நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை


நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை
x
தினத்தந்தி 11 April 2018 7:32 AM GMT (Updated: 11 April 2018 7:32 AM GMT)

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது சங்கர் நகர். சிமெண்ட் தொழிற்சாலையை தன்னகத்தே கொண்ட நகரம் இது.

சங்கர் நகரிலிருந்து கிழக்கே சீவலப்பேரி செல்லும் சாலையில் பாலாமடை என்னும் கிராமம் உள்ளது. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தெற்கு நோக்கி அக்ரகாரத்திற்குச் செல்லும் சாலை பிரிகிறது. அங்கு தான் ஞானியும் தீட்சிதருமான சித்தர் நீலகண்டர் அருள் பாலித்து வருகிறார்.

இவ்விடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமைதியான கிராமம். மூன்று புறமும், வயல்களில் நெற் மணிகள் அசைந்தாடுகிறது. ஒரு புறம் தாமிரபரணி சலசலவென நீரோடையாக ஓடுகிறது. எங்கும் அமைதி.. எதிலும் அமைதி.. அங்கு செல்லும் போதே நம்மையறியாமலேயே மனதிலும் அமைதி குடிகொண்டு விடுகிறது. இந்த அமைதியை தேடித்தான் நீலகண்ட தீட்சிதர் இங்கு வந்து அடங்கி விட்டார் என்று கோவில் அர்ச்சகர் கூறும் போதே நம்மையும் அறியாமல் உடலில் ஒரு அதிர்வு ஏற்படுகிறது.

பாலாமடை அரசு பள்ளி. அதன் இடது புறம் தான் அக்ரகாரம். தாமிர பரணியில் இறங்கி நீராட அழகிய படித்துறைகள். எதிரே இருபுறம் அமைதியின் இருப்பிடமாக அக்ரகாரத்தின் பழமையான வீடுகள் ரம்மியமாய் காட்சியளிக்கிறது. அதை கடந்து உள்ளே சென்றால் மிகவும் பழமையான காட்டாத்தி மரம் வளைந்து நெளிந்து நிற்க, ஸ்ரீமங்களம்பிகா சமேத ஸ்ரீமங்களாங்குரேஸ்வரர் ஆலயம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

ஆலயத்துக்குள் மேலக் கடைசியில் காசி விஸ்வநாதர் -விசாலாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அங்குள்ள லிங்கமூர்த்தியே, நீலகண்ட தீட்சிதர் அடங்கிய தலம். இவர் அடங்கியதால் தான் பாலாமடைக்கு ‘ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம்’ என்ற சிறப்பு பெயரும் வந்திருக்கிறது.

இன்றைக்கும் இவ்வூரில் ஒரு அபூர்வ சக்தி உண்டு. நீலகண்ட தீட்சிதர் தனக்கு உலக்கை சத்தம் கேட்காத ஒரு இடம் வேண்டும் என்று திருமலை நாயக்கரிடம் வேண்டி இவ்வூரை அமைத்தாராம். அதுபோலவே இந்த நவீன யுகத்திலும், எந்தவித இடையூறும் சத்தமும் இல்லாத அமைதியான கிராமமாக இவ்விடம் திகழ்கிறது. இவ்வூரில் உள்ள அக்ரகாரம் எல்லாம் திருவிழாக்காலங்கள் போக மற்ற நாட்களில் அமைதியாகத்தான் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் யாரும் நிரந்தர குடிகளாக வாழ்வதில்லையாம்.

நீலகண்ட தீட்சிதரை வணங்கும் அனைத்து பக்தர்களும் இன்று உலக அளவில் மிக முக்கிய பதவி வகித்து செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள். ஆனாலும் இவரை தரிசிக்க ஆராதனை நடைபெறும் மாதம் மட்டுமே, தனது குடும்பத்தோடு இங்கு வந்து சேர்ந்து விடு கிறார்கள். நீலகண்ட தீட்சிதரிடம் மனமுருகவேண்டி, வேண்டிய வரத்தினை பெற்றுச்செல்கிறார்கள்.

சரி.. இந்த நீலகண்ட தீட்சிதர் யார்? எங்கிருந்து வந்தார்? ஏன் வந்தார்? இந்த இடத்தினை எப்படித் தேர்வு செய்தார்?. அதை பற்றி காணும் போது தாமிர பரணி நதிக்கரையின் பெருமிதம் நமக்கு நன்கு புலப்படும்.

வேலூர் மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் நீலகண்ட தீட்சிதர். இவர் நாராயணாத்தரீ - பூமிதேவி எனும் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். தெய்வச்செயல்புரம் நாடி ஜோதிடத்தில் கிடைத்த நீலகண்டரின் ஜாதகத்தின் படி, இவர் ஜய வருடம், வைகாசி மாதம் 8-ந் தேதி (23.5.1594) பவுர்ணமி தினத்தன்று, திங்கட்கிழமை, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார் என குறிப் பிடப்படுகிறது.

ஆன்மிக உலகில் மிகப்பெரிய மகானாகவும், சமஸ்கிருதப் பாண்டித்யத்தில் மகாமேதையாகவும் விளங்கிய அடையபலம் அப்பைய தீட்சிதரின் தம்பியான ஆச்சா தீட்சிதரின் பேரனே இந்த நீலகண்ட தீட்சிதர். சிறுவயதிலேயே தம் பாட்டனாராகிய ஆச்சா தீட்சிதரையும், தகப்பனார் நாராணயத்தரீயையும் இழந்துவிட்டார். எனவே இவரையும் இவரது சகோதரர்கள் மற்றும் தாயாரையும் பெரிய பாட்டனாராகிய அப்பைய தீட்சிதரே ஆதரித்தார். நீலகண்டரின் அறிவாற்றலைக் கண்ட அப்பைய தீட்சிதர் அவர் மீது பேரன்பு காட்டினார். நீலகண்டருடைய பன்னிரண்டாவது வயதில் அப்பைய தீட்சிதர் தம் குடும்பத்தாருடன் சிதம்பரம் சென்றார்.

அப்பைய தீட்சிதர், வேலூரை ஆண்ட சின்ன பொம்ம நாயக்க மன்னரின் ராஜ குருவாக பல ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பைய தீட்சிதரும் மிகப்பெரிய சித்தரே. ஒருசமயம் வேலூர் மன்னன் சின்ன பொம்ம நாயக்கனின் விருப்பப்படி, அவன் உதவியுடன் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் ஆலயம், வேலூர் காலகண்டேசுவரர் ஆலய நற்பணிகளை செய்து முடித்தார். இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். அப்பைய தீட்சிதருக்கு கனகாபிஷேகம் செய்தான். விலை மதிக்கமுடியாத பொன்னாடையை அணிவித்து அவரை கவுரவித்தான்.

மறுநாள் காலையில் அப்பைய தீட்சிதர், பெரும் யாகம் ஒன்றை செய்தார். அந்த யாக குண்டத்தில் மன்னன் தமக்களித்த பொன்னாடையை போட்டு எரித்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘மன்னன் கொடுத்த பொன்னாடையை நெருப்பில் போட்டு விட்டாரே.. இவர் வேண்டுமென்றே மன்னனை அவமானப்படுத்துகிறார்’ என நினைத்தனர். அதுபற்றி மன்னனிடமும் தெரிவித்தனர். மன்னனும் மிகவும் மனம் வருந்தினார். இதுபற்றி தயக்கத்துடனே, அப்பைய தீட்சிதரிடம் கேட்டார் மன்னன்.

‘மன்னரே நீர் எனக்களித்த பொன்னாடை விலைமதிக்க முடியாதது. என்னை விட அதை அணியும் அதிக தகுதியுள்ளவர் சிதம்பரம் நடராஜர்தான். எனவே அவருக்கு அந்த பொன்னாடையை அளித்துவிட்டேன்’ என்று கூறினார். ஆனால் மன்னன் சமாதானமடைய வில்லை. இதை சோதித்து பார்த்து விடவேண்டும் என நினைத்தார். எனவே சில வீரர்களுடன் அன்றிரவே பயணம் செய்து அதிகாலையில் சிதம்பரத்தை அடைந்தார். அங்குள்ள குளத்தில் நீராடி ஆலயத்துக்குள் நுழைந்தார்.

அங்கு நடராஜபெருமானின் பூட்டி கிடந்த சன்னிதி முன்பு அர்ச்சகர்கள் பரபரப்புடன் காணப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, ‘மன்னரே! இன்று அதிகாலை வழக்கம் போல் நடைதிறக்க வந்தபோது, ஒரு அற்புதமான பொன்னாடை நடராஜரின் விக்கிரகத்தின் மேல் இருந்தது. எப்படி இது நிகழ்ந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை’ என்று கூறினர்.

மன்னனும் கூர்ந்து நடராஜரை கவனித்தார். அது அப்பைய தீட்சிதருக்கு மன்னன் அளித்த அதே பொன்னாடை தான். உணர்ச்சிவசப்பட்ட மன்னன், பக்தி பரவசத்துடன் நடராஜர் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினான்.

அந்த அளவுக்கு பெருமையாக விளங்கியவர் அப்பைய தீட்சிதர். இவர் தமது 72-வது வயதில் சிதம்பரத்தில் அடங்கியுள்ளார்.

அந்திமக் காலத்தில் தாம் பூஜித்து வந்த பஞ்ச லிங்கங்களை, நீலகண்டரிடம் கொடுத்து ஆசீர்வதித்தார். அப்பைய தீட்சிதர் கையால் பஞ்ச லிங்கம் பெற்றவர் தொடர்ந்து பல பெருமைகளைப் பெற்றார்.

பெரிய பாட்டனாரின் மறைவுக்குப் பின் தஞ்சாவூர் சமஸ்தானத்தை நீலகண்டர் அடைந்தார். அங்குதான் அவர் தமது படிப்பை விருத்தி செய்து கொண்டார். அங்கு மகா பண்டிதர் வேங்கடமகி என்பவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டார். ஸ்ரீ கீர்வாண யோகீந்திரர் என்பவர் நீலகண்டருக்கு ஸ்ரீ வித்யா உபதேசம் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் பல மகான்களை சந்தித்தார். அவர்களிடமிருந்து சாஸ்திர, வேத, வேதாந்த ரகசியங்களை நன்கு கற்றுணர்ந்தார்.

இதற்கிடையில் இருவர் திருமலை நாயக்கரின் அரண் மனையில் பணி அமர, ஒரு காரணம் ஏற்பட்டது. இந்த காரணமும் நீலகண்டரின் வம்சாவளி மூலமாகவே வந்தது என கூறலாம்.

அங்குதான் பல அற்புத நிகழ்வுகள் நடந்தது.

-சித்தர்களைத் தேடுவோம்.

Next Story