கைரேகை அற்புதங்கள் : துறவு வாழ்க்கை!


கைரேகை அற்புதங்கள் : துறவு வாழ்க்கை!
x
தினத்தந்தி 12 Oct 2018 7:09 AM GMT (Updated: 12 Oct 2018 7:09 AM GMT)

மனிதன் தனித்து இருக்கும் போது, அவனுக்கு நல்ல சிந்தனைகளும் தோன்றலாம்; கெட்ட சிந்தனைகளும் தோன்றலாம். இது இயற்கையாக மனிதனுக்குள் எழக்கூடியது தான்.

மனதை கட்டுப்படுத்த முடியாதவன், சிந்தனையிலேயே தன் வாழ்க்கையை கழித்து விடுகிறான். ஒரு வித ஏக்கம், மனத்தாங்கல், பிரச்சினைகள், தாழ்வு மனப்பான்மை போன்றவை அவன் மனதில் அலைபாயும் போது, அதை தவிர்க்க முடியாத நிலையில் சில தவறான வழிகளையும் பின்பற்றுகிறான்.

ஒருவர் ஜாதகத்தில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள், லக்னத்தில் இருந்தால் அவர் அதிக சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட நபர், ஒரு கட்டத்தில் நிலைமைகளை சமாளிக்க தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவதற்காக வாய்ப்பும் அதிகம் உண்டு. பொதுவாக ஜாதகத்தில் திருமண வீட்டில், அதாவது ஏழாமிடத்தில் சந்திரன், சுக்ரன் அமைந்திருக்க, அந்த கிரகங்களை சனி பார்வை செய்தால், அந்த ஜாதகருக்கு வெகு காலமாக திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். பொதுவாக ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை சகஜமாக இருக்கிறது. இதனால் அந்த ஜாதகர் ஒரு வித விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். சில சமயம் தற்கொலை செய்து கொள்ளக் கூட மனம் தூண்டும். இப்படிப்பட்ட ஜாதகர்களின் பெற்றோர், சிறுவயதிலேயே அவர்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றை களைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் 5 கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் எவ்விதத்திலும் காலம் கடத்தாமல் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் அந்த ஜாதகரின் மனநிலையை அறிந்து அவரது மனதில் இருக்கும் ஏக்கங்களை கண்டறிந்து போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக 5 கிரகங்கள் லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகர் துறவறம் மேற்கொள்வார் என்று ஜோதிடம் சொல்கிறது.

இனி கைரேகைப்படி துறவு வாழ்க்கை யாருக்கு அமையும் என்பதைப் பார்க்கலாம். ஒருவரது குடும்ப வாழ்க்கையை கெடுத்து துறவு மேற்கொள்ளச் செய்ய, சில ரேகைகள் முற்படுகின்றன. உதாரணமாக திருமண ரேகை, இருதய ரேகைக்கு மேல் பக்கம் குறுக்காக அமைந்திருக்கும். ஆனால் இந்தத் திருமண ரேகை, இருதய ரேகைக்கு அடியில் குறுக்காக சென்றிருந்தால், அந்த நபருக்கு திருமணம் செய்யும் யோகம் இல்லை. அதுபோல் அந்த நபரின் கையில் இரண்டு இருதய ரேகை அமைந்திருந்தால், அவருக்கு மிகவும் தாமதமாக திருமணம் நடைபெறும் அறிகுறியைச் சொல்வதாகும். அந்த நபர் ஒருவித விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மனதில் இருப்பதை கண்டுபிடிக்க இயலாது. அவர் எப்போதும் தனிமையையே விரும்புவார். இவர்களே பின்னாளில் துறவறம் மேற்கொள்ளவும் வாய்ப்புண்டு.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story