நவக்கிரக தோஷம் நீக்கும் பரிகாரம்


நவக்கிரக தோஷம் நீக்கும் பரிகாரம்
x
தினத்தந்தி 24 July 2018 10:13 AM GMT (Updated: 2018-07-24T15:43:30+05:30)

நவக்கிரக வழிபாடு என்பது நம்மிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

நவக்கிரக சுழற்சியைக் கொண்டே, ஒரு மனிதனின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட நூல்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதனால் தான் நவக்கிரக வழிபாடு என்பது நம்மிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் பரிகாரம் ஒன்று உண்டு. அதனை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர். சிலர் விலங்குகளுக்கு உண்ணும் பொருட்களை வழங்குவதால் சில தோஷங்கள் விலகும் என்று சொல்லி வைத்துள்ளனர். அதன்படி நவக்கிரகங்களில் எந்தெந்த கிரக தோஷத்திற்கு எப்படிப்பட்ட எளிய பரிகாரத்தைச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் உண்டாகிறது என்றால், அந்த ஜாதகர் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த தோஷம் நிவர்த்தியாகும்.

குரு பகவானால் ஒரு சிலருக்கு பிரச்சினைகளும், தோஷங்களும் உருவாகலாம். இதனால் அந்த நபர் களுக்கு திருமணம் தள்ளிப்போகும். கல்வியும் பாதிக்கப்படலாம். அதை நிவர்த்தி செய்வதற்கு, பசு அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தால், அதைச் சரி செய்ய நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். அதன்படி கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடும். அதுபோன்ற நேரத்தில் வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங்கள், பழ வகைகளை வழங்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில், அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். அதே நேரம் புதன் திசை பிரச்சினையாக உள்ளவர்கள், கிளி களுக்கு உணவு வைப்பது சிறந்தது. இல்லாவிட்டால் தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

சுக்ரன் உச்சம் பெற்றால் அந்த நபரின் வாழ்க்கையே செல்வச் செழிப்பாக மாறும் வாய்ப்பு உண்டு. அதே நேரம் சுக்ர தோஷம் ஏற்பட்டால், அதன் விளைவும் கடுமையாக இருக்கும். சுக்ரனால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்க புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வைக்கலாம்.

நம்மில் அதிகம் பேர் அச்சப்படுவது சனியால் ஏற்படும் தோஷத்திற்குத் தான். சனி திசை சிறப்பாக இல்லாத காலகட்டத்தில், சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் போன்றவை.

ராகு - கேதுவால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், நாய்களுக்கு உணவளிப்பது, எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். 

Next Story