நல்லவராக இருந்தது போதும்... சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்...


நல்லவராக இருந்தது போதும்... சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்...
x
தினத்தந்தி 5 April 2018 10:30 PM GMT (Updated: 5 April 2018 7:12 AM GMT)

நல்லவராக இருப்பதற்கும் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.

ல்லவராக இருத்தல் என்பது நல்ல காரியம்தான். ஆனால் அதில் ஒருவகை பகட்டும், பலவீனமும் உள்ளடங்கி இருக்கும். ஆம், ‘நான் நல்லவன் என்று காட்டுவதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கி இருத்தல் ஒருவகை பகட்டுதான்’.

சீர்திருத்தம் என்று சொல்லி எதாவது ஒரு பணியில் ஈடுபட்டால் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டி வருமே; நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பது ஒருவகையில் பலவீனமே.

பொதுவாக மக்கள் நல்லவர்களையே விரும்புவார்கள். சீர்திருத்தவாதிகளை வெறுப்பார்கள். ஏனெனில், மனம்போன போக்கில் வாழ்பவர்களை சீர்திருத்தம் செய்து நல்வழிப் படுத்துபவர்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. மனித மனோபாவம் இது.

ஆகவேதான் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர் முஹம்மத் (ஸல்) என்ற தனி நபரை மக்கத்துக் குறைஷிகள் நேசித்தனர். அதிகம் விரும்பினர். ‘நம்பிக்கையாளர்’, ‘உண்மையாளர்’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர்.

அதேசமயம், இறைத்தூதராக அனுப்பப்பட்ட பின்னர் பொய்யர், மந்திரவாதி, குறிசொல்பவர், பைத்தியக்காரர் என்று ஏசிப்பேசி தூற்றினர். காரணம், முஹம்மத் (ஸல்) என்ற மனிதர் இப்போது சீர்திருத்தவாதியாக மாறிவிட்டார்.

முஹம்மத் (ஸல்) என்ற தனிநபர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் ஓர் அடிமையை விடுதலை செய்தான் அபூலஹப். அதேசமயம் அதே முஹம்மத் (ஸல்) அவர்கள் சீர்திருத்தவாதியாக மாறியபோது அவருடைய முகத்தில் மண்ணை அள்ளி வீசினான் அதே அபூலஹப்.

‘அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்ற ஒரு நல்ல மனிதர் நம்மிடையே வாழ்வது நமக்குப் பெருமை என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர் குறைஷிகள். அதே அபூபக்கர் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க நாடியபோது கண் எது மூக்கு எது என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து, போர்வையில் சுற்றி சுமந்து சென்று, ‘உயிர் இருந்தால் தண்ணீர் கொடுங்கள் பிழைத்துக்கொள்வார்’ என்று கூறி வீட்டிற்குள் வீசி எறிந்தனர் அதே குறைஷிக் குலத்தினர்.

உமைய்யா குலத்தாரிலேயே மிகவும் நல்லவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்). அப்போது அவர் தனிமனிதர். அதேசமயம் கலீபா எனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வருட காலத்தில் பெரும் புரட்சிகளையும் சீர்திருத்தங்களையும் செய்தபோது அதே நல்ல மனிதரை விஷம் கொடுத்துக் கொலை செய்தனர். காரணம் முந்தைய ஆட்சியாளர்களால் செய்ய முடியாத பெரும் பெரும் சீர்திருத்தங்களை இரண்டு வருட ஆட்சியில் இவர் செய்தமைதான்.

தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் உப தேசங்கள் மக்கள் மனங்களை மயக்கின. மக்களும் அவரை நேசித்தனர் என்பதெல்லாம் உண்மைதான். அதேநேரம் மக்களிடையே நிலவி வந்த இனவெறியையும், மாச்சரியங்களையும் வேரறுக்க நாடியபோது, ‘பிதா’ என்றும் பாராமல் சுட்டுக்கொன்றதும் இதே தேசம்தான். காரணம் பேச்சில் இருந்து இடம்பெயர்ந்து சீர்திருத்தப் பணிகளில் அவர் ஈடுபட்டமையே.

சீர்திருத்தவாதிகளுக்கு பேராபத்து காத்திருக்கும் என்பதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கியும் விலகியும் வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இந்த சமூகத்தில்தான் நாம் பிறந்துள்ளோம். எனவே இந்த சமூகத்தின் அவலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியதும் நமது கடமையே அன்றி வேறெவர் மீதும் இல்லை. இதற்காக இறைவன் இன்னொரு படைப்பினத்தை அனுப்பமாட்டான்.

ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(தான் உண்டு தன் வேலையுண்டு என்று) ஒதுங்கி வாழ்பவனைவிட, சமூகப் பிரச்சினைகளில் பங்கு கொண்டு மக்களின் ஏச்சுப் பேச்சுகளையும் ஏற்று வாழ்பவனையே அல்லாஹ் விரும்புகின்றான்’.

பனீ இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த மூன்று பிரிவினரைக் குறித்து திருக்குர்ஆன் பேசுகின்றது. ‘இறைக் கட்டளையை மீறியவர்கள் முதல் பிரிவினர். அவர்களைத் தடுத்தவர்கள் இரண்டாவது பிரிவினர். அவ்வாறு தடுக்க முற்பட்டவர்களை, ‘இதெல்லாம் வீண்வேலை’ என்று கூறி விலக்க முறப்பட்ட நல்லவர்கள் மூன்றாவது பிரிவினர்’.

சீர்திருத்தம் செய்த பிரிவினரைத் தவிர ஏனையோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் வேதனையும் சாபமும் ஒருசேர இறங்கியதாகவும், அப்போது மூன்றாவது பிரிவினரையும் சேர்த்தே அழித்துவிட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகின்றது. காரணம், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாக மட்டுமே வாழ முற்பட்டமைதான்.

“மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழுவினரிடம்) ‘எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்’ என்று பதில் கூறினார்கள். இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்”. (7:164,165)

‘ஆயிரம் நல்லவர்களைவிட ஒரு சீர்திருத்தவாதியையே அல்லாஹ் விரும்புகின்றான்’ என்று அரபியில் ஒரு முதுமொழி உள்ளது. மிகப்பெரும் நிதர்சன உண்மை இது. ஏனெனில், ஒரு சீர் திருத்தவாதி மூலம் ஒரு சமூகத்தையே அல்லாஹ் பாதுக்காக்கின்றான். அதேநேரம் ஒரு நல்லவர் நல்லவராக வாழ்வதன் மூலம் தன்னை மட்டுமே பாதுகாக்கின்றார்.

ஆகவேதான் அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்”. (11:117)

இந்த இறைவசனத்தை சற்று கவனித்துப் படித்துப் பாருங்கள். ஓர் உண்மை புலப்படும். நல்லவர்களாக இருந்தால் என்று கூறவில்லை. மாறாக, சீர்திருத்தம் செய்பவர்களாக இருந்தால் என்றுதான் கூறுகின்றான்.

அநியாயங்களும் அக்கிரமங்களும் பல்கிப் பெருகும்போது சீர்திருத்தவாதிகளைத் தேடி இந்த உலகம் தவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாகவே வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். அவர் களால் சமுதாயத்திற்கு எப்பயனும் இல்லை.

நல்லவராக இருந்தது போதும்!

சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்!!

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல். 

Next Story