குழந்தைப்பேறு வழங்கும் செல்லாண்டி அம்மன்


குழந்தைப்பேறு வழங்கும் செல்லாண்டி அம்மன்
x
தினத்தந்தி 25 July 2018 6:42 AM GMT (Updated: 25 July 2018 6:42 AM GMT)

குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.

தமிழ்நாட்டில் ஏழு பெண்களை தெய்வமாக பாவித்து வழிபடும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழிபாடு சோழ மன்னர்கள் காலத்தில் கிராமிய வழிபாடாக மாறியதால், அவர்கள் ஊருக்கு வெளியே வடக்கு திசையில் சப்தமாதர் கோவில்களை உருவாக்கினர்.

சிந்து சமவெளி நாகரிகம் முதல் நம் நாட்டில் இருந்து வந்துள்ள வழிபாட்டு முறைகளில் ஒன்று, சப்த மாதர் வழிபாடு. பல்லவர் காலத்தில் சப்த மாதர்களை ஒரே கல்லில் வடிவமைத்து வழிபட்டு வந்துள்ளனர். சோழ மன்னர்கள் காலத்திலும், சாணக்கிய மன்னர்கள் காலத்திலும் சப்த மாதர் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து வந்துள்ளது.

நவராத்திரியின்போது சப்த மாதர்களை 7 நாட்கள் தனித்தனியே வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. சப்த மாதர்கள் தோன்றிய வரலாற்றை புராணம் கூறும் விதம் பிரசித்தமானது.

கொடிய அரக்கனான மகிஷன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்து, பலம் வாய்ந்த வரத்தைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட தலைக்கனத்தால், தேவர்களை துன்புறுத்தினான். அரக்கர்களது தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரம்மா ‘அந்த அசுரன் ஒரு பெண்ணால் மரணமடைவான்’ என்றார்.

பின்னர் பார்வதி தேவியை நோக்கி பிரார்த்தனை செய்தார் பிரம்மா. அவர் முன் தோன்றிய பார்வதி தேவியிடம் ‘மகிஷன் அழிய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை உடனே நிறைவேற்ற தன் உடலில் இருந்து பிராம்மி, வைஷ்ணவி, இந்திராணி, மகேஷ்வரி, கவுமாரி, வராகி என 6 தேவிகளை உருவாக்கினாள் பார்வதிதேவி. 6 பேரும் மகிஷனுடன் போரிட்டனர். கடுமையான போர். எனினும் அந்த அரக்கனை வெல்ல அவர்களால் இயலவில்லை. இதை கண்ட சிவபெருமான் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்டவளே சாமுண்டி. அவள் பார்வதியை பணிந்து மகிஷனை அழிக்க அருளும்படி வேண்டி நின்றாள்.

பார்வதி கருணை ததும்பும் கண்களுடன் சாமுண்டியைப் பார்த்தாள். பின், ‘சாமுண்டி! உனக்கு என் அருள் என்றும் உண்டு. நீயே இந்த 6 பேருக்கும் தலைவியாக இருந்து அசுரனை அழிப்பாய். இந்த உலகையும், தேவர்களையும் காப்பாய். இன்று முதல் நீங்கள் 7 பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள்’ என அருள்புரிந்தாள்.

முதலில் இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான். அவனுடன் சப்தமாதர் போரிட்டனர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினாள். ரக்த பீஜன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து முடிவில் மகிஷனையும் வதம் செய்தனர், சப்த மாதர்.

சிவபெருமான் சப்த மாதர்களை பாதாள உலகிற்கு அனுப்பி விடுமாறு பைரவருக்கு கட்டளையிட்டார். அங்கே சென்ற சப்த மாதர்களுக்கு கடும் பசி. அசுர ரத்தத்தை அவர்கள் பருகி இருந்ததால், அந்த உக்கிரமும் சேரவே கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து உண்டார்கள். இதை கண்ட நரசிம்மர் அந்த சப்த மாதர்களின் உக்கிர குணங்களையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றி பூவுலகிற்கு அனுப்பினார். இதுவே சப்தமாதர் பற்றிய புராணக்கதை என்று சொல்லப்படுகிறது.

சப்த மாதர்களுக்கான ஆலயம் ஒன்று திருச்சிக்கு அருகே உள்ள துவாக்குடி என்ற கிராமத்தில் உள்ளது. ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலுக்கு முன்பாக வலதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே நுழைந்ததும் திருச்சுற்றில் தலவிருட்சமான வேப்ப மரம் உள்ளது.

அடுத்து சப்பாணி கருப்பு, மதுரை வீரன், பட்டவன், சந்தன கருப்பு, முனியாண்டவர், சன்னாசி கருப்பு, சாம்புவன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து மகாமண்டபத்தின் கிழக்கு திசையில் சங்கிலி கருப்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்டமான சுதை வடிவ துவாரபாலகர் திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

அடுத்துள்ள கருவறையில் சப்த மாதர் வரிசையாக காட்சித்தர, நடுவே உள்ள இந்திராணி ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். செல்லாண்டி அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை விளங்குகிறாள்.

மாதப்பிறப்புகள், ஆண்டின் முதல் நாள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பொங்கல், ஆடிப் பெருக்கு நாட்களில் அன்னைக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று அன்னைக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு மாவிளக்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, மொச்சை, தட்டைப்பயறு, சர்க்கரைப்பொங்கல் முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் துவாக்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். திருச்சியில் இருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது. 

Next Story