நாரத முனிவர் வழிபாடு செய்த ஆலயம்


நாரத முனிவர் வழிபாடு செய்த ஆலயம்
x
தினத்தந்தி 11 May 2018 1:15 AM GMT (Updated: 10 May 2018 11:12 AM GMT)

தெய்வங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன.

புராணங்களில் முக்கியமானவையாக பதினெண் புராணங்கள் திகழ்கின்றன. இவை தவிர்த்து பல புராணங்கள், தெய்வங்களின் பெருமைகளையும், புராண சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பக்தர்கள் மனம் லயிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நாராதரைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் நாராதீயப் புராணமும் ஒன்று.

ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரக்கூடிய அற்புத சக்தி படைத்தவர் நாரத முனிவர். இவர், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் எப்போதும் இவரது நாவில் இருந்து ‘நாராயண... நாராயண..’ என்ற திருநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவர் தொடங்கும் கலகம், உலக நன்மையின் பொருட்டே இருக்கும் என்பது பல புராணங்கள் தெரிவிக்கும் கருத்து.

நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது.

தல வரலாறு

படைப்புக் கடவுளான பிரம்மாவும், அவரது புத்திரரான நாரதரும் ஒரு முறை, உயிர்களின் உருவாக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரம்மா சொன்ன கருத்து நாரதருக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே அவர் தந்தையின் கருத்தை மறுத்துப் பேசத் தொடங்கினார். அதனால், அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மா, மகனென்றும் பாராமல் நாரதரைத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சாபம் கொடுத்தார்.

தன் தந்தை கொடுத்த சாபத்தின்படி பிரம்மலோகத்தில் இருந்து பூலோகம் வந்த நாரதர், மன அமைதியைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும் கிைடக்காத மன அமைதி, ஒரு இடத்தில் கிடைத்தது. அந்த இடத்தில் நாரதர், தன்னுடைய விருப்பத்திற்குரிய தெய்வமான விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினார்.

அவரது நீண்டகாலத் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, நாரதருக்குக் காட்சியளித்தார். நாரதர் தனக்கு காட்சி தந்த விஷ்ணுவிடம், ‘இறைவா! எனக்கு அனைத்து உயிர்களின் உருவாக்கம் குறித்தத் தத்துவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். விஷ்ணுவும் அவர் கேட்ட ஞானத்தை அவருக்கு வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர், தனக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருளும்படி விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் நாரதரின் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டார்.அதனைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவ்விடத்தில் தான் விஷ்ணுவை வழிபட்ட முறை, அவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் போன்றவைகளைப் பூலோக மக்களுக்கு அளிக்கும் எண்ணத்துடன் நான் காயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது. இந்த நாரதீய புராணத்தில் விஷ்ணுவின் மகிைம, நாரதருக்கு விஷ்ணு அளித்த கருணை உள்ளிட்ட பல சிறப்புகள் சொல்லப்பட்டிருகின்றன.

பிற்காலத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி, வழிபாடுகள் இல்லாமல் போனது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.

கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் இறைவன் ‘பாம்பணையப்பன்’, ‘கமலநாதன்’ எனும் பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.

இந்தப் பகுதியில் ஒரு இடத்தைத் தோண்டும்போது ஒரு கிருஷ்ணர் சிலை கிடைக்கப்பெற்றது. அந்தச் சிலையைக் கொண்டு வந்து, இந்த ஆலயத்தின் வளாகத்திற்குள் வைத்து புதிய சன்னிதி களும், மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. நின்ற கோலத்தில் வெள்ளித் திருவாபரணம் அணிந்து காட்சியளிக்கும் இவரைக் கோசாலை கிருஷ்ணன் என்றழைக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, சிவன், நாகர் சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தக் கோவிலின் மேற்கு நுழைவுவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரத்தின் மேற்பகுதியில் காளிங்கன் மீது கண்ணன் நடனமாடுவது போன்ற அருமையான சிற்பம் இருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவின் பத்துத் தோற்றங்களிலான (தசாவதாரக் காட்சி) சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நுழைவுவாசலின் முன்புறச் சுவரில் ஒரு பகுதியில் அனுமன், மற்றொரு பகுதியில் கருடன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாடுகள்

இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது.

இவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் செங்கணூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவண்வண்டூர் திருத்தலம். இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

- தேனி மு.சுப்பிரமணி


ஆலய சிறப்புகள்

•    விஷ்ணுவின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், இது 75-வது திவ்யதேசமாக இருக்கிறது.

•    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், இத்தலத்து இறைவனைப் பற்றிப் பத்துப் பாசுரங்களில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்.

•    இந்தக் கோவில் இறைவனை வழிபாடு செய்தால், வேண்டியது அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

•    இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர்.

•    குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத்தொட்டில்கள் வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.

Next Story