கைரேகை அற்புதங்கள் : தொழிலில் ஏற்றமும் மாற்றமும்


கைரேகை அற்புதங்கள் : தொழிலில் ஏற்றமும் மாற்றமும்
x
தினத்தந்தி 3 Aug 2018 11:52 AM GMT (Updated: 3 Aug 2018 11:52 AM GMT)

உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் உயர்வு, தாழ்வு எப்போதும் ஒரே சீராக இருக்காது. மனிதனுக்கு நல்ல சமயம், கெட்ட சமயம் என்ற காலம் உண்டு.

கெட்ட சமயத்தில் சுப பலன்கள் எதிர்பார்த்தால் தோல்வியில் தான் முடியும். நல்ல சமயம் வரும்போது எல்லாம் நல்லதாகவே அமையும். இப்படி நல்ல பலன்களை கொடுக்கும் காலம் மனிதனது லக்னேசனது தசையில் தான் நடைபெறும். லக்னேசன் யாராக இருந்தாலும், அந்த கிரகம் ஜாதகத்தில் பலம் பெற்று, அந்த கிரகத்தில் தசை நடக்கும் காலத்தில் தொழில் அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பது நிச்சயம். தசையின் காலம் நீண்டதொரு காலமாகும். எனவே குறிப்பிட்ட எந்தப் பகுதியில் உயர்வு ஏற்படும் என்பதைக் காண கணக்கு உண்டு.

லக்னேசனது தசையில் அவரது புத்தி அல்லது அவரது அந்தரம் நடக்கும் உட்பிரிவு காலம் உயர்வு ஏற்பட உத்தரவாதம் தரும். லக்னேசன் என்பவர் ஒரு ஜாதகரின் உயிர் ஆவார். உயிரின் ஊட்டம் தானே உடலின் ஓட்டம். உயிரால் உடல் மட்டுமா இயங்குகிறது? அறிவு சக்தி இயங்குகிறது, உள்ளம் இயங்குகிறது, இன்னும் எல்லாமே அந்த உயிரால் தான் இயங்குகின்றன. அதுபோல உயிரான லக்னேசனது உறுதிமிக்க ஆற்றலால், எல்லா கிரகங்களையும் இயக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜாதகப்படி லக்னேசன் யாரோ, அவர் இருக்கும் இடத்தை கோச்சார ரீதியாக அவரே நோக்குவது சிறப்புடையது. ஒருவர் ஜாதகத்தில் எது 10-ம் வீடோ அந்த வீட்டை கோச்சாரத்தில் உலவும் குரு நோக்கினாலும் பதவிச் சிறப்பு உண்டாகும்.

இந்த லக்னேசன் பலம் இல்லாமல் இருந்து, அவரது தசையில் நடந்து, கோச்சாரப்படியும் பலம் இல்லாமல் இருந்தால் பதவி மேன்மை கிடைக்காமல் போவதுடன், பதவி இறக்கம், தொழில் நஷ்டம் உண்டாவதற்கும் அதிக வாய்ப்புண்டு. மேலும் வழக்கு விவகாரங்களில் சிக்கித் தவிக்கும் சூழல் உருவாகும். உதாரணமாக ஜாதகத்தில் சனி பகவான் 9, 10-ம் வீடுகளுக்கு அதிபதியாகி, கோச்சார ரீதியாக சனி பகவான் 10-ம் வீட்டில் இருக்க, அவரை சனி பார்க்க அந்த ஜாதகருக்கு தொழிலில் ஏற்றமும், உத்தியோகத்தில் இருப்பவராக இருந்தால் பதவி உயர்வும் கிடைப்பது நிச்சயம்.

இனி கைரேகைப்படி தொழிலில் ஏற்றமும், மாற்றமும் யாருக்கு என்பதைப் பார்க்கலாம். விதி ரேகை, கையில் கங்கண ரேகையில் இருந்து உற்பத்தியாகி நேராக பின்னல் இன்றி, சனி மேடு வரையும், அல்லது சனி மேட்டை தாண்டியும் செல்வதுண்டு. இந்தச் சனி ரேகை சுத்தமாக அமைந்தவர்களை யோகக்காரர் என்றே குறிப்பிடலாம். இவரது தொழில் பலப்படும். செய்யும் தொழிலில் நல்ல வருமானம் இருந்து கொண்டே இருக்கும். அதே சமயம் சூரிய ரேகை என்னும் தன ரேகையும் கையில் அமைந்திருந்தால் அது சிறப்பானதொரு நிலையாகும். விதி ரேகையில் இருந்து இரண்டு கிளைகள் உற்பத்தியாகி, அதில் ஒரு ரேகை குரு மேட்டுக்கும், ஒரு கிளை சனி மேட்டுக்கும் சென்று இருந்தால், அந்த ஜாதகர் உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவது உறுதி. சாதாரண ஏழையாக பிறந்த அந்த ஜாதகர் தனது 36 வயதுக்கு மேல் தொழிலில் அமோகமாக சம்பாதிக்கும் நிலை உண்டாகும். விதி ரேகையில் இருந்து சிறு சிறு கிளைகள் மேல்நோக்கிச் செல்வதும் நல்ல அமைப்பாகும். ஆள்காட்டி விரலான குரு விரலின் நகக் கண்ணில், அரை வட்டத்தில் வெள்ளை நிற அரை வட்டம் தென்பட்டால், உத்தியோகத்தில் பதவி உயர்வு வரப்போவதைச் சொல்லும் அறிகுறியாகும்.

 - கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ. 

Next Story