சகல தோஷங்களும் போக்கும் கேடிலியப்பர்
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இந்தப் பெயர் திருநாவுக்கரசரின் ‘ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை...’ என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து ‘வட பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத் தலம், தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.
முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.
அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும் என்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.
குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு
கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக் கோவில்களில், கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோவில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி யளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார். கட்டுமலை மீதுள்ள சன்னிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம்.
அடுத்துள்ள சோமாஸ்கந்தர் திருச்சன்னிதியில் தட்சிணாமூர்த்தி, பத்ரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்களையும், மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவர், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
முருகப்பெருமானின் பூஜைக்கும், தவத்துக்கும் கெடுதல் உண்டாகாதவாறு காவல்புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புணுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இந்தப் பெயர் திருநாவுக்கரசரின் ‘ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை...’ என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் ‘கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர்’ என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப்பெருமான், பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங் களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
Related Tags :
Next Story