பண்பை போதிக்கும் ஹஜ்


பண்பை போதிக்கும் ஹஜ்
x
தினத்தந்தி 23 Aug 2018 9:15 PM GMT (Updated: 23 Aug 2018 9:58 AM GMT)

‘ஹஜ்’ என்ற அரபுச்சொல்லிற்கு நாடுதல், தரிசித்தல், சந்தித்தல் என்று பல பொருள் உண்டு.

சகல வசதிகளைப் பெற்றவர் மக்கா நகர் சென்று, அங்குள்ள இறைவனின் ஆலயமான ‘கஅபா’வை வலம் வந்து, ‘ஸபா-மர்வா’ மலைக்குன்றுகளுக்கு இடையே ‘சயீ’ எனும் சீரோட்டம் ஓடி, ‘அரபா’ மைதானத்தில் தங்கிய பின் குர்பானி கொடுத்து, நிறைவாக தன் முடிகளைக் களைந்து, மீண்டும் இறுதியாய் ‘கஅபா’வை வலம் வந்த பின் ஊர் திரும்பும் நிகழ்வு தான் ஹஜ் ஆகும்.

இது குறித்த இறைவசனம் வருமாறு: ‘அங்கு தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராகிம் நின்ற இடமான) மகாமு இப்ராகிம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்)- நிச்சயமாக அல்லாஹ் உலகத்தில் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:97)

‘ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக பூர்த்தியாக்குங்கள்’. (2:196)
ஹஜ்ஜு (செய்வது அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில் தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீஞ்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலியைத் தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவைகளில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத் தான். ஆதலால் அறிவாளிகளே, நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:197)
ஒரு ஹாஜி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் மிகத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக ஒரு ஹாஜியிடம் எப்போதும் இருக்க வேண்டியது, இறையச்சம் தான் என்கிறது. உண்ணும் உணவை விட முதலில் தயார்படுத்தப் படவேண்டியது இந்த இறையச்சம் தான் என்றும் எச்சரிக்கிறது இஸ்லாம்.

ஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை. எனவே தான் இஸ்லாம் எல்லாச் செயல்பாடுகளிலும் உள்ளச்சம் தரும் இறையச்சத்தை அவசியம், கட்டாயம் என்கிறது.
பின் வரும் வான்மறை வசனம் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இவ்வாறு விவரிக்கிறது:

‘(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்குமுன்) உங்கள் மூதாதை(யர் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப் போல் அல்லது அதனை விட அதிகமாக அல்லாஹ்வைத் ‘திக்ரு’ (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். 
(பிரார்த்தனையில்) ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே தந்து விடுவாயாக’ என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. அன்றி ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக, மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக’ எனக்கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. தாங்கள் செய்த (நற்) செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). (திருக்குர்ஆன் 2:200-202)‏
ஹஜ் எனும் புனிதப் பயணத்தை ஒரு ஹாஜியார் முடித்துக் கொண்டு ஊர் வந்த பின் அவர் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய முதற்காரியம் இத்தகைய பாக்கியத்தை தனக்கும் கிடைக்கச் செய்த அந்த அல்லாஹ்வை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது தான்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது, நமது இம்மை, மறுமையின் ஈருலக வாழ்க்கைக்காக தொடர்ந்து அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சுருக்கமாக, ஹஜ் நமக்கு தியாக மனப்பான்மையை, ஒற்றுமையை, விட்டுக்கொடுத்தலை, பொறுமையை சகிப்புத்தன்மையை, ஆடம்பரமற்ற வாழ்க்கையை, பன்முகச் சமூக சந்திப்பை, இன, நிற, மொழியில் வேற்றுமையற்ற தன்மையை, மறு உலகப்பயண நினைவூட்டலை, இடம், உடல், உடை, உள்ளத்தூய்மையை என அனைத்தையும் கற்றுத்தருகிறது எனலாம்.

மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story