பழமை தாங்கி நிற்கும் ஆதிமூலேசுவரர் ஆலயம்


பழமை தாங்கி நிற்கும் ஆதிமூலேசுவரர் ஆலயம்
x
தினத்தந்தி 17 April 2018 8:06 AM GMT (Updated: 17 April 2018 8:06 AM GMT)

இந்தத் தொடரில் மூலசேத்திரங்களில் ஒன்றான ஆதிமூலேசுவரர் ஆலயத்தைப் பற்றி பார்த்து வருகிறோம்.

பழமையும், பல பெருமைகளும் கொண்ட இந்த ஆலயத்தின் மேலும் சில சிறப்புகளை இந்தவாரம் பார்க்கலாம்.

மகத தேசத்தின் குசுமபுரத்தை அரசாண்ட சர்வார்த்தசித்தி என்பவனுக்கு, இளை, முறை என்று இரண்டு மனைவிகள். சிவ பக்தைகளான இருவரும் குழந்தைபேறு வேண்டி சிவனை வணங்கினர். சிவபெருமான் ஆண்டி வேடத்தில் வந்து தெளித்தநீர் இளையின் மீது ஒன்பது துளிகளும், முறையின் மீது ஒரு துளியும் விழுந்தது. இருவரும் கர்ப்பமுற்றனர். அதீதபக்திக் கொண்ட முறைக்கு மவுரியன் என்னும் மகன் உதித்தான். தனக்கு பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அம்மிக்குழவியை எடுத்து இளை, தன்னுடைய வயிற்றில் இடித்துக்கொள்ள வயிற்றில் வளர்ந்துக் கொண்டிருந்த கரு ஒன்பது துண்டு களாயிற்று. முதன்மந்திரி ராட்சசன் மந்திரம் ஜெபிக்க அவை ஒன்பதும் புத்திரர்களாயினர். அவர்களுக்கு ‘நவநந்தர்கள்’ என பெயரிட்டனர்.

நவநந்தர்களுக்கும் பதினாறு வயதானவுடன் அரசர்களாக பட்டம் சூட்டி, முறையின் மைந்தன் மவுரியனை மந்திரியாக்கிவிட்டு மனைவி இளையுடன் வனத்திற்குச் சென்றான் சர்வார்த்தசித்தி. மவுரியனுக்குப் பிறந்த நூறு பிள்ளைகளில் இளையவன் சந்திரகுப்தன், சிறந்த புத்திசாலி. இவன் ராஜ்ஜியத்தில் பல உத்தியோகங்களைப் பெற்றான். ஒருநாள் பனை மரத்தில் பாதி உயரமும், எலும்பும் தோலுமாய் பசிக்களைப்புடன் வந்த சாணக்கிய முனிவரை வணங்கி, அவர் உணவருந்த ஏற்பாடு செய்தான்.

ஏற்கனவே நவநந்தர் களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட சாணக்கியர், தன்னை வரவேற்று உபசரித்தது யாரென்பதை அறிந்ததும், நவநந்தர்களை சிம்மாசனத்திலிருந்து அகற்றிவிட்டு சந்திரகுப்தனை அரசனாக்குவது என முடிவுசெய்தார்.

அதன்படி தன்மதியூகத்தால் நவநந்தர்களை தந்திரமாக வீழ்த்தி, சந்திரகுப்தனை அரசனாக்கினார். பட்டமேற்ற சந்திரகுப்தன் சாணக்கியரின் வழிகாட்டலில் பல அதிரடி செயல்பாடுகளை மேற்கொண்டு அரசை வழிநடத்தினான். சாணக்கியர் தன் ராஜதந்திரத்தால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, காசியில் நாய் மாமிசத்தைக் கொண்டு யாகம் செய்ய முற்பட்டார். அதை ஏற்க விரும்பாத அக்னி பகவான் வாருணஸ்தலம் வந்துவிட, சாணக்கியர் தனது 64 சீடர் களுடன் வருணாபுரிக்கு வந்து ஆதிமூலேசுவரரை வணங்கி பாவம் நீங்கப்பெற்றார். அதன்பிறகு இங்கேயே தங்கி முக்தியும் அடைந்தார்.

சந்திரகுப்தன், தன் குருநாதரை சந்திக்க வந்தபோது அவர் சமாதியுற்றதைக் கேட்டு துயருற்றான். அவர் ஆத்மா சாந்தியுறும் பொருட்டு ஆதிமூலேசுவரர் ஆலயத்தில் சனி பகவானுக்கு தனிசன்னிதி அமைத்து வணங்கி சிறப்பு பூஜைகள் நடத்தியதுடன், தன் குருநாதர் சமாதியுற்ற இடத்தில் விநாயகர் ஆலயம் எழுப்பினான். இங்குள்ள விநாயகர் ஆலயம் சாணக்கியரின் சமாதியாகவும், அதற்கு முன்னால் வேப்பமரத்தின் கீழ் இடிந்து கிடக்கும் மண்டபம் சந்திரகுப்தன் மற்றும் அவன் மனைவி நிம்மவையின் சமாதியாகவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

(சந்திரகுப்த மவுரியன் இறுதிகாலத்தில் சமணத்தை தழுவி, கர்நாடகத்தின் சிரவணபெலகுலாவில் இயற்கை எய்தியதாக செய்தியுண்டு. ஆனால் தன் குருவைத்தேடி வருணாபுரி வந்து ஆதிமூலேசுவரரை வணங்கி, குருவுக்கு ஆலயம் எழுப்பி இறுதி காலத்தை இங்கேயே கழித்து சமாதியடைந்ததாகவே இந்த ஆலய தலவரலாற்றில் இடம்பெற்றுள்ளது)

சித்திரகுப்தனுக்கு பதவி

எமனின் உதவியாளரான சித்திரகுப்தனுக்கும் இந்த ஆலயத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. விரிஞ்சிபுரத்தில் வாழ்ந்த வசுதத்தன் என்ற சிவபக்தன், பிள்ளைவரம்வேண்டி ஈசனை வணங்கி வந்தான். ஒரு நாள்.. ‘வருணாபுரி சென்று சோமாஸ்கந்த மூர்த்தியை வணங்கு’ என்று ஒரு அசரீரி ஒலித்தது. வசுதத்தனும் அப்படியேச் செய்ததன் பலனாக, இறையருளால் அவனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு சித்திரகுப்தன் என்று பெயரிட்டான்.

இக்குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தபோது, இவனுக்கு பன்னிரண்டு வயதில் ஒரு விபத்து வரும் என்று கூற பெற்றோர் துயரப்பட்டனர். சித்திரகுப்தன் அவர்களுக்கு தைரியம் சொல்லி, ஒவ்வொரு சிவத் தலமாக சென்று வழிபாட்டை மேற்கொண்டான். வாருணஸ்தலம் வந்து ஆதிமூலேசுவரர், அமிர்தவள்ளி மற்றும் நீலகண்டசுவாமியை வணங்கும்போது, அவனுக்கு பன்னிரண்டு வயதான சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் எமன் வந்தான்.

அம்பாள், எமதர்மனின் முன்பாகத் தோன்றி அவனைக் கடிந்து கொண்டாள். தன்னைக்காத்த அம்பாளை, சித்திரகுப்தன் பணிந்து வணங்கினான். சிவபெருமான், சித்திரகுப்தனை எமனிடம் ஒப் படைத்து, அவனை உதவியாளனாக வைத்துக்கொள்ளச் சொன்னார். அதன்படி எமதர்மனின் உதவியாளராக இருந்து, இறந்தவர் களின் பாவபுண்ணிய கணக்குகளைப் பார்த்து வந்த சித்திரகுப்தன், ஒருசமயம் ஒருவனைத் தண்டிக்க கணக்குக்காட்டுகையில் அவனிடம் சிவபுண்ணியம் இருந்ததை மறந்து விட்டார். பின் தன் தவறுக்கு பிராயசித்தம் தேடி அர்த்தஜாம வேளையில் ஆதிமூலேசு வரரை தஞ்சமடைந்து வணங்கினார். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் இன்றளவும் இறைவனுக்குச் செய்யப்படும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகே, சித்திரகுப்தனுக்கு பூஜை செய்யப்படுகிறது. அதன்பின்னர்தான் நடைசாத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆலய அமைப்பு

பல ஆலயங்களுக்கு மூலக்கோவிலாக விளங்கும் ஆதிமூலேசுவரர் ஆலயம், யாரால் எப்பொழுது கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் அவ்வப்போது ஆட்சிசெய்த மன்னர்கள், ராஜபிரதானிகள், ஆன்மிக அன்பர்கள் என பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதை ஆலய கட்டுமானங்களில் இருந்து அறியமுடிகிறது.

கிழக்குநோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், பாண்டிய மன்னன் ஒருவனால் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக கோபுரத்தின் விதானத்தில் மீன் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திமண்டபம் அமையப்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து வசந்தமண்டபத்தில் விநாயகர், முருகன் மற்றும் நால்வர் திருமேனிகள் உள்ளன. மகாமண்டபத்தின் வடபகுதியில் புதிய சன்னிதியில் ஆடல்வல்லானும், உற்சவ திரு மேனிகளும் இடம்பெற்றுள்ளன.

அர்த்தமண்டபத்தை அடுத்த கருவறைக்குள் அனைவரையும் ஈர்க்கும் அழியாப் பரம்பொருளாகவும், மனதைவிட்டு அகலாத மகாலிங்கமாகவும் ஆதிமூலேசுவரர் அருள்பாலிக்கிறார். கருவறைச் சுற்றின் தென்பகுதியில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா ஆகியோர் விற்றிருக்கின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தநிலையில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி இவ்வாலயத்தில் கல்லால மரத்தின் கீழ் ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரரும், துர்க்கையும் அருள்கின்றனர். அருகில் தலவிருட்சமான வில்வம் இருக்கிறது.

பிரகாரச்சுற்றின் தென்பகுதியில் நீலாயதாட்சி சமேத நீலகண்டசுவாமி சன்னிதி, அருகே சித்தி விநாயகர் சன்னிதி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. அமிர்தவள்ளி அம்மன் தனிச் சன்னிதியில் கிழக்குநோக்கி நின்றகோலத்தில் தேஜஸ்வினியாக காட்சியளிக்கிறார். அவருக்கு நேர் எதிரில் சூரியகுமாரன் சாவன்னி ஏற்படுத்திய அமுதசரசு என்னும் கிணறு அமைந்துள்ளது.

தென்மேற்கில் அகத்தியர் சீடர்கள் பிரதிஷ்டை செய்த ராமலிங்கர் சன்னிதியில் அவரருகே நாகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வாகனமண்டபமும், மேற்கில் அகத்தியர் ஸ்தாபித்த விசுவ நாதர் சன்னிதியும், வடமேற்கில் கஜலட்சுமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் யாகசாலை மண்டபமும், அதனையொட்டி சித்திரகுப்தன், பைரவர், சூரியன் மற்றும் நவக்கிரக சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நவக்கிரகங்களுக்கு நேர் எதிரில் வசந்த மண்டபத்தின் அருகே சந்திரகுப்த மவுரியர் பிரதிஷ்டை செய்த சனி பகவானின் தனிச் சன்னிதி இருக்கிறது.

சுவாமி மற்றும் அம்பாள் இருவரின் கருவறை கோபுர விமானம், மற்ற கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சதுர அடுக்கு வடிவில் அமைந்துள்ளது. இதுபோன்ற அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியவில்லை. ஆலயத்திற்கு வெளியே தென் கிழக்கில் கோபுரத்தை ஒட்டி விஷ்ணு உருவாக்கிய நந்தவனம் காணப் படுகிறது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தன்னுடைய பழமையை இழந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

அமைவிடம்

கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட பு.முட்லூரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. இதன் அருகிலேயே ஆலயம் அமைந்திருக்கிறது. சிதம்பரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. 

Next Story