ஆன்மிகம்

சஞ்சலம் போக்கும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் + "||" + Vallikandapuram valeswarar

சஞ்சலம் போக்கும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர்

சஞ்சலம் போக்கும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர்
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது.
பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பல்வேறு சரித்திர சிறப்புக்களை பெற்றுள்ள இந்தக் கோவில், சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இந்தக் கோவில் கிருதயுகம், பிரம்மபுரீஸ்வரர், பிரகன்நாயகி ஆகிய திருநாமப் பெயர்களை கொண்டதாகவும், திரேதாயுகத்தில் இந்திரன் அம்சமான வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாகவும் திகழ்ந்துள்ளது.

‘திருவாலீஸ்வரத்து மகாதேவர், திருவாலீஸ்வரத்து பெருமாள், திருவாலீஸ்வரத்து ஆழ்வார், திருவாலீஸ்வரத்து பரமேஸ்வரர், திருவாலீஸ்வரமுடைய நாயனார், திருவாலிநாதர், திருவாலீஸ்வரமுடைய தம்பிரான், ஸ்ரீவாலிநாயகர், வாலீஸ்வர சுவாமி’ என்பது இறைவனின் திருப்பெயர்கள்.

சங்க காலத்தில் ஏறத்தாழ கி.பி. 910-ம் ஆண்டில் கண்டீரக்கோ என்ற மன்னர் ஆட்சி புரிந்ததால் ‘கண்டீரபுரம்’ எனப்பெயர் பெற்று வாலியுடன் தொடர்பு கொண்டு மருவி வாலிகண்டபுரம் ஆனதாக இந்த ஆலய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன.

இந்த ஆலயம் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோவில் தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும். தல விருட்சம் மாவிலிங்கை மரம். இந்த ஆலத்தில் உள்ள இறைவனை அருணகிரி நாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 229 தலங்களை குறிப்பிட்டு பதிகங்களை பாடியுள்ளார்.

பிரதோஷ காலத்தில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரரை வழிபட்டால், சங்கடங்கள் விலகி மனதிற்கு வலிமை சேர்க்கும் என்பது ஐதீகம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோவில் இந்திய தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபம் மற்றும் அவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி எதிர்படுகிறது. கட்டிடக்கலையின் அறிவியல் படி ராஜகோபுரத்திற்கு சற்று தாழ்நிலையில் கோவில் கருவறைகள் அமைக்கப்படுவது பெரும்பாலான கோவில் கட்டிடக்கலையின் நுணுக்கம் ஆகும். அதுபோல வாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்திற்கு தாழ்வான நிலையில் கோவில் கருவறை மற்றும் இதர சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலதுபக்கம் அழகுற வடிவமைக்கப்பட்ட ஒரு குளம் உள்ளது. மன்னர் வந்தால் நீராடி இறைவனை வழிபடுவதற்காக 1761-ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் இக்குளமும், தர்பார் மண்டபமும் கேரள கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது.

கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் வாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வாலாம்பிகை சன்னிதியின் எதிரே உள்ள பகுதியில், சிதைந்துபோன நிலையில் சில சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்கள் வாலிகண்டபுரத்தை மையமாக வைத்து போர்புரிவதற்காக ரஞ்சன்குடியில் கோட்டையை எழுப்பினர். அப்போது வாலீஸ்வரர் கோவிலில் இருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

வாலாம்பிகை சன்னிதியை கடந்து உள்ளே சென்றால், வாலீஸ்வரர் கருவறை உள்ளது. இதில் லிங்க வடிவில் வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். வாலீஸ்வரர் கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில் வடக்கு நோக்கி தண்டத்துடன் காட்சி அளிக்கும் சுமார் 9 அடி உயர தண்டாயுதபாணி சிலை உள்ளது. அதற்கு எதிரே ஒரு லிங்கத்தில் 1008 லிங்கம் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத் தலைவனான வாலி, ஈஸ்வரனை வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்று பெயர் பெற்றுள்ளதாக இத்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் உள்ள தண்டபாணிக்கு, கிருத்திகை விழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவும், திருக்கார்த்திகை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1996-ல் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. தற்போது கோவில் உள்பிரகார புணரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன.

இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.

ஆர்.குருராஜ்