மரபுகளும் சட்டங்களும்


மரபுகளும் சட்டங்களும்
x
தினத்தந்தி 4 May 2018 9:52 AM GMT (Updated: 4 May 2018 9:52 AM GMT)

மரபுகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற விதிகளைக் கற்றுத் தந்தார். மனித குலத்துக்கு அவர் வழங்கிய போதனைகள் அனைத்தும் நமது சிந்தனைகளுக்கு மேற்பட்டவையாக இருக்கின்றன.

இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த அறிவார்ந்த யூத சமூகத்தில் இழையோடிக் கிடந்த பழமையான எண்ணங்களைத் தூக்கி எறியுமாறு வற்புறுத்தினார்.

மரபுகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார். நாம் எப்பொழுதும் பழம்பெருமை பேசிக்கொண்டு, பாரம்பரிய மரபு களைத் தூக்கி நிறுத்த ஆசைப்படுகிறோம்.

நம் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பலவற்றை தொடர்ந்து செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்து இத்தகைய வழக்கத்தை கண்டிக்கிறார்.

ஒருமுறை பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம் சீடர்கள் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்தும்முன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.

யூதர்கள் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை. சந்தையில் இருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் பல இருந்தன.

இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் கடவுளின் கட்டளை களைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும், ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கடவுளுக்கு காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு உங்கள் மரபை நிலைநாட்ட கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து, நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று கண்டித்தார்.

பின்னர் இயேசு தம் சீடர்களிடம், “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது” என்றார்.

மேலும் “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில், பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச் செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைத் தூண்டும் தீய எண்ணங்கள் அனைத்தும் உள்ளத்தில் இருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று அவர் கூறினார். (மாற்கு 7:1-23)

இவ்வாறு, மூதாதையரின் மரபுகள் என்ற பெயரில் கடவுளுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்வது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டினார். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் மனித மாண்பு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, அது கடவுளுக்கு மாட்சியை ஏற்படுத்தும். மனித மாண்பைக் குலைக்கும் வகையிலான எந்தவொரு மரபும் சட்டமும் கடவுளுக்கு எதிரானதே என்று இயேசு வலியுறுத்தி கூறினார்.

மனிதர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அவற்றுக்கு துணைபோகின்ற சட்டங்களும் குப்பை போன்றவை என்று இயேசு அழுத்தமாக எடுத்துரைத்தார்.

ஓய்வு நாளை யூதர்கள் ஆண்டவரின் புனித நாளாக கருதி வந்தனர். அந்த நாளில், மற்றவருக்கு உதவி செய்வது உள்ளிட்ட எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்பதை சட்டமாக கடைப்பிடித்தனர்.

இத்தகையச் சூழலில், உடல் நலமற்ற ஒருவரை இயேசு ஓய்வு நாள் ஒன்றில் குணப்படுத்தியதால், சமயத் தலைவர்கள் சினமுற்றனர்.

அவர்களிடம் இயேசு, “ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?” என்று கேள்வி எழுப்பி அவர்களை மடக்கினார்.

மற்றொரு ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கொண்டே வழி நடந்தனர்.

அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீது அரசர் உணவின்றிப் பசியாய் இருந்தபோது, இறை இல்லத்திற்குள் சென்று, குருக் களைத் தவிர வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? அவர் தேவைக்காக சட்டத்தை மீறி முடிவெடுத்தார். அவ்வாறே, ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்று அவர்களிடம் கூறினார். (மாற்கு 2:23-28)

இவ்வாறு, சட்டங்களும் மரபுகளும் மனிதருக்கு கட்டுப்பட்டவை என்று ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார்.

மனிதரின் நன்மைக்காக ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுகளும் சட்டங்களும், மனிதருக்கு தீமை விளைவிக்கின்ற காலம் வரும்போது தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே இயேசுவின் போதனை.

ஒரு சமூகத்தின் நன்மைக்கும் மேன்மைக்கும் கருவியாக சட்டம் இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களை ஒடுக்குவதாக அது இருக்கக்கூடாது என்பதே அவரது அறிவுரை.

மரபுகளைக் கைவிட்டு மனித நேயத்தை முன்னிறுத்தினால், இயேசு கிறிஸ்து விரும்பிய அழகிய உலகை நம்மால் உருவாக்க முடியும்.

டே. ஆக்னல் ஜோஸ் 

Next Story