உறுதியான இறைநம்பிக்கை


உறுதியான இறைநம்பிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2018 11:05 AM GMT (Updated: 13 Nov 2018 11:05 AM GMT)

இஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.

ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸிர் (ரலி). அவர் தன் சொந்த நாட்டை விட்டு வந்து மக்காவில் குடியேறினார். அக்கால கட்டத்தில் குரைஷி குலத்தலைவர்களின் முக்கியமானவரான அபூஹுதைபா அல்மக்ஸுமி என்பவரிடம் அடைக்கலம் பெற்று மக்காவில் தங்கினார்.

அவருடைய நன்னடத்தையால் கவரப்பட்ட அபூஹுதைபா, தன் ஆளுமையின் கீழிருந்த அடிமைப்பெண்களில் ஒருவரான சுமையா என்பவரை யாஸிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வந்த தம்பதியருக்கு அம்மார் (ரலி) தவப்புதல்வராய் பிறந்தார்.

இவர்கள் மூவரும் அண்ணல் நபிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக்கொள்கையை ஏற்றனர். அல்லாஹ் ஒருவனே இறைவன், அவனது தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) என்பதை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வழியில் வாழ்ந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமையா (ரலி) ஆவார்.

ஏக இறைவனை ஈமான் கொண்டதால் அரேபிய குரைஷியர்களால் யாஸிர் (ரலி), சுமையா (ரலி) இருவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.

தனது பெற்றோரின் ஈமானில் எள்ளளவும் குறையாத உறுதி மிக்கவராக அம்மார் (ரலி) திகழ்ந்தார். இந்த உறுதியை குலைக்க குரைஷியர்கள் முயன்றனர். கடும் தண்டனைகளும், சித்ரவதைகளும் செய்து அம்மார் (ரலி) அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். அம்மார் (ரலி) அவர்களைத் தீயிலிட்டு பொசுக்கினார்கள். தீயின் கங்குகளால் உடலை சூடு வைத்து கதற வைத்தனர்.

ஒரு முறை அண்ணலார் (ஸல்) அவர்கள் அவ்வழியே செல்லும் சந்தர்ப்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் படும் வேதனையை சகிக்க முடியாதவர் களாக அவர்கள் தலையை கோதி விட்டவர்களாக, “ஏ! அக்னியே அம்மாரை எரித்து விடாதே, இப்ராகிம் நபிகளுக்கு இறைவன் கட்டளைப்படி நிம்மதியூட்டும் குளிர்ச்சியாக மாறியது போல், அம்மாருக்கும் குளுமையையும் சுகத்தையும் கொடுத்து விடு” என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

ஒரு நாள் குரைஷியர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அம்மார் (ரலி) முதுகு முழுவதும் பயங்கரமாய் சூடு போட்டனர். ரண களமான முதுகை கொதிக்கும் பாலைவன மணலில் கிடத்தி வேதனையை அதி கரிக்கச் செய்தனர். அதோடு, முதுகை உயர்த்தி விடாமல் இருப்பதற்காக சுடுகின்ற பாறை கற்களை அம்மார் (ரலி) நெஞ்சில் வைத்து சித்ரவதை செய்தனர்.

வேதனை தீரும் முன்பே அவர்களை எழுப்பி தலையை தண்ணீரில் அமுக்கி மூச்சு திணற திணற துடிதுடிக்கச் செய்தனர். அதன் பின் சவுக்கால் அடித்து துவைத்து கிட்டத்தட்ட மரணவாயிலின் அருகாமைக்கு கொண்டு சென்றனர்.

தலை முடியை பிடித்து இழுத்து இப்போதாவது, ஏக இறை கொள்கையை விட்டு விடு என்று துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து விட்ட நிலையில், உயிர் போய் விடுமோ என்று அஞ்சிய அம்மார் (ரலி) நிராகரிப்புச் சொற்களை வாயால் கூறினார்.

இதையடுத்து குரை ஷியர்கள் அவரை உயிரோடு விட்டனர்.

நிர்பந்தத்தின் காரணமாக இந்த செயலை அம்மார் (ரலி) செய்தார். ஆனால் அவரது இதயத்தில் எந்தவித இணை வைத்தல் வேறுபாடும் இல்லாமல் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண் டவராக இருந்தார்.

சிறிது நேரம் செல்ல, மெல்ல மெல்ல சுய நினைவு திரும்பி யவர்களாக, உடம்பில் சிறிது தெம்பு வந்ததும், தன்னிலைக் குறித்து மிகவும் வருந்தினார்கள்.

‘உயிரை துச்சமாக மதித்து, ஏக இறைவனுக்காக தங்களது உயிரையே கொடுத்த பெற்றோருக்கு பிறந்த நான், எனது உயிரைப் பெரிதாய் எண்ணி எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன்’ என்று மிகவும் வருந்தினார்.

இந்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா? என்று மனம் பதைபதைத்தவர் களாக அண்ணலாரிடம் ஓடோடி சென்று நடந்ததை ஒன்று விடாமல் விவரித்துச் சொன்னார்கள்.

அம்மார் (ரலி) அவர்களை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்ட அண்ணலார், ‘உயிர் இறைவன் அளித்த அமானிதம். அதனைக்காப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி தான். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இறைவன் விரைவில் உங்களுக்கு நிவாரணத்தை தருவான்’ என்றார்கள்.

அண்ணலாரின் கூற்றை ஆமோதிப்பது போல உடனே அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்தியும் இறங்கியது.

‘இதயம் இறை நம்பிக்கையால் முற்றிலும் வியாபித்திருக்க பிறரின் வற்புறுத்தலுக்கு பணிந்து, மனதில் திடத்தோடு ஆனால் வாயினால் இறை நிராகரிப்பு என்ற சொற்கள் வந்து விட்டால், அதனால் அவர் மீது குற்றமில்லை’. (திருக்குர்ஆன் 16:106)

கலவரச் சூழலில் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளத்து நம்பிக்கையில் சிறிதளவும் சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுவது குற்றமல்ல என்று இந்த வசனம் பேசுகிறது.

அண்ணலார் இந்த இறைச்செய்தியை அறிவித்ததும் அம்மார் (ரலி) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. தன்னை இறைவன் பொருந்திக் கொண்டான். தன் பொருட்டு இறைச்செய்தியை அறிவித்து விட்டான். இப்பெரும்பேறு யாருக்கு கிடைக்கும்? என்று மனம் மகிழ்ந்தார்கள்.

ஆனால் அதன் பின் எதிர்கொண்ட எத்தனையோ வேதனைகளை துச்சமாக மதித்தார்களே ஒழிய ஈமான் இழந்து வாய்மொழியில் கூட நிராகரிப்பை சொல்லவில்லை.

காலங்கள் கடந்தன. இஸ்லாமிய சுதந்திர காற்று மக்கா முழுவதும் வியாபிக்கத் தொடங்கியது. உமர் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாமியக் கொள்கைகள் மக்கா நகர் முழுவதும் வெளிப்படையாக உலா வரத் தொடங்கியது.

அண்ணலாருக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனா செல்ல வேண்டிய கட்டாயம். அம்மார் (ரலி) அவர்களும் மதீனாவில் குடியேறினார்கள்.

அதன் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தனை போர்களிலும் முன்னிலை வீரராக பங்கேற்று மிகவும் உக்கிரமுடன் போராடினார்கள் அம்மார் (ரலி).

இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி காலத்திலும் ‘யமாமா’, பாரசீக, ரோமபுரி வல்லரசுகளுடன் தொடுக்கப்பட்ட பெரும் போர்களிலும் அம்மார் (ரலி) அவர்கள் பங்கேற்றார். பெரும் வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் துணையாகவும் இருந்தார்.

ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.

யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி) ஆகிய மூவருமே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மக்கள். முதன்மையாக இஸ்லாத்தை ஏற்றதும், அவர்கள் செய்த தியாகங்களும் பின்னால் வந்து இணைந்து கொண்ட மற்ற சஹாபாக்களுக்கே ஒரு பாடமாக, ஓர் அற்புதமான அத்தாட்சியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

Next Story