இனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு - 14.4.2018 தமிழ் வருடப்பிறப்பு


இனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு - 14.4.2018 தமிழ் வருடப்பிறப்பு
x
தினத்தந்தி 11 April 2018 7:54 AM GMT (Updated: 11 April 2018 7:54 AM GMT)

உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. அந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன்.

சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும். இப்படி சூரியன் மேஷராசியில் பயணிக்கத் தொடங்கும் நாளே ‘சித்திரை வருடப்பிறப்பு’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். ‘விஷூ’ என்பதற்கு, இரவும் பகலும் சமமானது என்று பொருள்.

இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். இது தவிர லட்சுமி கடாட்சமும், பிறவி துன்ப நீக்கமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்திரை விஷூ நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப்படும் ‘மருந்து நீர்’ தேய்த்து நீராட வேண்டும். பின்னர் ஆலயங் களுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும். மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.

சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.

சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில இங்கு...

* சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்தார். அன்றைய தினம் ‘மத்ஸ்ப ஜெயந்தி’யாகக் கொண்டாடப்படுகிறது.

*சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

* சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திரகுப்தர் தோன்றினார். ஒரு முறை சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அந்த ஓவியம் உயிர்ப்பெற்று வந்தது. அவரே சித்திரகுப்தர். இவரை உயிர்கள் செய்யும் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக எமதர்மனுக்கு உதவியாளராக சிவ பெருமான் நியமித்தார். இவர் எமதர்மனின் கணக்கராக இருந்து, பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வருவதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.

* சித்திரை மாத பவுர்ணமியில் தான், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

மஞ்சள் நீராட்டு

சித்திரை மாதத்திற்கு ‘சைத்ர மாதம்’ என்ற பெயரும் உண்டு. சைத்ர மகரிஷி பிறந்த மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது. மிகவும் புண்ணிய மாதமான சித்திரை, அம்மனுக்கு உகந்தது. எனவேதான் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வெயில் கூடுதலாக இருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து நம்மை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்விழாவின்போது மஞ்சள் நீராட்டு விழா நடத்துகின்றனர்.

சந்திரன் வழிபாடு

சித்ரா பவுர்ணமி தினத்தன்று இரவில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்தால், என்றும் நித்ய கல்யாணியாக (தீர்க்க சுமங்கலி) இருப்பர் என்பது ஐதீகம். அன்று இரவில் தம்பதியர் பரிபூரணமாக பிரகாசிக்கும் சந்திரனைப் பார்த்து, களங்கம் இல்லாத வாழ்வு கிடைக்க வேண்டினால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

கிரிவல நாள்

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி வாய்ந்தது. எனவே அன்றைய தினம் சத்யநாராயணர் மற்றும் சித்ரகுப்தரை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். இந்நாளில் கிரிவலம் வருவதால் உடலுக்கு புதுத்தெம்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக அருணாச்சலம் அருளும் திருவண்ணாமலை கிரிவலம் வாழ்வில் பல நன்மைகளை வழங்கும்.

நான்கு முக நடராஜர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நடராஜர், நான்கு முகங்களுடன் வித்தியாசமான கோலத்தில் உள்ளார். இவரை ‘குஞ்சிதபாத நடராஜர்’ என்கின்றனர். இவரது பாதத்திற்கு கீழே முயலகன் இல்லை. சித்ரா பவுர்ணமியன்று இவர் பரத்வாஜ முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவரை வழிபட்டால் குறைவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொன் வைக்கிற இடத்தில் பூ

‘பொன் வைக்கிற இடத்தில் பூ வையுங்கள்’ என்ற பழ மொழியை, நமது பெரியவர்கள் சொல்ல பலரும் கேட்டிருக்கலாம். இந்த வழக்கு மொழி எப்படி வந்தது தெரியுமா?

சித்திரை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் குபேரனுக்கு உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் 108 தங்கம் அல்லது வெள்ளிக்காசுகளால் மகாலட்சுமியை அர்ச் சித்து ‘லட்சுமி குபேர பூஜை’ செய்தால் வாழ்விற்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை பகவான் கொடுப்பதில்லை. எனவே வசதி இல்லாதவர்கள் தங்க காசுகளுக்கு பதிலாக 108 பூக்களால் பூஜித்தாலே போதும். அந்த பலன் கிடைத்து விடும். இதை முன்னிட்டு வந்ததே அந்தப் பழமொழி.

Next Story