ஆன்மிகம்

பாவங்களை போக்கும் தொழுகை + "||" + Prayer for sins

பாவங்களை போக்கும் தொழுகை

பாவங்களை போக்கும் தொழுகை
‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை’. (திருக்குர்ஆன் 11:114)
தினமும் ஐந்துவேளைத் தொழுகைகள் உண்டு என்பதை இந்த இறை வசனம் சுட்டிக் காட்டுகிறது. பகலின் இரு ஓரங்கள் என்பது லுஹர், அஸர் ஆகிய இருவேளைத் தொழுகைகளை குறிக்கிறது. இரவின் பகுதிகள் என்பது மக்ரிப், இஷா, சுபுஹ் ஆகிய மூன்று நேரத் தொழுகைகளை குறிக்கிறது.

தொழுதால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஒருபக்கம். தொழுது வருவதால் சிறுசிறு பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது அதன் மறுபக்கம் ஆகும்.

‘ஐவேளைத் தொழுகைகள், ஜூம்ஆத் தொழுகை அடுத்த வார ஜூம்ஆத் தொழுகை வரை... ரமலான் நோன்பு அடுத்த ஆண்டு ரமலான் நோன்பு வரை, இவை இடையில் ஏற்படும் சிறுபாவங்களுக்கு பரிகாரமாக அமைந்து விடும். பெரும்பாவங்களை தவிர்ந்திருக்க வேண்டும் என நபிகள் (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்)

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒருநாள் ஓரிடத்திற்கு வந்து அமர்ந்தார்கள். அவருடன் சில மக்களும் அமர்ந்தனர். அவர்களிடம் தொழுகைக்கு அழைப்பு கொடுக்கும் (பாங்கொலி) நபரும் வந்தார். அவரிடம் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவரும்படி உஸ்மான் (ரலி) வேண்டினார்கள். பிறகு, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். ‘நான் உளூ (அங்கசுத்தி) செய்தது போன்றே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள். பிறகு எவர் நான் உளூ செய்தது போன்று உளூ செய்து, பிறகு எழுந்து லுஹர் (முற்பகல்) தொழுகையைத் தொழு கிறாரோ, சுபுஹ் (அதிகாலை) தொழுகைக்கும், லுஹர் தொழுகைக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அஸர் (மாலை நேரத்) தொழுகையை நிறைவேற்று கிறாரோ, அவருக்கு அஸருக்கும் லுஹருக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அவர் மக்ரிப் (சூரியன் மறையும் நேரத்) தொழுகையை தொழுதால், இதற்கும் அஸருக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு இஷா (இரவு நேர)த் தொழுகையை தொழுதால், இதற்கும் மக்ரிபுக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அவர் இந்த நிலையிலேயே இரவில் நன்றாகத் தூங்கி, பிறகு எழுந்து உளூ செய்து, சுபுஹ் தொழுதால், இதற்கும் இஷாவுக்கும் இடையே நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். இந்தத் தொழுகைகள் யாவும் நன்மையான காரியங்கள் ஆகும். நன்மைகள், பாவங்களை போக்கிவிடும் என்று கூறினார்கள்’. (நூல்:அஹ்மது)

‘உங்களில் ஒருவரின் வாசலுக்கு அருகே நீர் அதிகம் நிறைந்த ஆறு ஒன்று இருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை குளித்தால், அவரின் உடலில் அழுக்கு தேங்கி நிற்குமா? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்’ என நபி (ஸல்) கேட்டார்கள். ‘இறைவனின் தூதரே! அவ்வாறு இருக்காது’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ’இவ்வாறே ஐவேளைத் தொழுகைகளின் வாயிலாக பாவங்களையும், தவறுகளையும் இறைவன் அழித்துவிடுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)

பாவங்களை போக்கும் தன்மை ஐவேளைத் தொழுகைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து விதமான தொழுகைகளுக்கும் (அந்தத் தன்மை) உண்டு.

‘ஒவ்வொரு தொழுகையும் அதற்கு முன்பு ஏற்படும் தவறுகளை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி), நூல் : அஹ்மது)

அபூ உஸ்மான் (ரஹ்) கூறுவதாவது:-

‘நான் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்தேன். அவர்கள் அந்த மரத்தின் காய்ந்து போன ஒரு கிளையை பிடித்து குலுக்கினார்கள். அதிலிருந்து இலைகள் உதிர ஆரம்பித்தன. பிறகு அவர்கள் ‘அபூ உஸ்மானே! நான் ஏன் இவ்வாறு செய்தேன்? என நீர் கேட்கவில்லையே’ என்றார்கள். பிறகு இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள். மேலும், ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கசுத்தி செய்து, பிறகு ஐவேளைத் தொழுகைகளையும் நிறைவேற்றினால், இந்த இலைகள் உதிர்வது போன்று அவரின் பாவங்களும் உதிர்ந்து விடும் என்று கூறிவிட்டு, திருக்குர்ஆனின் 11:114 வது வசனத்தை ஓதிக்காட்டினார்கள்’, என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) தெரிவித்தார்கள். (நூல் : புகாரி)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிய தாவது:-

‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். இதோ நான் இங்கு தயாராக நிற்கிறேன். என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்’ என்று கூறினார். அவரிடம் உமர் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக்கூடாதா?’ என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து வர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம் ‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்’ எனும் இறைவசனத்தை (திருக்குர்ஆன் 11:114) ஓதிக்காட்டினார்கள்.

அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? அல்லது அனைவருக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்’ என்று பதில் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

தொழுவது நன்மையான காரியம். அது நன்மையான காரியங்களில் சிறந்ததும் ஆகும். ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழும் போது நம்மிடம் ஏற்படும் சிறுபாவங்களும், சிறு தவறுகளும் போக்கப்பட்டு, பாவஅழுக்கிலிருந்து விடுதலையும் கிடைத்து விடுகிறது.

நிகழ்ந்துவிட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதற்கும் ஒரே வழி தொழுகைதான். இதுகுறித்து இறைவசனம் கூறுவது மிகப்பொருத்தமாக அமைகிறது. ‘தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)

தொழுகையாளிகள் பெரும்பாலும் பாவமான காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. ஒரு வேளை சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக ஏதேனும் சிறிய பாவம் நிகழ்ந்தாலும் அதற்குப்பிறகு நிறைவேற்றப்படும் தொழுகையின் காரணமாக அது மன்னிக்கப்பட்டு, அது முற்றிலும் போக்கப்படும். உண்மையான தொழுகை பாவத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். பாவங்களை போக்கும் தொழுகைகளை பேணுதலாகத் தொழுது வருவோம்!

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.