பாவம் பின்தொடரும்
உயிர் கடவுளுடையது என்பதால், ரத்தம் சிந்தப்படும் போது அது கடவுளை நோக்கி குரல் எழுப்புகிறது எனும் சிந்தனையை விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
ஆதிமனிதன் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறிய காரணத்தால் ஏதேனை விட்டு கடவுளால் வெளியேற்றப்படுகிறார்கள். ஏதேனை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.
இருவரும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருமுறை ஆபேல் தனது மந்தை யிலிருந்து கொழுத்த தலையீற்று ஆடுகளைக் கடவுளுக்குப் பலிகொடுக்கிறான். கடவுள் அவனையும் அவன் பலியையும் அங்கீகரிக் கிறார்.
காயின் காய்கறிகளைப் பலியிடுகிறான். அவனையும் அவன் பலிகளையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட காயீன் கடவுளின் எச்சரிப்பையும் மீறி ஆபேலைக் கொன்று விடுகிறான். இப்போது ஆபேலின் ரத்தம் பூமியிலிருந்து நீதிக்காக கடவுளை நோக்கி கதறுகிறது. கடவுளின் தண்டனை காயின் மேல் விழுகிறது.
இது தொடக்ககால மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கதை.
இந்த நிகழ்வு, ‘ரத்தம் குரலெழுப்பி நீதிகேட்கும்’ எனும் வலிமையான உண்மையை நமக்கு விளக்குகிறது. கடவுள் தந்த வாழ்வான உயிரை நாம் அழிக்கும் போது, அது கடவுளை நோக்கி விண்ணப்பிக்கிறது. கடவுளும் செவி கொடுக்கிறார்.
‘ஆபேல் காயீனுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார்’ (எபி.11:4) என்கிறது பைபிள். ஆபேலின் பலி, உயிர்ப்பலியாய் இருந்தது கூட அதன் காரணமாய் இருக்கலாம்.
இதற்கு முன்பே ஒரு பலி, ஒரு ரத்தம் சிந்துதல் ஏதேனில் நடந்தது. அது தான் முதல் ரத்தம். ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறினர். அப்போது தாங்கள் நிர்வாணிகள் எனும் நிலையை புரிந்து கொண்டனர். இலைகளால் தங்களை மூடிக்கொண்ட அவர் களுக்காக இறைவன் தோல் ஆடையை கொடுக்கிறார். அதற்காக ஏதோ ஒரு விலங்கு தனது உயிரை விட்டிருக்க வேண்டும். அது தான் முதல் ரத்தம் சிந்துதல் நிகழ்வு.
அந்த பலி, பாவங்களை மறைப்பதன் அடையாளம். அது நமது மீட்புக்கான அடையாளம்.
காயீன் குற்றம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த உடனே கடவுள் அவனை தண்டிக்கவில்லை. அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். எச்சரிக்கையின் ஒலியை அனுப்புகிறார்.
“நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?. நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என கடவுள் மிகத்தெளிவான எச்சரிக்கையை காயீனுக்குக் கொடுக்கிறார். ஆனால் காயீன் அதற்குச் செவிகொடுக்கவில்லை.
போதுமான அளவுக்கு கால அவகாசம் கொடுத் திருந்தும் அதை காயீன் கண்டுகொள்ளவில்லை. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆபேலைக் கொல்கிறான்.
“ஆபேல் எங்கே?” என கேட்கிறார் கடவுள். ஆதாம், பாவம் செய்த போது கடவுளை விட்டு விலகி பயந்து போய் ஓடி ஒளிந்தான். ஆனால் காயீனோ கொஞ்சமும் பயம் இல்லாமல், கடவுள் முன்னால் நின்று, “என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா?” என பதில் கொடுக்கிறான்.
இது துணிகரமான பாவமாகிறது. பாவம் இன்னொரு நிலை அதிகரிக்கிறது. சாத்தான் ஆதாமிடம் பொய் சொன்னான், காயீனோ, கடவுளிடமே பொய் சொல்கிறான்.
பாவம் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது. ஆதாம் ஏவாள் ஏதேனை விட்டு, கடவுளின் அருகாமையை விட்டு வெளியே வருகின்றனர். பாவம் சக மனிதனையும் பிரிக்கிறது. காயீன் ஆபேல் பிரிகின்றனர்.
“என் சகோதரனுக்கு நானென்ன காவலாளியா?” என கேட்கிறான் காயீன். உண்மையில் கடவுள் பூமியில் மனிதரைப் படைக்கும் போது அடுத்தவருக்குக் காவலாளியாய் தான் படைக்கிறார்.
கொலை செய்யப்பட்டவனின் ரத்தம் பழிவாங்கவேண்டும் எனும் நோக்கத்தோடு குரல் எழுப்புகிறது. ரத்தமே மரணத்தின் சாட்சியாகவும், மரணத்துக்கு நீதி கேட்கும் குரலாகவும் இருக்கிறது.
ரத்தம் ரத்தத்துக்காக குரலெழுப்புகிறது. நாம் செய்கின்ற பாவம் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது. நமக்கு எதிராக அது குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த சிந்தனை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.
“காயீனைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன” என்கிறது பைபிள்.
நாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.
Related Tags :
Next Story