முற்பிறவி வினை தீர்க்கும் முன்னேஸ்வரர்


முற்பிறவி வினை தீர்க்கும் முன்னேஸ்வரர்
x
தினத்தந்தி 21 Aug 2018 9:25 AM GMT (Updated: 21 Aug 2018 9:25 AM GMT)

இலங்கை நாட்டின் பழம்பெரும் பஞ்சேஸ்வர ஆலயங்களில் முதன்மையானது முன்னேஸ்வரம் திருக்கோவில்.

ராமபிரான், வியாசர் வழிபட்ட திருக்கோவில், ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய புண்ணியபூமி, மனுநீதி சோழன் வழிவந்த குளக்கோட்டு மன்னன் புனரமைத்த ஆலயம், தீமிதி விழா நடைபெறும் சிவாலயம், 64 சக்திப் பீடங்களில் ஒன்றாகத் திகழும் திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, இலங்கை நாட்டில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் திருக்கோவில்.

இந்தக் கோவிலைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளன. தென்கிழக்கில் வேட்டைத் திருமடம் எனும் விநாயகர் ஆலயம், வடமேற்கில் ஐயனார் கோவில், வடக்கே காளி கோவில், தெற்கே களத்துப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளன.

முன்னேஸ்வரர் ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடன் விண்ணை நோக்கி கம்பீரமாய் நிற்கிறது. ஆலயத்தின் எதிரே தல விருட்சத்தின் அடியில் நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என ஒருங்கே அமைந்துள்ளன. கருங்கற்களால் ஆன இவை, விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

கருவறை விமானம் 46 அடி உயரம் கொண்டது. மூன்று தளங்களைக் கொண்டு கண்டி மன்னனால் எழுப்பப்பட்டுள்ளது. புறக்கோட்டங்களில் நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மன், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இது தவிர, விநாயகர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, நவக்கிரகம், பைரவர், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி, நரசிம்மர், சரபேஸ்வரர், அனந்த சயனர் திருமேனிகளும் காணப்படுகின்றன.

ஆலயத்தின் நடுநாயகமாக முன்னேஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரில் பெரிய வடிவில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் இடதுபுறம் அன்னை வடிவாம்பிகையின் எழில் கொஞ்சும் உலாத் திருமேனி அமைந்துள்ளது. கருவறை வெளியே தென்திசை நோக்கி, அன்னை வடிவாம்பிகை எளிய வடிவில் பெயருக்கு ஏற்றாற்போல் வடிவழகியாய் அருள் வழங்குகின்றாள்.

வடிவாம்பிகையின் உலோகத் திருமேனி பழமையானதாகவும், கலைநயம் கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் எதிரே ஸ்ரீசக்கர எந்திரம் அமைந்துள்ளது. இது சிவலிங்கத்திற்கு இடதுபுறம் அமைந்துள்ளது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

மீனவர் ஒருவர் மீன் பிடிக்க சென்றபோது, அங்கே சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மீனவனைக் கண்டதும் அவர்கள் மாயமாக மறைந்தனர். மறுநாள் மீனவர் கையில் சிறுமி சிக்கினாள். ஆனால் மறுநொடியே அவர் தங்கச் சிலையாகிப் போனாள். மீனவன் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தான்.

இதையறிந்த மன்னன், அந்த சிலையைக் கைப்பற்றி, அதேபோல பல சிலைகளைச் செய்து, மீனவனை அழைத்து ‘இதில் உன்னுடைய சிலை எது?’ என்று கேட்டான்.

ஒரு நாள் அவகாசம் கேட்டான் மீனவன். அன்று அவனது கனவில் அன்னை வடிவாம்பாள் தோன்றி, ‘கால் அசையும் சிலையே நான்’ எனக் கூறி மறைந்தாள். மறுநாள் சரியாக அடையாளம் காட்டினான், மீனவன். அந்தச் சிலையே இத்தலத்தின் கருவறையில் இருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.

இந்தக் கோவிலில் உற்சவத் திருமேனிகளாக விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகசுவாமி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், மகாமாரி, பிரதோஷ மூர்த்தி, பிரமாண்ட பிட்சாடனர், சண்டேஸ்வர நாயனார், அறுபத்துமூவர் போன்றவை உள்ளன. இவ்வாலயத்தின் தலமரம் அரச மரம் ஆகும். கோவிலின் வடக்கே ஓடும் மாயவனாறு தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.

ஆவணி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, 27 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். விஷ்ணு திருவிழா, தீமிதி விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பவுர்ணமியை முன்னிட்டு பர்வயந்திர பூஜையும் நடக்கிறது. இது தவிர, ஏனைய சிவாலய வழிபாடுகள் சிறப்புடன் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த ஆலயம் திறந்திருக்கும்.

அமைவிடம்

இலங்கை நாட்டில் உள்ள வட மேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தில், முன்னேஸ்வரம் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பு நகரில் இருந்து வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும், சிலாபம் நகரில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தக் கோவில் இருக்கிறது.

-பனையபுரம் அதியமான்

Next Story