ராகு பகவானால் உண்டாகும் நோய்கள்


ராகு பகவானால் உண்டாகும் நோய்கள்
x
தினத்தந்தி 28 Jun 2018 11:30 PM GMT (Updated: 27 Jun 2018 9:51 AM GMT)

நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார்.

ருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து. அதற்கு அனுபவத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஜோதிட மருத்துவத்தில் இருந்து விலகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொண்டு ராகு செய்யும் யோகம் பற்றி பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். எதிர்பாராத வகையில் திடீர் தலைவர், திடீர் உயர் பதவி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். ஆபத்தான காடு, மலைகளில் சுற்றிவருவார். கெட்ட நண்பர்கள் மூலமாக தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக் கொள்வார். புறம்போக்கு நிலம், அனாதை சொத்துகள் கைக்கு வரும். மாய, மந்திர வித்தைகள் மூலம் நினைத்ததை சாதிப்பார்.

பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை கற்றும், கொடூர மிருகங்களை வைத்து வித்தை காட்டியும் மகிழ்வார். நினைத்து பார்க்க முடியாத புதையல் கிடைக்கும். பல கோடி ரூபாய் களுக்கு பினாமியாக மாறுவது அல்லது கீழே கிடந்து எடுப்பது போன்றவை ராகுவால்தான் வாய்க்கும். தந்தை வழி, தாத்தா மற்றும் பாட்டி சொத்துகள் கைக்கு வரும். அந்நிய மொழி, இனத்தவர்களை திருமணம் செய்யும் யோகம், அதன் மூலம் ஆதாயம் பெற வைப்பது ராகு தான்.

ராகு கிரகம் தரும் நோய்கள்

நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். கண்களில் தூசி, துரும்பு பட்டு கண்ணீர் கசிய வைப்பது ராகுவே. மங்கலான பார்வைத் திறன், மருத்துவர்களால் அறியப்படாத புதுவகையான நோய்கள், காற்றில் பரவி வரும் நோய்கள், துஷ்ட கனவுகள், நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கெல்லாம் பயப்பட செய்வது ராகு தான். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, சிறைவாசம் மூலம் பரவும் தொற்று நோய்கள், திடீர் என்று மனநிலை பாதித்ததுபோல் செய்யக்கூடிய காரியங்கள், விஷப் பாம்புகளுடன் பழகுவது, அவற்றுடன் வாழ்வது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.

பிறப்பு உறுப்புகளில் கிருமிகள் தாக்குவது, மூத்த வயதுடைய பெண்ணை பாலுறவு கொள்வதால் உண்டாகும் நோய், மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகள், கடல் அலைகளில் சிக்கி மூழ்கி இறப்பது, ஒரு வருக்கு வந்த கொடிய நோயானது தொற்றாக பரவுவது, பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான்.

ராகு தரும் பாதிப்புகள்

* ராகு பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், மங்கலான பார்வை, என்ன நோய் என்று இனம் காண முடியாத அளவில் நோய்கள் வரக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தந்தை வம்ச வழி நோய்கள் வரக்கூடும்.

* ராகு நீச்ச ராசியான ரிஷப ராசியில் ராகு நின்று இருந்தால், சுவாசக் கோளாறு அவ்வப்போது வரும். விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய்களுக்கு ராகுவே காரணம்.

* ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம்.

* ராகு பகை கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய், ஆகிய கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் கெட்ட பழக்க வழக்கத்தால் பல நோய்களை தேடிக் கொள்வார்கள். தனக்குரிய நோய்கள் பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார். இவர்களுக்கு பெரும்பாலும் மரண பயமே பாதி நோய்க்கு வழி வகுக்கும்.

* ராகு குரூரர் தன்மை கொண்ட கிரகம் என்பதால் 6, 12-ல் மறைவு பெற்றால் அதிர்ஷ்டம் தரும், அதே நேரம் 8-ல் நின்றால் நெஞ்சில் கபம் கட்டும். இதன் மூலம் சுவாசம் தடைபடும். உண்ணும் உணவு நஞ்சு ஆகும். சிலருக்கு விந்து பாதிக்கும். விந்து உற்பத்தி ஆகி செல்லும் குழாய்களில் அடைப்புகள் உருவாகும். தீராத காம இச்சை உடையவர்களாக இருப்பர்.

* ராகு கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ தனக்கு உண்டான நோய்கள் குறித்து மன விரக்தி அடைவார். நோய் தீர்க்கும் மருந்து எடுத்துக் கொள்ளாமல், மாற்று மருந்துகள் எடுத்துக் கொண்டு அவதிப்படுவார்கள். தீர்க்க முடியாத நோய்களில் சிக்கி தவிப்பார்கள்.

* ராகு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியுடன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படலாம். புதிய நோய்கள், தோல் அரிப்புகள், உடலில் கட்டிகள் வரக்கூடும். மருத்துவர் கண்டு பிடிக்க முடியாத மர்ம நோய்கள் வரக்கூடும்.

* ராகு கிரகத்திற்கு பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், ஜாதகருக்கு நோய் பயம் வாட்டி எடுக்கும். காற்றில் பரவும் தொற்று நோய்கள் தாக்கக் கூடும். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாகும். பெரு குடல், சிறுகுடல் வழியாக வாயுத் தொல்லை இருக்கக் கூடும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும்.

உலகத்தில் நடக்கும் பாதிப்பு

ராகு கொடிய குரூரர் கிரகம் என்பதால், ராகு எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவார். பொதுவாக ராகு சுயசாரம் அல்லது கேதுசாரம் பெற்று இருந்தால் ராகுவின் உக்கிரம் அதிகமாகும். இதனால் உலகில் புயல் மூலம் சூறாவளி காற்றைக் கொடுத்து பொதுமக்களை அலற வைப்பார். மருந்தே கண்டுபிடிக்க முடியாத நோய்களை கொடுப்பார். காற்று மூலம் விஷ வாயு கொடுத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவார். பூமிக்கு அடியில் நடக்கும் சுரங்கப் பணியில் உயிரிழப்பு, எரிமலைகள், பூகம்பம் அனைத்துமே ராகுவே காரண கர்த்தாவாக இருக்கிறார். விஷ பூச்சிகள் நிறைந்த காடுகள் அழிவதும், பாம்புகள் நிறைந்த காடுகள் அழிவதும், காட்டில் உள்ள விலங்குகள் நகரத்திற்குள் வருவதும், விந்தையான சம்பவங்கள் மூலம் மக்களை கிலி அடிப்பது போல் மிரள வைப்பது எல்லாம் ராகு கிரகத்தால் தான் நடக்கின்றன.

ராகுக்குரியவை

காரகன் - பிதாமகன்

தேவதை - பத்திரகாளி

தானியம் - உளுந்து

உலோகம் - கருங்கல்

நிறம் - கறுப்பு

குணம் - தாமஸம்

சுபாவம் - குரூரர்

சுவை - புளிப்பு

திக்கு - தென் மேற்கு

உடல் அங்கம் - முழங்கால்

தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)

நோய் - பித்தம்

பஞ்சபூதம் - ஆகாயம்

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 இடங்களை கால் பங்கும், 5,9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4,8 இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.

பாலினம் - பெண்

உபகிரகம் - வியாதீபாதன்

ஆட்சி ராசி - இல்லை

உச்ச ராசி - விருச்சிகம்

மூலத்திரிகோண ராசி - இல்லை

நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

சமமான ராசி - இல்லை

பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்

நீச்ச ராசி - ரிஷபம்

திசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்

நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி

சமமான கிரகங்கள் - புதன், குரு

பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்

அதிகமான பகையான கிரகம் - சூரியன்

இதர பெயர்கள் - வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு

நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் 

Next Story