கணபதியின் தோஷம் போக்கிய கணபதீஸ்வரர்


கணபதியின் தோஷம் போக்கிய கணபதீஸ்வரர்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:21 AM GMT (Updated: 11 Sep 2018 11:21 AM GMT)

மரகத முனிவரின் மனைவி விபுதை, அசுர குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசூரன் பிறந்தான்.

 அசுரத் தன்மையோடு வளர்ந்த அவன், சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த ஈசன், கஜமுகாசூரனின் முன்பாகத் தோன்றினார்.

ஈசனிடம், ‘என்னைக் கொல்பவன் மனிதனாகவும் இருக்கக்கூடாது; மிருகமாகவும் இருக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல வரங்களைப் பெற்றான், கஜமுகன்.

அந்த வரத்தினால் ஏற்பட்ட அகந்தையால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அதை அறிந்த சிவபெருமான், திருக்கயிலாய மலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபத்தில் பார்வதியோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே ‘சமஷ்டிப் பிரணவம்’, ‘வியஷ்டிப் பிரணவம்’ என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் பார்வதியும் அந்த இரண்டு பிரணவங்களையும் நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடனும், மனித உடலுடனும் விநாயகர் அவதரித்தார். ‘சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர்’ என்று மகா புராணங்களில் ஒன்றான ‘லிங்க புராணம்’ கூறுகிறது.

ஒரு முறை சிவபெருமானும் அம்பிகையும் திருக்கயிலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அச்சமயம் திருச்சுவற்றில் உள்ள ஒரு யானை வடிவ சிற்பத்தின் மேல் இறைவன்- இறைவி இருவரின் திருப்பார்வையும் ஒரு சேரப் பதிகின்றது. சிவ-சக்தியின் திருப்பார்வை கடாட்சத்தையேக் கொண்டு அச்சிற்பத்தில் இருந்து விநாயகர் வெளிப்பட்டு அருளினார் என்கிறது விநாயக புராணம்.

இந்நிகழ்வினையே திருஞானசம்பந்தர், திருவலிவலத் திருப்பதிகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே'

இதன் பொருள், ‘சிவபெருமானும் பார்வதியும் ஆண்-பெண் யானைகளின் திருவடிவம் தாங்கிய பின்னர், அவ்விருவரின் திருப்பார்வை சங்கமத்தால், இடர்களை நீக்கும் கருணைக் கடலாக விநாயகர் அவதரித்து அருளினார்' என்பதாகும். பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை ‘ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். ‘யாராக இருந்தாலும் ஒரு செயலைத் தொடங்குமுன் முதலில் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது' என்று விநாயகப் பெருமானுக்கு சிவபெருமானும், பார்வதி தேவியும் அருளினார்கள்.

இந்த நிலையில் தான் கஜமுகாசூரனின் தொல்லையை பிரம்மா, விஷ்ணு புடைசூழ திருக்கயிலாயம் வந்த தேவர்கள், சிவபெருமானிடம் கூறி முறையிட்டனர். உடனே சிவபெருமான், விநாயகரை அழைத்து கஜமுகாசூரனை வென்று தேவர்களைக் காத்திடுமாறு அருளினார். விநாயகப்பெருமானும் கஜமுகா சூரனை வென்று தேவர்களைக் காத்தார்.

கஜமுகாசூரனை அழித்ததால் விநாயகப்பெருமானுக்கு தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பூலோகத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. கணபதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட இறைவன் என்பதலால், அவருக்கு ‘கணபதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இத்தலத்திற்கு ‘கணபதீச்சரம்’ என்று பெயர். விநாயகப்பெருமான் இங்குதான் கஜமுகாசூரனை வதம் செய்ததாகவும், அசுரனின் செங்குருதி (ரத்தம்) பெருகி, காட்டாறாக பெருகியதால் இத்தலத்திற்கு ‘திருச்செங்காட்டங்குடி’ என்னும் திருப்பெயரும் உண்டு.

ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், மூலவரான ஆத்திவன நாதர் என்னும் கணபதீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாய் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். சிறுத்தொண்டருக்காக இத்தல ஈசன் பைரவர் வடிவில் வந்து அருளியதால் ‘உத்தராபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். மூலவரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் உத்தராபதீஸ்வரர் தனி விமானத்துடன் உற்சவ மூர்த்தியாக உள்ளார். திருக்கரங்களில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் காணப்படுகிறார். தினமும் இவருக்கு பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் சார்த்தப்படுகின்றது.

தன் பக்தை ஒருத்திக்காக பிரசவம் பார்த்த இத்தல அம்பாளின் திருநாமம் ‘சூளிகாம்பாள்’ என்பதாகும். இத்தல அம்பாளை வழிபட தாய்மை அடைந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிறார்கள். பி்ரம்மஹத்தி தோஷங்கள், கொடிய பாவங்கள், குலசாபம் அகல இத்தல கணபதி, ஈசன், அம்பாள், பைரவர் ஆகியோரை வழிபடுவது சிறப்பு.

இத்தல கணபதீஸ்வரர் கருவறையில் பசு நெய் சேர்த்து வழிபட்டு, அன்னதானம் செய்தால், பாவங்கள் விலகும் என்கிறார்கள். இங்கு சங்கடகர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சதயம் நட்சத்திர நாட்களில் வாதாபி கணபதி, கணபதீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட தோஷங்கள், தடைகள் அகன்று செல்வ வளமும், உடல்நலமும் கை கூடும். இங்கு சம்பந்தரும், பிள்ளையாரும் ஒரே சன்னிதியில் உள்ளது சிறப்பம்சமாகும்.

இத்தல ஈசனை திருநாவுக்கரசர், ‘உருகு மனத்தடியவர்கட்கு ஊறுந்தேன்' என்கிறார்.

ஆம்! பக்தர்கள் மனதில் என்றும் ஊறும் தேனாய் விளங்கும் திருச்செங்காட்டங்குடி ஈசனையும், விநாயகரையும் கண்டு வழிபடுவோம்.

அமைவிடம்

காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருச்செங்காட்டங்குடி. இத்தலத்தின் மிக அருகில் திருசீயாத்த மங்கை, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்துள்ளன.

சிறுதொண்ட நாயனார்

நரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சிறந்த சிவ பக்தர். இவர் மன்னனின் ஆணைப்படி வடக்கே உள்ள வாதாபியைக் கைப்பற்றி, அங்கிருந்த கணபதி சிலையின் மேல் காதல்கொண்டு அக்கணபதியை எடுத்து வந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்தார். பின் தினமும் அந்த ‘வாதாபி கணபதி’யையும், அத்தல ஈசன் கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் வழிபட்டு வந்தார். பின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் தன் ஊரான திருச்செங்காட்டங்குடியிலேயே சிவத்தொண்டை மேற்கொண்டார். இந்த பரஞ்சோதி, வேறு யாரும் அல்ல.. அடியவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்ட இறைவனுக்கு தன் குழந்தையையே சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனார் தான் இவர்.

சிறுதொண்டரின் சிவ பக்தியை சோதிப்பதற்காக இறைவன் பிள்ளைக் கறி கேட்க, தன் பிள்ளையையே சமைத்துக் கொடுத்தவர். சிறுதொண்டர் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, குழந்தை சீராளன், பணிப்பெண் சந்தன நங்கை ஆகிய நால்வருக்கும் முக்தி அளித்தவர், திருச்செங்காட்டங்குடி திருத்தல இறைவன்.

பொதுவாக சிவனடியார்களுக்கு ஈசன் உமையுடன் ரிஷபத்தின் மேல் அமர்ந்து காட்சி கொடுப்பார். ஆனால் சிறுதொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் சேர்ந்து காட்சி கொடுத்தார். சிறுதொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை நால்வருக்கும் திருச்செங்காட்டங்குடி ஆலயத்தில் சன்னிதி உள்ளது. 

Next Story