திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்


திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 27 May 2018 11:15 PM GMT (Updated: 27 May 2018 7:47 PM GMT)

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 19-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவர்களான திரிபுரசம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 8 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தருளினர்.

பின்னர் தேரில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.

8.15 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் பண்ருட்டி முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ஜெயசித்ரா, வக்கீல் எம்.சி.தண்டபாணி, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், தொழில் அதிபர்கள் சந்திரசேகர், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் வைரக் கண்ணு, மீனா ஜூவல்லர்ஸ் பத்மநாபன், தேவநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், கோவிந்தன் மற்றும் கே.என்.சி. மோகன், வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி திருவதிகை பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.

பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்களது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

10-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் உற்சவமும், தீர்த்தவாரி உற்சவமும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது.

Next Story