மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா


மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 19 Jun 2018 10:45 PM GMT (Updated: 19 Jun 2018 8:15 PM GMT)

மணப்பாறை அருகே நடைபெற்ற சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில் மாறுவேடமிட்ட இளைஞர்கள் விளக்குமாறால் அடித்துக் கொண்டனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டி அருகே ராயம்பட்டியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால் குடம் எடுத்தல், படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை காலையில் தொடங்கின. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டுதல் நடைபெற்றது. மாலையில் கல்குத்தி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் ஆட்டின் தலையை வெட்டினர். கோவில் அருகே தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டின் தலையை மேலே தூக்கி வீசினர். அதனை இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஈட்டியால் கீழே விழாமல் குத்திப் பிடித்து, மேலே வீசினர். இவ்வாறு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை வந்தடைந்ததும் கோவிலை சுற்றி வந்த பின் ஆட்டின் தலை கோவில் அருகே ஓரிடத்தில் புதைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற படுகளம் திருவிழாவில் இளைஞர்கள் மாறுவேடமிட்டு ஆடிப்பாடி அசத்தினர். திருவிழாவில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சில இளைஞர்கள் கணவன் - மனைவி போல் வேடமணிந்து வந்து, விளக்குமாறால் அடித்துக் கொண்டு நடத்திய நிகழ்ச்சி பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதைத்தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story