தேவனே உங்களுக்கு அடைக்கலம்
‘உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்ல வருடைய நிழலில் தங்குவான். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்’. சங்கீதம் 91:14
எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன். இப்பூமியிலே நீங்கள் பலவிதமான போராட்டங்களையும், உபத்திரவங்களையும் மற்றும் பாடுகளையும் அனுபவிக்கும்போது ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்.
நம்முடைய அருமை ஆண்டவருடைய மறைவிடமும், சர்வ வல்லவருடைய நிழலும் உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்து போகாதீர்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு அடைக்கலமாக இருக்கிற ஆண்டவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அவருடைய சிறகுகளால் உங்களை மூடி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் தருவார்.
ஆகவே, உலக மனிதர்களையோ, பணத்தையோ, ஞானத்தையோ நீங்கள் சார்ந்து கொள்ளாமல் உன்னதமானவருடைய மறைவுக்கு ஓடி வாருங்கள். அதனால் நீங்கள் பெறுகிற ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஜெபத்துடன் வாசித்து, தேவனைத் துதியுங்கள்.
வழிநடத்துவார்
‘கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்து கொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை’. உபாகமம் 32:11,12
எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளையே, நம் அருமை ஆண்ட வருடைய செட்டையின் நிழலுக்குள் நீங்கள் வரும்போது அவர் உங்களை ஆச்சரியமான விதத்தில் நடத்துவார். என்றைக்கு நீங்கள் உன்னதமானவருடைய மறைவுக்கும் அவருடைய நிழலுக்கும் ஒதுங்கி அடைக்கலத்திற்காக அவரிடத்தில் வருகிறீர்களோ ஆச்சரியமாக அவர் உங்களை நடத்துவார். அவருடைய நடத்துதல் உங்களுக்கே அதிசயமாய் இருக்கும்.
கழுகு தன் செட்டைகளை விரித்து தன் குஞ்சுகளை சுமந்து கொண்டு போவதுபோல கர்த்தர் உங்களை சுமந்துகொண்டு வழிநடத்துவார்.
வேதாகமத்தில் உள்ள தேவ பிள்ளைகளை, நம் அருமை ஆண்டவர் நடத்தி வந்த அனைத்துப் பாதைகளும் ஆச்சரியமானவைகள். அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் அருமை ஆண்டவர் நடத்தி வந்த விதத்தைக் குறித்து இவ்விதமாய் நாம் வாசிக்கிறோம்.
‘அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக் கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்னி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை’. யாத்திராகமம் 13:21,22
ஆம், அன்றைக்கு தேவபிள்ளைகளை வழிநடத்தின கர்த்தர் உங்களையும் வழிநடத்த வல்லவராயிருக்கிறார். அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் கிருபையாக உங்களுக்காக திறப்பார். வனாந்தரத்தில் உங்களுக்காக வழியை உண்டாக்குவார். அவருடைய நடத்துதல் மிகவும் ஆசீர்வாதமானது. இன்றே அவருடைய செட்டையின் மறைவுக்குள் ஓடிவாருங்கள்.
பலன் தருவார்
‘உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்’. ரூத் 2:12
அருமையானவர்களே, உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய செட்டையின் கீழ் வருகிற ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைக்கும் அவர் கொடுக்கிற ஆசீர்வாதம் விலையேறப்பெற்றது.
அன்றைக்கு ரூத்தைப் பார்த்து போவாஸ் கூறின வார்த்தைதான் இன்று நான் உங்களுக்காக குறிப்பிட்டிருக்கிறேன்.
கர்த்தரை நம்பி அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய் வருகிறவர்களுக்கு வேதம் கூறுகிறது, கர்த்தாலே நிறைவான பலன் கிடைக்கும்.
நீங்கள் வேண்டி விரும்புகிற ஆசீர்வாதங்கள் எதுவானாலும் பெற்றுக்கொள்ள வீணாய் நேரத்தை கழித்து உலக மனிதர்களையோ சூழ்நிலையையோ சாராமல் கர்த்தருடைய செட்டைக்குள்ளே ஓடி வாருங்கள். நீங்கள் காண்பது நிறைவான பலன் ஆகும்.
கடந்த நாட்களில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் நிறைவை காணாமல் எல்லாவிதத்திலும் குறைவை அனுபவித்து வந்தீர்கள் என்றால், உன்னதமானவருடைய மறைவுக்கு வந்து விடுங்கள். அவருடைய செட்டையின் நிழலுக்கு வந்து விடுங்கள். அந்த அடைக்கலத்திற்குள் நீங்கள் வரும்போது நீங்கள் எதிர்பார்த்த பலனைவிட மிகவும் அதிகமான நிறைவான பலனை நிச்சயம் காண்பீர்கள்.
அவருடைய மறைவுக்குள், நிழலுக்குள் வருவது என்றால் அவரையே சார்ந்து கொள்வது ஆகும். நிச்சயம் நிறைவான பலனால் கர்த்தர் உங்களைத் திருப்தியாக்குவார்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
Related Tags :
Next Story