அல்லாஹ்வின் வல்லமையைச் சொல்லும் வரலாறு


அல்லாஹ்வின் வல்லமையைச் சொல்லும் வரலாறு
x
தினத்தந்தி 30 Oct 2018 9:39 AM GMT (Updated: 30 Oct 2018 9:39 AM GMT)

எகிப்து நாட்டை கொடுங்கோலன் பிர்அவுன் ஆட்சி செய்த காலம் அது. அவன் ஆட்சியின் கீழ் மக்கள் மிகவும் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

ஒரு நாள் பிர்அவுன் கனவு ஒன்றை கண்டான். கிழக்குத் திசையில் இருந்து ஒரு ஒளி வந்து எகிப்து அரச வம்சத்தை எரித்து நாசமாக்குவது போலவும், அங்கு அடிமையாய் வாழும் இஸ்ரவேலர்களை அந்த ஒளி காப்பது போலவும் அந்த கனவு அமைந்திருந்தது.

மறுநாள் சபையைக்கூட்டி மந்திரிகளிடம் அந்த கனவிற்கான விளக்கத்தைக் கேட்டான்.

“இஸ்ரவேலர் சந்ததியில் இருந்து ஒரு ஆண் மகன் பிறப்பான். அவனால் உனக்கும் இந்த நாட்டிற்கும் பெரும் அழிவு ஏற்படும், இதுதான் இந்த கனவின் விளக்கம்” என்று மந்திரி ஒருவர் கூறினார்.

“இதனை தடுக்க ஏதாவது வழி உள்ளதா?” என்று பிர்அவுன் கேட்டான்.

“ஆம்! இதற்கு ஒரு வழி இருக்கிறது. இஸ்ரவேலர் சந்ததிகளிலிருந்து தான் ஆபத்து வர இருக்கிறது. எனவே இனிமேல் அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொல்ல வேண்டும். இதனால், எந்த குழந்தையால் உனக்கு ஆபத்து ஏற்படுமோ அந்த குழந்தையும் கூட்டத்தில் ஒன்றாய் அழிந்து விடும்” என்று பதில் அளித்தனர்.

பிர்அவுனுக்கு அந்த யோசனை சரியாகப்படவே, உடனே அதனை அமுல்படுத்த ஆணையிட்டான். அதனை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:

“நிச்சயமாக பிர்அவுன் பூமியில் மிகவும் பெருமை கொண்டு அதில் உள்ளவர்களைப் பல வகுப்புகளாய் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு, அவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே இவ்வாறு விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்” (திருக்குர்ஆன் 28:4).

ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. இஸ்ரவேலர் சந்ததியில் இருந்தே மூஸா நபிகளை பிறக்கச் செய்தான். மூஸாவின் தாயார் இறைவனிடம் முறையிட்ட போது, “பெண்ணே நீ கலங்காதே. என்னுடைய கட்டளைப்படி பிறந்த அந்த மகவை ஒரு பேழையில் இட்டு மூடி இந்த நைல் நதியில் விட்டு விடு. அதை நான் எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடுவேன். அதுமட்டுமல்ல உன் கண் குளிர்ச்சி பெறும் பொருட்டு உன்னிடமே அந்த குழந்தை பால் அருந்த வரும். நீ தாயாய் இல்லாமல் செவிலித் தாயாய் மூஸாவை வளர்க்கலாம்” என்று உள்ளுணர்வின் மூலமாக உணர்த்தினான்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி அன்னையும் தன் மகனை பேழையில் வைத்து நதியில் விட்டு விட்டாள். மூஸாவின் சகோதரியை அந்த பேழையைத் தொடர்ந்து சென்று என்ன நடக்கிறது என்பதை அறிந்து வரச்செய்தாள்.

பேழையும் மிதந்து சென்று அரசியர் குளிக்கும் அந்தப்புரத்திற்கு சென்றது. அரசி ஆஷியா பேழையைப் பிடித்து அதனைத் திறந்து பார்க்க, அங்கே அழகிய ஆண் குழந்தையை கண்டார். பிள்ளைப்பேறு அற்ற அந்த அரசியின் நெஞ்சில் இரக்கம் சுரந்தது. அரசியே அறியாமல் அந்த குழந்தை மீது அன்பும் பாசமும் பிறீட்டு எழுந்தது. அதுவும் அல்லாஹ்வின் ஏற்பாடு தான். குழந்தையை வாரி அணைத்த அரசி, தன் கணவன் பிர்அவுனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்.

ஆனால், பிர்அவுன், ‘இது இஸ்ரவேலர்களின் குழந்தையாக இருக்கலாம். ஒரு வேளை இதன் மூலமே எனக்கு துன்பம் வரலாம். எனவே எனது ஆணைப்படி இதனை கொன்று விடுங்கள்’ என்றான்.

அரசி ஆஷியா கெஞ்சினார், “இது பச்சிளம் குழந்தை. இதற்கு எங்கே துரோகம் செய்யும் எண்ணம் இருக்கும். இதனை நாம் தத்து எடுத்து வளர்த்து வந்தால் நம் அரவணைப்பிலும், அன்பிலும் நம்மிடம் பாசத்தோடு இருக்குமே ஒழிய நமக்கு பாதகத்தை ஏற்படுத்தாது. அதுமட்டுமல்ல நம் கண்காணிப்பில் வளர்வதால் அது நமக்கு கண் குளிர்ச்சியாகவும் அமையலாம்” என்றார்கள்.

உடனே பிர்அவுன் “உனக்கு வேண்டுமானால் அது கண் குளிர்ச்சி தரலாம். எனக்கு அது தேவையில்லை. என் உயிருக்கு ஆபத்து தரும் எந்த குழந்தையையும் நான் கொல்லாமல் விடப் போவதில்லை” என்றான்.

அரசி ஆஷியா கெஞ்சிக்கூத்தாடி பிர்அவுனிடம் அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கச் செய்தார். அதனை திருக்குர்ஆன் (28:9) இவ்வாறு விவரிக்கின்றது:

“அக்குழந்தையைக் கண்ட பிர்அவுனின் மனைவி தன் கணவனை நோக்கி, ‘நீ இதை கொலை செய்து விடாதே. எனக்கும் உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் நாம் நன்மை அடையலாம். அல்லது இதனை நாம் நம் குழந்தையாக தத்தெடுத்து கொள்ளலாம்’ என்று கூறினாள்”.

அந்த காலத்தில் செவிலித்தாய் மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டப்பட்டது. ஆனால், குழந்தையாக இருந்த மூஸா நபிகள் எந்த செவிலித்தாயிடமும் பாலருந்த மறுத்து விட்டார்.

இதனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த மூஸாவின் சகோதரி, அரசியிடம் சென்று, “இந்த குழந்தைக்கு பாலூட்டும் இன்னுமொரு செவிலித்தாயை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா?” என்று கேட்டார். அனுமதி கிடைக்கவே மூஸா நபியின் தாயையே அழைத்து வந்தார். மூஸா நபிகளும் தன் தாயிடம் பாலருந்தினார்கள். ஏற்கனவே மூஸாவின் தாயாருக்கு அளித்த உறுதியை இதன் மூலம் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இதை திருக்குர்ஆன் (28:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை, அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் (இதை) அறிய மாட்டார்கள்”.

மூஸா நபிகள் எங்கு வளர வேண்டும்?, யாரிடம் வளர வேண்டும்? என்ற அல்லாஹ்வின் திட்டப்படி எல்லாமே மிகச்சரியாக நிறைவேறியது.

மூஸா நபிகள் அரண்மனையில் வாழ்ந்து வரும் காலத்தில் ஒரு நாள் பிர்அவுன் தாடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள்.

இதில் பிர்அவுன் நிலைகுலைந்து போனான். அந்த அடியின் அழுத்தம் குழந்தையின் செல்ல அடியாகத் தெரியவில்லை. மாறாக அவனிடம் ஒரு அதிர்வையே ஏற்படுத்தியது.

உடனே அரசியாரை அழைத்து, “இது குழந்தையாய் தெரியவில்லை. என்னைக் கொல்ல வந்த எதிரியாய் நினைக்கிறேன். என்னையே அடிக்கும் அளவிற்கு துணிவு எங்கிருந்து இதற்கு வந்தது?” என்றான்.

‘இது குழந்தை, அதற்கு அரசர் என்றும் பிறர் என்றும் என்ன தெரியும். குழந்தை எதுவும் அறியாதது’ என்று அரசி கூறினார்.

“அப்படியானால் அதனை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றான் பிர்அவுன்.

குழந்தையை சோதித்து பார்க்க ஒரு கண்ணாடி குவளையில் சிவந்த நிறம் கொண்ட பளிச்சிடும் மாணிக்கங்களையும், இன்னொரு பேழையில் சிவந்த தீக்கங்குகளையும் வைத்து அதனிடம் குழந்தையை அனுப்பினர். இறைவனின் திட்டப்படி குழந்தை மூஸா நெருப்பை எடுத்து வாயில் போட்டுக்கொண்டது.

தீயின் வேதனையால் கதறி அழுத குழந்தையைத் தூக்கிய அரசியார் “பார்த்தீர்களா, குழந்தைக்கு மாணிக்கம் எது? நெருப்பு எது? என்றே தெரியவில்லை. உங்களை அரசர் என்று எப்படி அது அறியும்?” என்றார். அந்த பதிலால் ஏதோ அந்த சந்தர்ப்பத்தில் சமாதானம் ஆனானே தவிர பிர்அவுன் முழுமையாக திருப்தி அடையவில்லை.

இதிலிருந்து அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன். எதிரியிடமே மூஸாவை வளரச் செய்து அவர்கள் மூலமாக பிர்அவுனை அழித்தான். இந்த வரலாறு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

Next Story