விடுதலை தருகிற இயேசு


விடுதலை தருகிற இயேசு
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 18 April 2018 9:54 AM GMT)

ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொரு வருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே.

இந்த பூமியில் நடந்த மூன்று பெரிய சரித்திரப்பூர்வமான சம்பவங்கள், 1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, 2. சிலுவையில் ஜீவபலியாக மரித்த சம்பவம், 3. இயேசு உயிர்த்தெழுந்தது.

இவை அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள். இதில் ஒன்று தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.

அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி எழக்கூடும். உண்மையிலேயே ரோம சேவகர்கள் தங்கள் பலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. மனிதகுலத்திற்காக தம்மைத்தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார்.

பாவங்களிலிருந்து விடுதலை

ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொரு வருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே.

வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ (ஏசாயா 53:5).

‘நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று வேதம் கூறு கிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதுமாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், சங்கீதம் 32:5-ல் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்’ என்றேன். ‘தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ என தெளிவாக கூறுகிறார்.

ஆகவே நாம் செய்கிற தேவன் விரும்பாத அனைத்து காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.

நோயிலிருந்து விடுதலை

‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’ (மத்தேயு 8:17).

ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பலவீனங்களையும், ஒவ்வொரு நோய் களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.

அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பலவீனங்களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தர வல்லவராயிருக்கிறார்.

இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.

வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ (III யோவான் 2)

மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா? நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல, ‘நம் முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசாயா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.

தரித்திரத்திலிருந்து விடுதலை

‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே’ (II கொரிந்தியர் 8:9)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

நம்முடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெரிய வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய நம்முடைய தேவன் ஐசுவரியமுள்ளவர். ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது’ என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படியானால் ஒருவேளை தரித்திரம் அல்லது கடன்பாரம் நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அதைப் போக்குவதற்கு வழிகளை தேவன் கொடுத்துள்ளார். அந்த வழிகள் என்ன?

1. உங்கள் கண்கள் கர்த்தரையே நோக்க வேண்டும், மனிதனை ஒருநாளும் நம்பாதீர்கள்.
2. உங்கள் செலவு உங்கள் வருமானத்திற்குள் அமைய வேண்டும்.

3. வீணான ஆடம்பரம் வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து, அவர்களைப் போல வாழ வேண்டும் என விரும்பாதீர்கள்.

4. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை உற்சாகமாக கர்த்தருக்கென்று கொடுத்து லூக்கா 6:38-ன்படி பலமடங்கு ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.

உங்கள் வாழ்வில் இதை அப்பியாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் பொருளாதார வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54

Next Story