புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 7:26 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் அழகிரிநாதர் என்றழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று அழகிரிநாதர்-சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், கோவிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் பட்டை கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் துளசி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானபட்டியில் சீனிவாச பெருமாள் கருடாழ்வாருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சுவாமி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. பெரமனூர் வெங்கடேசபெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். குரங்குச்சாவடி கூசமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் மலைப்பாதையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நெத்திமேடு கரியபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், பேர்லண்ட்ஸ் வேங்கடாஜலபதி கோவில் உள்பட பல பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.

Next Story