மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு


மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு
x
தினத்தந்தி 17 April 2018 7:52 AM GMT (Updated: 17 April 2018 7:52 AM GMT)

அநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது.

மக்களுக்கு படிப்பினை தரும் இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“பின்னர், ’பூமியே நீ உன் தண்ணீரை விழுங்கி விடு. வானமே! மழை பொழிவதை நிறுத்திக்கொள்’ என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்து விட்டது. அக்கப்பலும் ஜூதி என்னும் மலையில் தங்கியது. ‘அநியாயம் செய்த மக்களுக்கு இத்தகைய அழிவு தான்’ என்று உலகமெங்கும் பறை சாட்டப்பட்டது”. (திருக்குர்ஆன் 11:44)

“எனினும் அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்து கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்”. (திருக்குர்ஆன் 29:15)

நூஹ் நபிகளை தன் தூதராக அல்லாஹ் அங்கீகரித்தான். அவருக்கு நபி பட்டம் கொடுத்து, ‘மக்களிடம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்று எடுத்துக்கூறச்செய்தான்.

இதன்படி அவரும் தன் மக்களை அழைத்து, “மக்களே நீங்கள் சிலை வணக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக்கொண்டு வணங்குங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.

ஆனால் அந்த மக்களோ, ‘நீங்கள் எங்களைவிட உயர்ந்தவர் கிடையாது. உங்களுக்கு எந்த சிறப்புத்தன்மையும் இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்க முடியாது’, என்றார்கள்.

கிட்டதட்ட 990 ஆண்டுகள் நூஹ் நபியின் பிரச்சாரம் தொடர்ந்தும் கூட ஒரு சிலரைத் தவிர மற்றவர் எவரும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவில்லை. அவரது சொந்த மகனே இதை ஏற்கவில்லை.

நூஹ் நபியவர்கள் இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா, நல்ல முறையில் உன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லியும் இம்மக்கள் அதனை புரிந்து கொள்ளும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு ஒரு நல்ல முடிவை நீ ஏற்படுத்துவாயாக’.

இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், நூஹ் நபி அவர்களுக்கு கீழ்க்கண்ட இறைச்செய்தியை அறிவித்தான்:

“முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.”

“நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). (திருக்குர்ஆன் 11:36,37)

அல்லாஹ்வின் கட்டளைப்படி நூஹ் நபியவர்களும் கப்பலைச் செய்தார்கள். அப்போது அங்கு வந்த அந்த மக்களின் தலைவர்கள் அவரை எள்ளி நகையாடினார்கள். “வான் மழை பார்த்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்ட நிலையில் இவர் எந்த வெள்ளத்துக்குப் பயந்து இந்த கப்பலை செய்கிறார்” என்று அவரை கேலி செய்தார்கள்.

கப்பல் செய்து முடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரான அந்த தருணத்தில் அல்லாஹ் விதித்திருந்த அந்த வேதனையும் இறங்க ஆரம்பித்தது. மீண்டும் நூஹ் நபியவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) வந்திறங்கியது.

“ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி “ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்ளுங்கள்” என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை”. (திருக்குர்ஆன் 11:40)

இதையடுத்து, நூஹ் நபிகளும் தன்னைச் சார்ந்த நல்லடியார்களை நோக்கி, “இதைச் செலுத்தவும், நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிக கருணையுடையவன் ஆவான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:41)

அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி எல்லாம் சரிவர நிறைவேறியதும் அவனது கட்டளை பிறந்தது. வானம் பொழிந்து தீர்த்தது. நிற்காமல் பெய்த மழையினால் பூமி முழுவதும் வெள்ளக் காடாயிற்று. அதிலிருந்து எவரும் தப்ப முடியாத அளவில் பூமியில் உள்ள அத்தனையும் அழிந்து போயின. கப்பலில் காப்பாற்றப்பட்ட நூஹ் நபியும் அவர்களைச் சார்ந்த நல்லடியார்களையும் தவிர.

ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும் என்ற படிப்பினையை இதன் மூலம் இறைவன் நிகழ்த்திக்காட்டினான்.

உலகில் எல்லாம் அழிவுற்ற நிலையில் அல்லாஹ்வின் கருணை (ரஹ்மத்) இறங்கத் தொடங்கியது. உலகில் உயரமான மலைகளுக்கும் மேலாக மிதந்து சென்ற அந்த கப்பல் வெள்ளம் முழுவதும் வடிந்த நிலையில் ஜுதி என்ற மலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையே திருக்குர்ஆன் (11:48) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி’ என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) “நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங்களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக”.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த உலக நிகழ்வு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியாக அல்லாஹ்வால் அருளப்பட்டது.

அந்த செய்தியும் உண்மை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மலை ஏறும் குழுவினர் சிலர் ஜுதி மலையில் ஏறியபோது, அதன் உச்சியில் பனிப்பாறைகளுக்கு இடையே பெரிய மரத்துண்டுகள் இருந்ததை கண்டறிந்தார்கள். இது நூஹ் நபியவர்கள் பயன்படுத்திய கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.

திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இந்த உண்மை உறுதியாகிறது. 

Next Story