வினை தீர்க்கும் விநாயகர்


வினை தீர்க்கும் விநாயகர்
x
தினத்தந்தி 30 Oct 2018 10:22 AM GMT (Updated: 30 Oct 2018 10:22 AM GMT)

திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.

ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

திருவாரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூர் இருக்கிறது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மரத்துறை என்ற கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நமது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல், விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர், தன் ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால், விநாயகர் சிலை போலவே தெரியும்.

விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை, தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள், எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று, 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பிற தெய்வங்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முதன்மைக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

திண்டுக்கல் கோபால சமுத்திர குளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

‘ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பது தான் சட்டாட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகரைத் தான் அவர் வணங்கியதாக கூறப்படுகிறது.

புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள், அங்குள்ள அனைத்து விதமான ஆலயங்களிலும் வழிபட்டு விட்டு, சடங்குகளை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் முன்பாக, சிறிய ஆலயத்தில் வீற்றிருக்கும் டுண்டி ராஜ கணபதியை வணங்கினால்தான் யாத்திரை முழுமை பெறும்.

Next Story