அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்


அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்
x
தினத்தந்தி 21 Aug 2018 9:15 AM GMT (Updated: 21 Aug 2018 9:15 AM GMT)

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம்.

‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி இங்குதான் அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.

முன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.

ஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்?

எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.

ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.

ஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள்? அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார்? எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ? சித்திகள் ஏதாவது உண்டா? என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.

அதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.

இவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன?

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.

சங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.

பல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.

ஆனால் தனிமையை விரும்பிய சங்கரானந்தர், ஐந்தருவி காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் மீண்டும் இமயமலை சென்று தங்கினார். அங்கே அவருக்கு பிரபுக்களுடனும், மன்னர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களுக்குப் பின் தன் குருவைத் தேடி வந்தார். அப்போது சிவானந்த பரமஹம்ஸர், ‘வடநாட்டில் பிரபுக்களிடமும் மன்னர்களிடமும் சித்த நெறியைப் பரப்புவதில் பலன் இல்லை. தென்னாட்டுக்குப் போ. ஆன்மிக நெறி வளர்வதற்கேற்ற உரம், ஏழைகளிடமும் தான் உள்ளது. அவர்களுக்கும் ஞானம் கிடைத்தாக வேண்டும்’ என்றார்.

குருவின் சொல்படி மீண்டும் தென்னகம் வந்தார், சங்கரானந்தர். அன்பர்கள் உதவியுடன் ஐந்தருவிக் கரையில் தற்போதுள்ள இடத்தை வாங்கி ஆசிரமம் அமைத்தார். இவ்விடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிய காரணத்தினால் ‘ஐந்தருவி சுவாமி' என்று அழைக்கப்பட்டார்.

அற்புதங்கள் பலவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்தவர் சங்கரானந்தர். பழம்பெரும் திரைப்பட இயக்குனரான பீம்சிங், ஒரு முறை பக்கவாத நோயால் அவதிப்பட்டார். அப்போது ஐந்தருவி சித்தரின் ஆற்றலாலும், மருந்தாலும் ஆச்சரியப்படும் விதத்தில் பீம்சிங் குணமடைந்தார். மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு பெருந்தொகையைக் கொடுத்து ஐந்தருவி ஆசிரமத்தில் தியான மண்டபம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

ஐந்தருவிச் சித்தர் சிறந்த மருத்துவர். பாம்புக் கடிக்கு உடனடி வைத்தியம் செய்வார். மூலிகை கொடுப்பார், நோய்கள் சரியாகிவிடும். இங்கு வருபவர்களுக்கு மூலிகை கஷாயம் கொடுப்பது ஐந்தருவி சித்தரின் வழக்கம். அதனால் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கி விடும். சித்தருக்கு புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அவர் சொல்லச்சொல்ல நிறைய தத்துவ விளக்கங்களை தமிழ்நடையில் வி. ஜனார்த்தனம் என்பவர் தொகுத்துள்ளார்.

30.8.1974 அன்று ஐந்தருவி சித்தர் சமாதி நிலை அடைந்தார். இதையறிந்ததும் குற்றாலம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள அவரது அடியவர்கள் ஐந்தருவி ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் சித்தரின் இறப்பை எண்ணி யாரும் கதறவில்லை. முகத்தில் தெரிந்த வருத்தம், வெடித்து வாய்வழியாக வெளியேறவில்லை. அது தான் இருக்கும் காலத்தில் ஐந்தருவி சித்தர், தன் அடியவர்களுக்கு சொல்லித்தந்த பாடம். அனைவரும் கூடி நிற்க சித்தரை சமாதி வைத்தனர். தற்போதும் கூட இவ்விடத்தில் சித்தரின் அருள் உள்ளது. இங்கு சென்றாலே நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இழந்ததை பெற்றது போல தோன்றுகிறது.

சங்கரானந்தர் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது. கட்டிலுக்குக் கீழே ஒரு பாதாள அறை. அதற்குள் சென்றுதான் அவர் தியானம் புரிவாராம்.

சித்த வித்தை பயில தன்னை நாடி வருபவர்களுக்கு சங்கரானந்தர் மூன்று நிபந்தனைகளை மட்டுமே முன் வைத்துள்ளார்.

* மீன், முட்டை, இறைச்சி போன்ற புலால் உணவுகள் உண்ணக்கூடாது.

* பீடி, சிகரெட், கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது.

* மது, கள், சாராயம் போன்ற பானங்களை அருந்தக் கூடாது.

இதைக் கடைப்பிடிப்பவரே சித்தவித்யார்த்தி என்பது ஐந்தருவி சித்தரின் கண்டிப்பான கட்டளை. அதை அவரது சிஷ்யர்கள் தற்போதும் கூட கடைப்பிடித்து வருகிறார்கள்.

அமைவிடம்

தென்காசி அல்லது செங்கோட்டைக்கு பேருந்துகள், ரெயில்கள் உண்டு. இங்கிருந்து பேருந்தில் குற்றாலம் சென்று ஐந்தருவிக்குச் செல்லலாம். சீசன் இருக்கும் மாதங்களில் மட்டுமே நகரப் பேருந்துகள் இருக்கும். மற்ற நாட்களில் ஆட்டோ மூலமே செல்ல முடியும்.

Next Story