சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்


சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
x
தினத்தந்தி 1 May 2018 4:28 AM GMT (Updated: 1 May 2018 4:28 AM GMT)

பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

ன்னை ஆதிபராசக்தியின் அம்சத்தில் இருந்து உருவானவர்கள் ‘சப்தகன்னியர்’. சண்ட, முண்டர்கள் என்னும் இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக, கர்ப்பத்திலோ, ஆண்-பெண் இணைவிலோ பிறக்காமல், அம்பாளின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள். இவர்களே ‘சப்த கன்னிகள்’, ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

பிராம்ஹி

மேற்கு திசைக்கு அதிபதியாக இருப்பவள் பிராம்ஹி. இவள், பராசக்தியின் முகத்தில் இருந்து உருவானவள். கலைவாணி என்று அழைக்கப்படும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாக இவள் பார்க்கப்படுகிறாள். எனவே இவள் அன்னவாகனத்தில் வீற்றிருப்பாள். மான் தோலை தன் மீது அணிந்திருக்கும் இந்த அன்னை, ஞானத்தை வழங்கி அஞ்ஞானத்தை அகற்றுபவள்.

‘ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்’

என்ற பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும். கல்வி பயிலும் மாணவர்கள், முக்கியமான தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இந்தக் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை, மேற்கு நோக்கி அமர்ந்தபடி உச்சரித்து வந்தால் பலன் கிடைக்கும்.

மகேஸ்வரி

வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.

‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.

வைஷ்ணவி

செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.

சாமுண்டி

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள். பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை.

‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

வராஹி

வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள். எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.

இந்திராணி

தன்னை வழிபடுபவர்களின் உயிரைக் காப்பதிலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும் இந்த அன்னை சிறப்புக்குரியவள். மேலும் கணவன்-மனைவிக்குள் தாம்பத்ய சுகத்தைத் தருபவளும் இந்த அன்னையே. இவளை முறையாக வழிபாடு செய்யும் திருமணமாகாத ஆண்களுக்கு, குணத்தில் சிறந்த மனைவியும், திருமணமாகாத பெண்களுக்கு குணத்தில் சிறந்த கணவனும் அமைவர்.

‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

கவுமாரி

கவுமாரன் என்றால் குமரன் என்று பொருள். குமரன் என்பது முருகக்கடவுளைக் குறிக்கும். ஈசனாலும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் குமரக்கடவுள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அம்சம்தான் இந்த கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயிலை வாகனமாக கொண்ட இந்த அன்னை, அஷ்ட திக்குகளுக்கும் அதிபதியாவாள். இவளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

‘ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கெளமாரி ப்ரசோதயாத’

என்ற கவுமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Next Story