தம்பதியர் குறை தீர்க்கும் விஜயராகவப் பெருமாள்


தம்பதியர் குறை தீர்க்கும் விஜயராகவப் பெருமாள்
x
தினத்தந்தி 7 Aug 2018 6:43 AM GMT (Updated: 7 Aug 2018 6:43 AM GMT)

முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழைக்கப்படுகிறது.

நாகார்ஜூன முனிவர் என்பவர், இந்திரன் சபையில் இருந்தார். அவர் சிறந்த காளி பக்தர்.

விதி யாரை தான் விட்டு வைத்திருக்கிறது.

ஒரு நாள் ரதிதேவியைக் கண்ட முனிவர், அவளது அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்தார். ஒருநாள் பார்வதி தேவி முனிவரை அழைக்க, அந்த அழைப்பு ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் விழவில்லை. கோபம் கொண்ட தேவி, ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.

சாபத்தின்படி இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்த முனிவர், அதில் இருந்து மீள்வதற்காக தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய். சாப விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.

அதன் படி முனிவர் இந்த மலைக்கு வந்தார். தவம் செய்யத் தொடங்கினார். யாகம் நடத்த அவருக்கு பொன் தேவைப்படவே, மகாலட்சுமியை வேண்டினார். மகாலட்சுமியும் தருவதாகக் கூறினாள். ஆனால் பொன் கிடைக்க தாமதமானது.

என்ன செய்வது என்று புரியாத முனிவர் குழம்பினார், வேதனைப்பட்டார். வேறு வழி ஏதும் தெரியாததால், தான் தவம் செய்த மலையில் மோதி உயிரை விட முடிவு செய்தார். மலையில் தலையை மோதியபோது பார்வதிதேவி காட்சி தந்தாள்.

‘எனக்கு ஏன் இந்த சோதனை? யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய ?’ என்று அன்னையிடம் வேதனையுடன் கேட்டார் முனிவர்.

‘கவலை வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். அதுவே பொன்னாக மாறிவிடும்’ என அருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையில் இருந்து தேவையான அளவு பெயர்த்து எடுத்து யாகத்தில் போட்டார். அவர் பெயர்த்துப் போட்ட பாறைகள் பொன்னாக மாறியது. யாகத்தை வெற்றிகரமாக முடித்த முனிவர், சாப விமோசனம் பெற்றார்.

முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் பொன் போன்று ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் வலதுபுறம் தலவிருட்சமான பவழ மல்லிகை மரமும் உள்ளன. அடுத்து சிறிய ராஜகோபுரம். நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஆதிசேஷனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். இவர்கள் தங்கள் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், கதை தாங்கி நின்ற கோலத்தில் உள்ளனர். கருவறையில் ராமபிரான், ‘விஜயராகவப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

ராமநவமியின் போது மூன்று நாட்கள் ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.

மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மூலமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அனுமன் சன்னிதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையோடு இங்கு வருகின்றனர். அர்ச்சகர் அந்தச் சிலையை ஒரு தொட்டிலில் வைத்து தாலாட்டி விட்டு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்தபின், அந்தச் சிலையை அந்த தம்பதியிடமே தந்து விடுகிறார். அவர்கள் அந்தச் சிலையை வீட்டிற்கு கொண்டு சென்று தினசரி அந்தச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து உலர்ந்த பழங்களை நைவேத்தியம் செய்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பேறும் உண்டாகிறது. பின்னர் ஆலயம் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மலை. மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 14, 15, 16, 34 ஆகிய வழித்தட எண் கொண்ட பேருந்துகளில் சென்றால் ஆலயம் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

இந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜயராகவப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், அருகே உள்ள இந்த அன்னையையும் தரிசித்து பயன்பெறலாம். 

ஆஞ்சநேயர் வழிபாடு

இந்த ஆலயத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தியின் போது இந்த ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமை களிலும் சிறப்பு ஆராதனைகளும் உண்டு. பகை அகலவும், விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைபேறு உண்டாக வாைழப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த் தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவது கண்கூடான உண்மையே. 

Next Story