அதிசயப்பறவை அவ்வாபீன்


அதிசயப்பறவை அவ்வாபீன்
x
தினத்தந்தி 4 April 2018 7:30 AM GMT (Updated: 4 April 2018 7:30 AM GMT)

இப்போது கூட அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.

“நபியே யானைப்படையினரை உமது இறைவன் எவ்வாறு அழியச்செய்தான் என்பதை நீர் கவனித்துப் பார்க்கவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?

அவர்கள் மீது பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான்.

கெட்டியாக சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.

அதனால் அவன், அவர்களைப் பறவைகளால் கொத்தி தின்னப்பட்ட கதிர்கள் போல் ஆக்கி அழித்து விட்டான்”. (திருக்குர்ஆன் 105:1-5)

இப்ராகிம் நபிகள் காலத்திற்கு பின்பு, இறையில்லமான ‘கஅபா’ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள் வரத்து அதிகமானது. வெளியூர் மக்கள் வரவால் அங்கு வியாபாரம் தழைத்தோங்கியது. மக்காவில் வளம் அதிகரித்தது.

வணிகத்திற்காக நெடுந்தொலைவில் இருந்து வந்தவர்கள் பல நாட்கள் மக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வியாபாரம் முடிந்த பின்னர் வியாபாரிகள் பொழுது போக்குகளில் ஈடுபட்டனர். விளையாட்டுகள், பந்தயங்கள் மூலமாகவும் மக்களிடம் பணம் குவிய ஆரம்பித்தது. அதுவும் வியாபாரத்தில் ஒரு பிரிவாக மாறிப்போனது.

மக்களின் அதிகமான வருகையால் பணபுழக்கம், பண்டமாற்று முறைகள், அரேபிய குதிரை வர்த்தகம் என்று மக்கா நகரம் வளர்ந்து பெருநகரமாக உருவெடுத்தது. ‘ஜம்ஜம்’ தண்ணீரின் வற்றாத வளம் அதற்கு மேலும் உறுதியையும் வலுவையும் சேர்த்ததால் பாலைவனம் சோலைவனமாக மாறியது.

இதனை அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் நஜ்ஜாஷி மனதில் புதிய திட்டம் உருவானது. ‘தனது நாட்டிலும் ‘கஅபா’ போன்ற கட்டிடத்தை சிறப்பாக கட்ட வேண்டும், அதன் முலம் அங்கே வியாபாரமும், மக்கள் வரத்தும் அதிகரிக்க வேண்டும்’ என்று திட்டமிட்டான். உடனே அதற்கான பணியிலும் ஈடுபட்டான்.

மன்னர் நஜ்ஜாஷியால் ஏமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ என்பவரின் ஆலோசனையின் பேரில் ‘ஸன்ஆ’ என்ற நகரத்தில் அக்கால தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் பிரமாண்டமான ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டது. தம் நாட்டு தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகியோரை பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி, தன் நாட்டில் உள்ள ஆலயத்திற்கு வருமாறு அழைத்தார் மன்னர் நஜ்ஜாஷி.

இந்த நிலையில் இதை விரும்பாத ஒருவர், இரவு நேரத்தில் அந்த ஆலயத்திற்குள் சென்று அசுத்தம் செய்துவிட்டார். இதன் மூலம் அந்த ஆலயத்தின் கண்ணியம் குறைந்துவிட்டதாக செய்தி பரவியது.

இதையடுத்து அங்கு வந்த மக்கள் கூட்டம் குறையத்தொடங்கியது. இதனால் மன்னரின் திட்டம் தோல்வி அடைந்தது.

இதற்கெல்லாம் மக்காவாசிகளில் யாராவது ஒருவர் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்ரஹா கடும் கோபம் கொண்டான். உடனே மக்கா நோக்கி பெரும் யானைப்படையுடன் புறப்பட்டான். கஅபாவை எப்படியாவது இடித்து விட வேண்டும் என்பதே அவன் எண்ணமாயிருந்தது.

மக்காவின் எல்லையை அடைந்த யானைப்படைகள் தொடர்ந்து முன்னேறிச்செல்ல மறுத்தன. போர் செய்வதற்காக எவ்வளவு தான் ஏவினாலும் யானைப்படைகள் தாங்கள் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. அதற்கு மேல் செல்லாமல் பின்னோக்கி செல்ல எத்தனித்தன.

சிப்பாய்களும், யானைப்பாகன்களும் எவ்வளவோ முயன்றும் யானைகளை எந்த வகையிலும் மக்காவை நோக்கி செலுத்த முடியவில்லை. எனவே அங்கேயே முகாமிட்டு தங்கி இருந்தனர்.

அப்போது கஅபாவின் நிர்வாக பொறுப்பில் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் இருந்தார். அவர், மக்கா எல்லையில் முகாமிட்டிருந்த படையினரை நோக்கி தன்னந்தனியாக சென்றார். இந்த தகவல் அப்ரஹாவை எட்டியது.

யானைப்படையைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்வதற்காக அவர் வருகிறார் என்று எண்ணினான் அப்ரஹா.

அப்போது அப்ரஹாவிடம், ‘நீங்கள் வரும் வழியில் ஏதாவது ஒட்டக மந்தையை பார்த்தீர்களா?, என்னுடைய ஒட்டக மந்தை காணாமல் போய் இரண்டு நாட்களாகின்றன’ என்றார் அப்துல் முத்தலீப்.

கோபத்தின் எல்லையைத் தாண்டிய அப்ரஹா, ‘அப்துல் முத்தலீபே, நீர் பொறுப்பாளராய் இருக்கும் கஅபாவை இடிப்பதற்காக இத்தனை பெரும் படையுடன் வந்து முற்றுகை இட்டிருக்கிறேன். அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒன்றுக்கும் உதவாத ஒட்டக கூட்டத்தைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு’ என்றான்.

இதைக்கேட்டு அப்துல் முத்தலீப் கொஞ்சம் கூட அதிர்ச்சியோ, பயமோ அடையவில்லை.

‘அப்ரஹாவே, கஅபா அல்லாஹ்வின் ஆலயம். அதற்கு அவன் சொந்தக்காரன். அதற்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதனை அவன் பாதுகாத்துக் கொள்வான். அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்?. இது எனக்கு சொந்தமான ஒட்டக கூட்டம். இதனை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு. அதனால் இதனைப் பற்றி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும்?’

இவ்வாறு சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பிச் சென்றார் அப்துல் முத்தலீப். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அப்ரஹா.

மறுநாள் அதிகாலை பொழுது புலர்ந்தது. கஅபாவை பாதுகாக்க அல்லாஹ் நாடினான். திடீரென்று அவ்வாபீன் என்ற சின்னஞ்சிறு பறவைகள் கூட்டம் கூட்டமாக அப்ரஹா படைகளை நோக்கி பறந்து வந்தன. அவற்றின் அலகுகளில் சிறிய கற்கள் இருந்தன. அவற்றின் கால்களிலும் சிறிய கற்கள் இருந்தன.

அவ்வாபீன் பறவைகள் பெருங்கூட்டமாக பறந்து வந்து அந்தக்கற்களை படைகள் மீது வீசின. சிறிய அந்த சுட்ட கற்கள் ஒவ்வொன்றும் நெருப்பு கங்குகள் போல படைகள் மீது விழுந்தன. பலம் பொருந்திய அத்தனை பெரும் யானைப்படை மற்றும் பிற படை வீரர்கள் இந்த தாக்குதலை எதிர்க்க முடியாமல் அழிந்தார்கள்.

அந்த நிகழ்வை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் தான் மேலே இடம்பெற்றுள்ளது. நபிகள் நாயகத்திடம் இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

இப்போது கூட அந்த அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.

முகம்மது நபிகள் காலத்தில் குறைஷியர்கள் கஅபாவை புதுப்பித்து கட்டினார்கள். இந்த கட்டிடப் பணியில் அண்ணலாரும் கலந்து கொண்டார்கள். அப்போது மக்காவில் பிரசித்தி பெற்ற நான்கு கோத்திரங்களில் யார் சொர்க்கத்தின் கல்லாம் ‘அஜ்ருல் அஸ்வத்’தை கஅபாவில் பதிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு சரியான முடிவு எடுக்கும் உரிமை நபிகளாரிடம் விடப்பட்டது.

நபிகளார் தன் தோளில் கிடந்த துண்டை கீழே விரித்து, அஜ்ருல் அஸ்வத் கல்லை அதன் மையப்பகுதியில் வைத்தார்கள். பின்னர் அந்த துண்டின் நான்கு மூலைகளையும் நான்கு கோத்திரர்கள் கைகளில் கொடுத்து, அதை அனைவரும் ஒன்றாய் எடுத்து வரச் செய்தார்கள். கஅபாவின் அருகில் வந்ததும் தன் கைகளாய் அந்த சொர்க்க கல்லை இப்போது கஅபாவில் இருக்கும் இடத்தில் வைத்தார்கள். அது இன்றும் அப்படியே அங்கு நிலைத்து நிற்கிறது. 

Next Story