நோன்பு என்பது கேடயம்.....


நோன்பு என்பது கேடயம்.....
x
தினத்தந்தி 31 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 6:43 AM GMT)

அமைதியான வாழ்விற்கு எதிராக வரும் அனைத்துத் தீமைகளுக்கும் நோன்பு கேடயமாக மாறி முன் சென்று தடுப்பதால், நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பு என்பது கேடயம்’ என்றார்கள்.

இஸ்லாமிய மாதங்களில், ரமலான் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதத்தில், கிழக்கு வெளுத்த நேரத்திலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு நோற்பது, முஸ்லிம்கள் மீது இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ளது.

‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)

சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்து மக்களுக்கு வழிகாட்டும் இறைவேதமான திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர் களுக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட மாதம்தான் இந்த ரமலான் மாதம். இன்னும், ஆயிரம் மாதங்களை விட சிறப்புப் பெற்ற (லைலத்துல் கதர்) என்ற ஒரு சிறப்பான இரவை, தாங்கிக்கொண்டு வருகிறது இந்த மாதம்.

‘நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97:1-5)

மற்ற மாதங்களில் செய்யும் நற்காரியங்களுக்கு அந்தச் செயல்களுக்கான கூலி மட்டும் கிடைக்கும். இந்த நோன்பு மாதத்தில் இறைப்பொருத்தத்தை மனதில் வைத்து, நோன்பு நோற்று இரவு, பகல் பாராமல் நற்காரியங்கள் செய்து வந்தால், இறைவனே ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி கொடுக்கின்றான். அதனால்தான், அறுவடைக்குக் காத்திருக்கும் விவசாயி போன்று, நன்மையை அறுவடை செய்ய ரமலான் மாதத்தை, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

‘நோன்பு நோற்பவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி வழங்குவேன்’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

மனிதனின் வளமான வாழ்விற்கு உடல் வலிமை எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவு அமைதியான வாழ்விற்கு மனவலிமை அவசியப்படுகிறது. மனவலிமை பெற்றவர்களால் மட்டுமே இந்த வாழ்க்கையை முழுமையாகச் சுவைக்க முடியும். மனவலிமை பெறாத மனிதனுக்கு இந்த வாழ்வை முழுமைப்படுத்தும் வாய்ப்புகள் மிகக்குறைவாகத்தான் கிடைக்கின்றன. இன்னும், மனவலிமை பெறாத மனிதன், வாழ்வில் சந்திக்கும் சின்ன, சின்ன பிரச்சினைகளைக் கடந்து போக முடியாமல், தற்கொலையைத் தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

பொய், சண்டை, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் செயல்கள் போன்ற சிறிய, பெரிய பாவங்களை விட்டுத் தவிர்த்துக்கொள்ள ரமலான் நோன்பு பயிற்சி கொடுப்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், மனித வாழ்விற்கு அச்சாணியாக மாறும் மனவலிமைக்கும், ரமலான் மாதம் பயிற்சி அளிப்பது, நோன்பை உள்ளாய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.

நோன்பு காலத்தில் (பகல் நேரத்தில்) மற்ற நாட்களில் அனுமதிக் கொடுக்கப்பட்டவைகளை உண்ணாமலும், குடிக்காமலும், மனைவியுடன் உறவு கொள்ளாமலும் தன் உடலைத் தடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தனக்கு உரிமையான ஒன்று தன்னருகில் இருக்கும் போது, அதனருகில் நெருங்காமல் இருக்கச்செய்வது, மனதிற்கான நோன்பு தரும் உயர்தரப் பயிற்சியாகும். இந்தப் பயிற்சி மனித மனதுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

அன்றாடம் புதிய, புதிய பிரச்சினைகள், மனிதனை திசை திருப்புவதால் இந்த உலகில், சந்தோஷ வாழ்விற்கான வழிகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டு நீந்திச்செல்ல, நோன்பு காலத்தில் எடுக்கும் பயிற்சி அவனுக்கு ஊக்கம் தருகிறது. இன்னும் வாழ்வின் மீது எதிர்மறையான எண்ணங்கள் அவனுக்குள் வீரியம் எடுக்காமல் இருக்கவும் இந்தப் பயிற்சி பயன்தருகிறது.

உலகில் எங்கும், எந்தச் சூழ்நிலையிலும் விரும்பியது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மனமகிழ்வோடு வாழ்வை அமைத்துக்கொள்ள, இந்த நோன்பு மனபலத்தை தருகிறது.

நன்மைகளை மட்டும் அள்ளிக்கொடுக்கும் மாதமாக மட்டுமில்லாமல், விரக்தி நிலையை அடையாமல் தடுக்கின்றது. மேலும், மனித மனதைப் பக்குவ நிலைக்குக் கொண்டு சென்று, அவன் அமைதியாக தன் வாழ்நாளைக் கழிக்க இந்த ரமலான் மாதம் காரணமாக அமைகிறது.

அமைதியான வாழ்விற்கு எதிராக வரும் அனைத்துத் தீமைகளுக்கும் நோன்பு கேடயமாக மாறி முன் சென்று தடுப்பதால், நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பு என்பது கேடயம்’ என்றார்கள்.

சிலநாள் அமாவாசை இருளாகவும், சிலநாள் பவுர்ணமி வெளிச்சமாகவும் மாறக்கூடிய வானம் போன்றுதான் நம் வாழ்வும். இந்த இரு காலச்சூழ்நிலைகளிலும் மன மகிழ்ச்சியாகவும், மன உறுதியுடனும் நாம் வாழ, நமக்கான அழகான கேடயத்தை, இஸ்லாம் நம் கையில் கொடுக்கின்றது. நோன்பு என்ற அந்தக் கேடயத்தை பயன்படுத்தி, நம் வாழ்விற்கு எதிராக வரும் தீமைகளை தடுத்துக்கொள்வோம்.

இறைப்பொருத்தத்தை நாடி, இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இம்மையில் மகிழ்ச்சியான வாழ்வைப்பெற்று, நாளை மறுமையில் ‘ரையான்’ என்ற சுவர்க்கத்தை பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.

ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை. 

Next Story