காசியின் பலனைத் தரும் கல்பாத்தி


காசியின் பலனைத் தரும் கல்பாத்தி
x
தினத்தந்தி 13 Nov 2018 11:10 AM GMT (Updated: 13 Nov 2018 11:10 AM GMT)

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு

கேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.

வயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.

அவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

தான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.

பின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.

அரசரும் லட்சுமியம் மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங் களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக் காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என் பவரையும் நியமித்தார்.

லட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

தரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.

இறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.

இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.

இக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

இக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.

நாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.


பாணலிங்கம்

சிவலிங்க வழிபாட்டின் மகிமை, சிவபூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி, முனிவர் ஒருவர் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பாணாசுரன் என்ற அசுரன் அதைக் கேட்க நேரிட்டது. அதனைக் கேட்ட அசுரனுக்குத் தானும் சிவபூஜை செய்து, நல்ல பலன்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதனால் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

உடனே பாணாசுரன், “ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும்” என்று கேட்டான்.

சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார்.

அதன் பிறகு சிவபெருமான், தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன.

தேர்த் திருவிழா

கல்பாத்தி விசுவநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கடைசி மூன்று நாட்கள் தேர்த்திருவிழா நடக்கிறது. விசுவநாதர் மற்றும் விசாலாட்சி ஆகியோர் முதன்மைத் தேரிலும், விக்னேஸ்வரர் இரண்டாவது தேரிலும், சுப்பிரமணியர் மூன்றாவது தேரிலும் உலா வருகின்றனர். மேலும் புது கல்பாத்தியில் இருந்து கணபதி, பழைய கல்பாத்தியில் இருந்து கிருஷ்ணர், சாத்தபுரம் எனுமிடத்தில் இருந்து கணபதி ஆகியோருக்கு மூன்று தேர்களும் இந்தத் தேர் திருவிழாவில் பங்கேற்கும். பத்தாம் நாளில் ஆறு தேர்களும் விசுவநாதர் கோவிலின் எதிரே ஒன்றாக நிறுத்தப்படுகின்றன. இதனை இங்கிருப்பவர்கள், ‘தேவரத சங்கமம்’ என்கின்றனர்.

பாணலிங்கத்தின் சிறப்பு

பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, ‘பாணம்’ எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் கிடைக்கின்றன.

தேனி மு.சுப்பிரமணி

Next Story