண, மிகவும் சாதாரண மனிதர்களே. மந்திரங்கள் ஓதி ஈசனைச் சரியாக வழிபடக் கூடத் தெரியாதவர்கள். பின் எப்படி திருக் கயிலைவாசனின் அணுக்கத் தொண்டர்களாயினர் இந்த நாயன் மார்கள்?.

ஏனெனில் இவர்கள் ‘சிவ பித்தர்கள்'. சிவனுக்காகவும், அவரது அடியாருக்காகவும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய எத்தனித்தவர்கள். சேக்கிழார் பெரியபுராணம் வாயிலாக அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைப் பதிவு செய்ய அந்த ஈசனே சிதம்பரத்தில் `உலகெலாம்' என அடி எடுத்தும் கொடுத்துள்ளார். இத்தகையப் பெரும்பேறு பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிவாலயங்களில் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும்.

இருந்தபோதிலும் திருவிடைமருதூர், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம், திருவையாறு, திருவாரூர், சிதம்பரம் போன்ற ஒரு சில சிவாலயங்களில் மட்டுமே ‘அறுபத்து மூவர் திருஉலா' நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபா லீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதத்தில் இந்த விழா சிறப்புற நடைபெறும்.

இந்த நாளில் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் அடியவர்களுக்கு அமுது செய்வித்தல், அதாவது அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. பித்ரு தோஷங்களும், கர்ம வினைகளும் அன்னதானம் செய்வதன் மூலம் விலகுகின்றன என்கிறார்கள். அறுபத்து மூவர் விழாவில் கலந்துகொள்வதன் மூலம் எளிதில் குருவருளும், திருவருளும் ஒருங்கேப் பெற்றுய்யலாம் என்கிறார்கள். சென்னை திருவான்மியூர் மற்றும் அண்ணாசாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மயிலாப்பூர் அமைந்து உள்ளது.

- சிவ.அ.விஜய்பெரியசாமி, கல்பாக்கம்

Next Story