நெருப்பு தீண்டாத இறைத்தூதர்


நெருப்பு தீண்டாத இறைத்தூதர்
x
தினத்தந்தி 6 Jun 2018 8:08 AM GMT (Updated: 6 Jun 2018 8:08 AM GMT)

முகம்மது நபிகள் (ஸல்) அவர்களை தனது தூதராக தேர்ந்து எடுத்து அவருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் இறைக்கட்டளைகளை அறிவித்து வந்தான் அல்லாஹ்.

முகம்மது நபிகளுக்கு முன்னர் வாழ்ந்த பல நபிகளின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அல்லாஹ் அப்போது  விளக்கினான். அதில் ஒன்று தான் இப்ராகீம் நபி களின் வரலாறு.

நாட்டு மக்களிடமும், மன்னரிடமும் இறைக்கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியதால் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார் இப்ராகீம் நபிகள். அந்த நிகழ்வு குறித்து இறைச்செய்தி இவ்வாறு கூறுகிறது:

“நபியே! நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் கர்வம் கொண்டு இப்ராகீமிடம் அவருடைய இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தான். இப்ராகீம், ‘எவன் உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்கிறானோ அவன் தான் என் இறைவன்’ என்று கூறியதற்கு; அவன், ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்’ என்று கூறினான். அதற்கு இப்ராகீம், ‘அவ்வாறாயின் அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்கு திசையில் உதயமாக்கு’ எனக்கூறினார். ஆகவே அல்லாஹ்வை நிராகரித்த அவன் எவ்வித விடையும் அளிக்க முடியாமல் திகைத்து வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை”. (திருக்குர்ஆன் 2:258)

இந்த திருக்குர்ஆன் வசனத்தின் வரலாற்று பின்னணியை விளக்கமாக அறிந்துகொள்வோம், வாருங்கள்.

இப்ராகீம் நபிகள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு சிலைகளை தங்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள். ஏக இறைக்கொள்கையை வலியுறுத்திய இப்ராகீம் நபிகள், சிலை வணக்கத்தை கண்டித்தார்கள். தனது கூட்டத்தார் வணங்கி வந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தினார். ‘தன்னையே காத்துக்கொள்ள சக்தியற்ற இந்த சிலைகளை விடுத்து அகிலமனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.

இதுபற்றி நம்ரூத் மன்னனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். நம்ரூத் மன்னனும் இப்ராகீம் நபியை அழைத்து, ‘இந்த குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?’ என்று வினவினான்.

அதற்கு இப்ராகீம் நபிகள், ‘நான் எல்லாவற்றையும் படைத்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிற அல்லாஹ்வால், அவனுடைய தூதராக அனுப்பப்பட்டவன். அவன் படைத்த இந்த மக்கள், அவனைத் தவிர வேறு இறைவனை வணங்குவதை அல்லாஹ் தடை செய்திருக்கிறான். இந்த இறைச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று எனக்கு கட்டளையிட்டுள்ளான். நான் அந்த ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச்சொன்னேன். சிலை வணக்கங்கள் கூடாது என்பதற்காக அவற்றை சேதம் செய்தேன். அந்த செய்கையின் மூலம் எனக்கு அந்த சிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே தன்னையே காத்துக்கொள்ள சக்தியற்ற அவற்றை வணங்க வேண்டாம் என்று மக்களை நேர்வழிப்படுத்தினேன்’, என்று விளக்கம் அளித்தார்கள்.

‘அப்படியானால் நீ சொல்லும் அல்லாஹ்வின் விசேஷ ஆற்றல் தான் என்ன?’ என்று மன்னன் நம்ரூத் வினவினான்.

‘எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ் ஒருவன் தான் அனைத்து உயிர்களையும் உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கவும் செய்கின்றான். அந்த சக்தி வேறு யாருக்கும் இல்லை’ என்றார் இப்ராகீம் நபிகள்.

‘இதுதான் உங்கள் இறைவனின் தன்மை என்றால் அதை என்னாலும் தான் செய்ய முடியுமே’ என்று சொன்ன நம்ரூத் மன்னன் உடனே காவலாளிகளை அழைத்து சிறையில் தண்டனை கைதிகளாக இருப்பவர்களில் இருவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

கைதிகள் அவன் முன் கொண்டு வரப்பட்டதும், மரண தண்டனை பெற்றிருந்த கைதியை மன்னித்து விடுதலை செய்தான். இன்னொரு கைதியின் தலையை கொய்து எறியச் செய்தான்.

பின் இப்ராகீம் நபிகளை நோக்கி, ‘சாவின் விளிம்பில் நின்ற ஒருவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுத்து அவனை உயிர்ப்பித்தேன். இன்னொருவனை கொன்று மரணத்தைத் தழுவச்செய்தேன். இப்போது சொல்லுங்கள், நானும் உங்கள் கடவுளும் ஒன்றல்லவா?’ என்று எக்காளமிட்டான்.

இப்ராகீம் நபிகள் அமைதியாக இவ்வாறு பதில் கூறினார்கள்:

‘என்னுடைய இறைவன் இந்த ஒளிரும் சூரியனைப் படைத்து, கிழக்கில் உதித்து மேற்கில் நீ மறைய வேண்டும் என்று அதற்கு கட்டளையிட்டு இருக்கிறான். அந்த சூரியனை நீ மேற்கில் உதிக்கச் செய்ய முடியுமா?’

இதற்கு விடைசொல்ல முடியாமல் நம்ரூத் மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். இருந்தாலும் தன்னை ஒரு சாதாரண மனிதன் தலைகுனியச் செய்து விட்டானே என்ற ஆத்திரத்தில், ‘இப்ராகீம் நபிகளை நெருப்புக்குண்டத்தில் வீசி எறியுங்கள்’ என்று கட்டளையிட்டான்.

உடனே மிகப்பெரிய நெருப்புக்குண்டம் தயார் செய்யப்பட்டது. நெருப்பின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் நீண்ட தூரத்தில் இருந்து இப்ராகீம் நபிகளை நெருப்புக்குண்டம் இருக்கும் இடத்திற்கு தூக்கி வீசினார்கள்.

நெருப்புக்குண்டம் அருகே நெருங்கியபோது, மழை பொழியச்செய்யும் வானவர் தூதர் ஒருவர் இப்ராகீம் நபிகள் முன் தோன்றி, ‘நபிகளே எனக்கு கட்டளையிடுங்கள். மழையைப் பொழிந்து இந்த நெருப்புக்குண்டத்தை அழித்து விடுகிறேன்’ என்றார்கள்.

அந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இப்ராகீம் நபிகள் தன் ஈமானை இழந்து விடவில்லை. தன்னைப்படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் தன் நம்பிக்கையை வைக்கவில்லை.

‘வானவத்தூதரே! மிக்க நன்றி. எனக்கு உங்கள் உதவி தேவையில்லை. ஏக இறைவன் அல்லாஹ்வை மக்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை நான் நேர்வழியில் அழைத்தேன். அவர்கள் அதனை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை இந்த துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அத்தனையையும் உங்களைப் போன்று அல்லாஹ்வும் பார்த்த வண்ணமாகவே இருக்கின்றான். அவனே இந்த நிகழ்வின் பொறுப்பாளனும் ஆவான். அவன் நாடியதே நடக்கும், அதனை ஏற்றுக்கொள்வதே எனது கடமை. அல்லாஹ்வே எனக்குப்போதுமானவன். அவனிடமே என் காரியங்களை ஒப்படைத்து விட்டேன், எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான்’ என்று பதிலுரைத்தார்கள்.

இப்ராகீம் நபிகளின் நம்பிக்கையின் உறுதியை மெச்சியவனாக அல்லாஹ், ‘நெருப்பே! நீ இதம் தரும் குளிராக குளிர்ந்து விடு’ என்று அந்த நெருப்பிற்கு கட்டளையிட்டான்.

இறைவனின் கட்டளையால் தகிக்கும் நெருப்பு, இதம் தரும் குளிராய் மாறியது. இப்ராகீம் நபிகள் தீக்குண்டத்தின் மத்தியில் அமைதியாய் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அல்லாஹ் இந்த நிகழ்வை அருள் மறையில் இவ்வாறாக பதிவு செய்கின்றான்.

“அவ்வாறே அவர்கள் இப்ராகீமை நெருப்பு கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி, ‘நெருப்பே நீ இப்ராகீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு’ என்று நாம் கூறினோம்.” (திருக்குர்ஆன் 21:69)

நெருப்பு குண்டம் முழுவதும் அழிந்தது. இப்ராகீம் நபிகள் எந்த பாதிப்பும் இன்றி உயிரோடு மீண்டு வந்தார்கள்.

இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பு அளித்து உதவுபவன் அல்லாஹ் ஒருவனே என்பது இந்த வரலாற்று நிகழ்வு மூலம் நிரூபணம் ஆகிறது.

(தொடரும்) 

Next Story