மன்னன் மனதில் நினைத்ததை நடத்திக் காட்டிய சித்தர்


மன்னன் மனதில் நினைத்ததை நடத்திக் காட்டிய சித்தர்
x
தினத்தந்தி 17 April 2018 7:49 AM GMT (Updated: 17 April 2018 7:49 AM GMT)

பாலாமடையில் நீலகண்ட தீட்சிதரின் இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆராதனை, ஜெயந்தி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஒரு சமயம் விஜயநகர மன்னராகிய கிருஷ்ணதேவராயர், தனது துணைவியாருடன் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்தார். அப்போது அங்கிருந்த நீலகண்ட தீட்சிதரின் முப்பாட்டன் ஆச்சான், பாடல் ஒன்றை இயற்றி தேவராயரிடம் சமர்ப்பணம் செய்தார். அந்த பாடலின் பொருள் இதுதான். அதாவது தனது முன் லட்சுமியை போல் வந்து நிற்கும் அழகிய பெண்மணியை பார்த்து, வரதராஜ பெருமாள் தனது மார்பை தொட்டுப் பார்த்துக்கொண்டாராம். காரணம்.. சாட்சாத் லட்சுமி தேவி தான் தனது மார்பை விட்டு அகன்று தன் எதிரில் நிற்கிறாளோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். லட்சுமிக்கு உவமையாக தனது மனைவியை ஆச்சான் தீட்சிதர் குறிப்பிட்டதால் ஆனந்தம் அடைந்தார், கிருஷ்ண தேவராயர். அவருக்கு பட்டமளித்து கொண்டாடினார்.

இந்த சம்பவம் நீலகண்ட தீட்சிதரின் முன்னோர்கள் அந்த காலத்திலேயே கிருஷ்ணதேவராயருடன் நெருக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை நினைவுபடுத்தும் ஒன்று. ஆனால் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நீலகண்ட தீட்சிதர் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர் மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

மதுரையில் நாள்தோறும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொற்றாமரைக் குளக் கரையில் அமர்ந்து, தினமும் தேவி மகாத்மியத்தினை உரைப்பார். இதனால் பூரித்து போன அன்னை மீனாட்சி, தன்னுடைய பரி பூரண அருளை நீலகண்டருக்கு வழங்கினாள். அதே சமயம் அவரது உரையைக் கேட்ட பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நீலகண்ட தீட்சிதரின் புகழை அறிந்த திருமலை நாயக்கர், நீலகண்ட தீட்சிதரைப் பற்றி விசாரித்தார். அப்போது தன்னுடைய முன்னோர்களுடன் நீலகண்ட தீட்சிதரின் முன்னோர்களுக்கு பழக்கம் இருப்பதை அறிந்தார்.

இதையடுத்து நீலகண்ட தீட்சிதரை அழைத்த மன்னன், அவருக்கு அரசவை வித்வானாக பணி வழங்கினார். அப்பணியை மிக செவ்வேன செய்தார் நீலகண்டர். தொடர்ந்து இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து மந்திரியாக நியமித்தார் அரசன்.

நீலகண்டர் மந்திரியானவுடனேயே பல பணிகளை செவ்வனே செய்தார். மன்னருக்கு நல்ல பெயர்களை வாங்கி தரும் அருட் பெரும் செயல்களை மக்களிடையே கொண்டு சேர்த்தார். அனைவரும் நீலகண்டரை போற்றி புகழ்ந்தனர். இந்த காலகட்டத்தில் மதுரையில் பல ஆலயங்களில் திருப்பணி நடக்க ஆரம்பித்தது. மதுரையில் புதுமண்டபம் கட்டப்பட்டது. மண்டப நிர்மானத்தின் போது ஏகபாத மூர்த்தியின் சிலையைத் தாங்கிய தூணை அமைக்க ஏற்பாடு நடந்தது. இதற்காக சைவ, வைணவர்களிடையே பூசல் எழுந்தது. அப்போது சைவர்கள் சார்பாக நீலகண்ட தீட்சிதர் வாதாடினார். ஏகபாத மூர்த்தியைத் தாங்கிய தூணை மண்டபத்தில் இடம் பெறச் செய்தார்.

இப்படிப்பட்ட நீலகண்ட தீட்சிதரின் வாழ்வில் பெரும் துன்பம் ஒன்று வந்து சேர்ந்தது.

புதுமண்டபத்தின் தூண்களில் திருமலைநாயக்கர், தன் சிலையையும், தன்னுடைய மனைவியின் சிலையையும் செதுக்க ஏற்பாடு செய்தார். அதற்காக கைதேர்ந்த சிற்பியைத் தேர்வு செய்தார். அந்தச் சிற்பி பட்டத்து ராணியின் சிலையை செதுக்கினார். அப்போது சிலையில் தொடை பகுதியில் சிறு பிசிறு ஏற்பட்டது. இதனால் கவலை அடைந்த சிற்பி, வேறொரு கல்லைத் தேர்ந் தெடுத்து கவனத்தோடு பணியைச் செய்தார். அந்த கல்லை வடித்தபோது, அதே இடத்தில் அதே போன்ற பிசிறு ஏற்பட்டது. சிற்பி துடித்து போய்விட்டார். தன்னை அன்னை மீனாட்சி தான் காப்பாற்ற வேண்டும் என கோவிலுக்கு ஓடினார். செல்லும் வழியில் நீலகண்ட தீட்சிதரைச் சந்தித்தார்.

அவர் கால்களில் விழுந்து வணங்கி நடந்ததை உரைத்தார். உடனே நீலகண்ட தீட்சிதர், ‘ நீ கலைமகளின் பரிபூரண அருளை பெற்றவன். வடித்த சிலை அப்படியே இருக்கட்டும்' என்று கூறிவிட்டார்.

சிலை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. சிற்பியின் கை வண்ணத்தைக் கண்டு பலரும் வியந்து போற்றினர். ஆனால் மன்னன், சிலையின் தொடை பகுதியில் இருந்த பின்னத்தை கண்டு பிடித்து விட்டார். அவருக்கு ஒரே அதிர்ச்சி.. அந்த அதிர்ச்சிக்கு காரணமும் இருந்தது. உண்மையிலேயே பட்டத்து ராணியின் தொடை பகுதியில் அப்படியொரு காயம் இருந்தது.

கணவனான தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம், சிற்பிக்கு எப்படி தெரிந்தது என்பதே மன்னனின் அதிர்ச்சிக்குக் காரணம். சிற்பியால் இதை எப்படிச் செய்ய முடிந்தது. இதை வெளியேயும் சொல்ல முடியாது. எனவே தனியாக கூப்பிட்டு சிற்பியை விசாரித்தார். அந்த சிற்பியும் சிலையை தான் செதுக்கியது முதல், நீலகண்ட தீட்சிதர் சொன்னதுவரையான அனைத்து விஷயங்களையும் மன்னனிடம் தெரிவித்தார்.

நீலகண்ட தீட்சிதருக்கு, ராணியின் தொடை பகுதியில் தழும்பு இருப்பது தெரிந்த காரணத்தால் தான் அவர் ‘சரி இருக்கட்டும்’ என்று கூறியிருக்கிறார் என்று தவறுதலாக நினைத்தான் மன்னன். மந்திரியின் கண்களை பறித்து தண்டனை வழங்க வேண்டும் என்று நினைத்த மன்னன், மறுநாள் காலையில் காவலர்களை அனுப்பி நீலகண்ட தீட்சிதரை அழைத்து வரச் சொன்னான்.

அவரை அழைத்துவரச் சென்ற காவலர்கள், நீலகண்டர் நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்ததை கண்டு அறை வாசலிலேயே காத்திருந்தனர். பூஜை முடிவில் கற்பூர ஆரத்தியின் போது நீலகண்டர் அதிக கற்பூரத்தை வைத்து பெரிய தீ ஜூவாலையை உருவாக்கினார். அந்த ஒளிபொருந்தி ஜூவாலையை, தன் கண்களுக்கு நேராகக் காட்டி, தன்னுடைய கண் களைத் தானே குருடாக்கிக்கொண்டார்.

காவலர்கள் அதிர்ந்து போனார்கள், ‘மந்திரியாரே என்ன இது கொடுமை. ஏன் இப்படி செய்தீர்கள்?’ என்று கேட்டனர்.

நீலகண்டர் சிரித்துக்கொண்டே ‘நீங்கள் என்ன நினைத்தீர்களோ.. அதை மந்திரியே செய்து கொண்டார் என மன்னரிடம் போய் சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டார்.



அரண்மனைக்கு ஓடிய காவலர்கள், மன்னரிடம் இதை பற்றி கூறியவுடன் அவர் அதிர்ந்து போனார். ஓடோடி வந்து, நீலகண்ட தீட்சிதரின் காலில் விழுந்து வணங்கினார்.

‘அறியாமல் தவறான எண்ணம் கொண்டு விட்டேன் மந்திரியாரே. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று வேண்டினார்.

பின்னர், ‘நான் உமது கண்களைப் பறிக்க வேண்டும் என்று, எனது மனதுக்குள்தானே நினைத்தேன். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது’ என வினவினார்.

நீலகண்ட தீட்சிதர் சிரித்தபடியே, ‘அன்னை மீனாட்சியின் அருளால் எப்படி உன் பட்டதரசியின் தொடையிலுள்ள தழும்பை அறிந்தேனோ, அதே அருளால் தான்.. நீ என் கண்களைப் பறிக்கப்போகும் செய்தியையும் அறிந்தேன்' என்றார்.

‘நமக்கு மந்திரியாக இருந்தவர் சாதாரணமானவர் அல்ல.. மிகப்பெரிய சித்தர்’ என்பதை மன்னன் உணர்ந்தார்.

‘அய்யகோ.. நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன்’ என்று கதறித் துடித்தவர் நீலகண்டரின் கால்களில் விழுந்து, ‘மந்திரியாரே.. தாங்கள் மறுபடியும், நீங்கள் இழந்த கண்களை மீட்க அருள்புரியவேண்டும்’ என கண்ணீர் மல்கக் கேட்டார்.

தவறை உணர்ந்த மன்னனைக் கண்டு நீலகண்டர் மகிழ்ந்தார். பூஜை அறையில் அமர்ந்தார். அன்னை மீனாட்சியை நூற்றியெட்டு சுலோகங்களால் மனமுருகி துதித்தார்.

அறுபத்தொன்றாம் சுலோகத்தை அவர் பாடும்போதே அவரது கண்களின் ஒளி வந்து விட்டது.

‘அன்னையே! என்மீது அபரிமித கருணை கொண்டு, அளவற்ற அழகுடையதும், ஈடு இணையற்றதும், வர்ணிக்க முடியாததும், பரம மங்களமானதுமான உன் வித்தைகளை காட்டினாலும் எந்த கண்களால் அதனைக் காண்பேன்’ என்பது தான் அந்த சுலோகத்தின் தமிழாக்கம்.

நீலகண்ட தீட்சிதரை நினைவில் கொண்டு, அன்னை மீனாட்சியை எவரெவர் இந்த சுலோகத்தால் பக்தியுடன் துதிக்கிறார்களோ அவர்களுக்கு கண் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

அந்த சுலோகத்துக்கு ‘ஆனந்த சாகரஸ் தவம்’ என்று பெயர்.

நீலகண்டருக்கு கண்பார்வை கிடைத்தவுடனே அரசனும் மனம் தேறினான்.

அதன்பின் அவரிடம் மன்னிப்பு கேட்டு, ‘அய்யனே.. தாங்கள் மீண்டும் அரசவைக்கு வரவேண்டும்’ என அழைத்தார்.

ஆனால் தீட்சிதரோ.. ‘மன்னா.. எனக்கு அரசு சேவை அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது. என் மனம் இப்போது அமைதியை நாடுகிறது. தென்னகத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி ஓடும் இடத்தில் உலக்கை சத்தம் கேட்காத, கோழி கூவாத நிலையில் உள்ள ஒரு கிராமத்தினை உருவாக்கு. அந்த கிராமத்தில் ஒரு சிவலாயத்தை ஏற்படுத்தி தா. அந்த கிராமத்தில் நானும், என்னுடன் பல வேத விற்பனர்கள் குடியமர்ந்து இந்த உலகம் மேம்பட யாகங்கள் பல செய்கிறோம்’ என்று கூறினார்.

அரசனும் அவ்வாறே செய்து கொடுத்தான்.

மன்னனின் வேண்டுக்கோளுக்கிணங்க, அவன் மானியமாக அளித்த தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் தம் குடும்பத்தாரோடு குடியேறினார். அந்த இடம் தான் ‘பாலாமடை அக்ரகாரம்’ என அழைக்கப்படுகிறது.

அங்கிருந்து தினமும் இறைவனை ஆராதனை செய்தார், நீலகண்ட தீட்சிதர். இந்த உலகம் மேன்மையடைய பல யாகங்களை நடத்தினார். காலங்கள் செல்லச் செல்ல நீலகண்டரின் தனது இறுதி காலம் நெருங்கியதை அறிந்தார். 1664-ல் மார்கழி மாத சுக்ல பட்ச அஷ்டமியன்று சமாதி நிலை அடைந்தார்.

இவர் அடங்கிய இடத்தில் காசி விசுவநாதரையும், அருகில் தெற்கு நோக்கி விசாலாட்சி அம்மனையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். பாலாமடையில் நீலகண்ட தீட்சிதரின் இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆராதனை, ஜெயந்தி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

இன்றைக்கு இங்கே சென்றாலும் தீட்சிதர் வேண்டியபடியே மிக அமைதியாய் இந்த கிராமம் உள்ளது. தற்போதும் இங்கு தீட்சிதர் தவமேற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே அமைதியுடனே இங்கு வந்து, அவர் அருள் பெற்று செல்லவேண்டும். இவரை வழிபட்டால், கண்நோய், மனநோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இவ்விடத்திற்கு ஆட்டோவில் சென்று வர வாய்ப்பு உள்ளது. 

Next Story